2030 ஆண்டிற்குள் 100% ரொக்கமற்ற பரிவர்த்தனையை அடைய இலக்கு

Admin

ஜார்ச்டவுன் – பினாங்கு மாநில அரசாங்கம் 2030 ஆம் ஆண்டிற்குள் 100% ரொக்கமற்ற பரிவர்த்தனையை அடைய இலக்கு கொண்டுள்ளது.

கடந்த ஆண்டு (2022) ஜனவரி முதல் டிசம்பர் வரை மேற்கொண்ட அனைத்து மாநில அரசின் வருவாய் வசூல் துறைகள் மற்றும் நிறுவனங்களும் ரொக்கமற்ற 2,110,566 பரிவர்த்தனைகளை வெற்றிகரமாகச் சேகரித்துள்ளன. இது மொத்த ரொக்கமற்ற பரிவர்த்தனைகளின் எண்ணிக்கையில் 71.99 விழுக்காடாகும். அதே சமயம் 2022ஆம் ஆண்டு முழுவதும் சேகரிக்கப்பட்ட வருவாயின் மதிப்பு ரிம620,157,685 ஆகும். இது மொத்த வருவாய் வசூல் மதிப்பில் 50.16%.

மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் இயோவ் பினாங்கு மாநில அரசு நிறுவனங்களுக்கான ரொக்கமற்ற பரிவர்த்தனை நாள் திட்டத்தின் அறிமுக விழாவை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்து இவ்வாறு கூறினார்.

இத்திட்டம் பினாங்கைச் சுற்றியுள்ள பிரதான சுற்றுலாத் தலங்கள்; ஊராட்சி மன்ற வியாபாரக் கடைகள் (சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் வணிக வளாகங்கள்); பாயான் லெப்பாஸ் மற்றும் பாயான் பாரு தொழில்துறை பகுதி பன்னாட்டு நிறுவனங்களில் செயல்படும் சிற்றுண்டிச்சாலைகள், கடைகள் ; மற்றும் கொம்தார் பகுதியைச் சுற்றியுள்ள வணிகங்களும் இதில் அடங்கும்.

இந்த மின்-கட்டணச் சேவையை செயல்படுத்துவதன் மூலம் மாநில அரசின் வருவாயை அதிகரிக்கப்பதோடு, ஒட்டுமொத்த பினாங்கு மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியும் மேம்பாடுக் காணும். கூடுதலாக, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பினாங்கு மாநிலத்தில் முதலீடுச் செய்யவும் வழிவகுக்கும்.

பினாங்கு மாநில அரசு, அதன் துறைகள் மற்றும் நிறுவனங்களுக்கான ரொக்கமற்ற பரிவர்த்தனை நாள் திட்டத்தை செயல்படுத்தும் நோக்கில் கடந்த 2022, டிசம்பர் முதல் 2023 பிப்ரவரி,28 (மூன்று மாதங்கள்) வரை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பொது மக்கள் மின் கட்டணம் சேவையை மட்டுமே பயன்படுத்த ஊக்குவிக்கப்படுகின்றனர்.

எனவே, அரசு அலுவலக கவுண்டர்களில் கட்டணம் செலுத்த விரும்பும் பொது மக்கள் ‘e-wallet’, ‘QR Code’, ‘online banking’, ‘smart kiosk’ மற்றும் மின் கட்டண போர்த்தல் (e-Bayar, Aspire, MBSPPay) சேவையைப் பயன்படுத்தி பணம் செலுத்த வேண்டும்.

மாநில அரசு நிறுவனங்கள் இடையில் ரொக்கமற்ற பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் நடத்தப்படும் போட்டிக்கு ‘PayNet’ நிறுவனம் ரிம500,000 மதிப்பிலான பரிசு மற்றும் ரொக்கப்பணம் வழங்க முன்வந்துள்ளது. இந்தப் போட்டி மூன்று பிரிவுகளாக நடத்தப்படுகிறது. வெற்றிப்பெறும் அரசு நிறுவனங்கள் ரிம300,000.00 ரொக்கப் பணம் பெற வாய்ப்பளிக்கப்படுகிறது.

“மொத்தம் 23 அரசு துறைகள் மற்றும் நிறுவனங்கள் இந்தப் போட்டியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுகிறது. அரசு துறைகள் மற்றும் நிறுவனங்கள் பெறப்படும் அதிக எண்ணிக்கையிலான மின்-கட்டணப் பரிவர்த்தனைகளின் பதிவு எண்ணிக்கையின் அடிப்படையில் வெற்றியாளர் தேர்ந்தெடுக்கப்படுவார். ” என்றார்.

முதல் பிரிவில், 2021 ஆம் ஆண்டில் மின்-கட்டணம் மூலம் 30,000 பரிவர்த்தனைகளுக்கு மேற்பட்ட மொத்தப் பரிவர்த்தனைகளைப் பதிவுச் செய்திருக்க வேண்டும். அதே நேரத்தில், இரண்டாவது பிரிவில் 1,000 முதல் 30,000 வரையிலான பரிவர்த்தனைகளின் எண்ணிக்கையை வெற்றிகரமாகச் சேகரிக்கும் துறைகள் பங்கேற்கலாம்.

மூன்றாவது பிரிவில் 2021 இல் 1,000 பரிவர்த்தனைகளுக்குக் குறையாமல் மொத்த பரிவர்த்தனைகளின் எண்ணிக்கையை மின்-கட்டணம் மூலம் வெற்றிகரமாகச் சேகரித்த துறைகள் பங்கேற்க முடியும்.