ஜார்ச்டவுன் – பினாங்கு மாநில அரசு இளைஞர்களின் பங்களிப்பை மேம்படுத்தும் நோக்கத்தில்
வருடாந்திர நிதி ஒதுக்கீட்டாக ரிம210,000-ஐ தொடர்ந்து வழங்குகிறது.
மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ், பினாங்கு மாநில சட்டமன்றத்தில் வருடாந்திர மாநில வரவு செலவு திட்டத்தைத் தாக்கல் செய்யும் போது இதனை அறிவித்தார்.
“இந்த ஆண்டு மாநிலத்தில் இளைஞர் மேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகளைச் செயல்படுத்த இளைஞர் செயலவைக் குழுவிற்கு ரிம210,000 நிதி ஒதுக்கப்பட்டுள்ளது,” என்று பாடாங் கோத்தா மாநில சட்டமன்ற உறுப்பினருமான அவர் விளக்கமளித்தார்.
மாநில அரசாங்கம் பினாங்கு இளைஞர் மேம்பாட்டு வாரியம் மூலம் 2024-2028 இளைஞர் வியூக மேம்பாட்டுக் கட்டமைப்பு திட்டத்தைச் செயல்படுத்த ரிம700,000 நிதி ஒதுக்கீடு வழங்கி இளைஞர் திறன் மேம்பாடு மற்றும் சமூக பங்களிப்பை ஊக்குவிக்கிறது.
மேலும், 2025 ஆம் ஆண்டு தொடங்கி பினாங்கு மாநில விளையாட்டு மன்றம் (MSNPP) பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுடன் (SMEs) ஒருங்கிணைந்து கூட்டுறவு திட்டம் வாயிலாக விளையாட்டு வீரர்களின் சமூகநலன் மற்றும்
தேசிய மற்றும் அனைத்துலக
விளையாட்டுத் திறன் மேம்படுத்த துணைபுரிகிறது, என்று அவர் கூறினார்.
“2024 அக்டோபர் 2024, பல்வேறு நன்கொடையாளர்கள் மற்றும் தனிநபர்களிடமிருந்து நிதி, பொருட்கள் மற்றும் சேவைகள் வடிவில் பினாங்கு விளையாட்டு மன்றம் ரிம368,150 பெற்றுள்ளது,” என்று அவர் மேலும் விளக்கமளித்தார்.
அண்மையில் சரவாக் மாநிலத்தில் நடைபெற்ற 21வது மலேசியா விளையாட்டுப் போட்டியில் (சுக்மா) 41 தங்கப் பதக்கங்கள், 45 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 53 வெண்கலப் பதக்கங்கள் உட்பட 139 பதக்கங்களை வென்ற பினாங்குக் குழுவினரை கொன் இயோவ் பாராட்டுத் தெரிவித்தார்.
“இந்த வெற்றிக்குப் பாராட்டுத் தெரிவிக்கும் வகையில், தங்கப் பதக்கம் வென்றவரின் ஊக்கத் தொகையை ரிம4,000 லிருந்து ரிம6,000 ஆக அதாவது 50 விழுக்காடு அதிகரிக்க பினாங்கு மாநில அரசு ஒப்புக்கொண்டுள்ளது,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.