பினாங்கின் சுற்றுலாத் துறை அடுத்த சில ஆண்டுகளில் துரித வளர்ச்சி அடைய முனைப்பு – முதலமைச்சர்

img 20241228 wa0086

பாயான் லெப்பாஸ் – பினாங்கின் சுற்றுலாத் துறை அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு குறிப்பிடத்தக்க வளர்ச்சி அடையும் என்று மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ் தெரிவித்தார்.

img 20241228 wa0085

கோவிட் -19 தொற்றுநோய்க்குப் பிறகு மாநிலத்தின் துரித மீட்சியை எடுத்துக்காட்டிய சாவ், கொடிய தொற்றுநோய் உலகைத் தாக்கியதிலிருந்து பினாங்கு குறிப்பிடத்தக்க வகையில் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

“மாநிலத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகக் கருதப்படும் பினாங்கு கொடி மலையில், 2019 இல் பதிவு செய்யப்பட்ட சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கையை நாங்கள் கிட்டத்தட்ட மீட்டெடுத்துள்ளோம்.
img 20241228 wa0055

“மேலும், 2019 முதல் இன்று வரை பினாங்கில் ஏராளமான புதிய தங்கும்விடுதிகள் திறக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு மட்டும் வெளிநாடுகளில் உள்ள பிற நகரங்களில் இருந்து பல்வேறு நேரடி விமானங்கள் பினாங்கிற்கு தரை இறங்குவதைக் கண் கூடாகக் காண முடிகிறது.

“இந்த ஆண்டு சீனா மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கும் வழங்கப்பட்ட விசா விலக்கு, பயணிகள் பினாங்குக்கு வருகை அளிப்பதற்கும், அதேவேளையில், அந்நாடுகளுக்குச் செல்வதற்கும் ஊக்கமளிக்கிறது,” என்று சுங்கை நிபாங்கில் உள்ள ஐகானிக் மார்ஜோரி தங்கும்விடுதியின் திறப்பு விழாவில் கலந்து கொண்ட பின்னர் சாவ் செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார்.
img 20241228 wa0085

உணவுப் புகலிடத்திற்குப் பிரபலமான மாநிலம் என்பதால், சுற்றுலாப் பயணிகளின் முதன்மை தேர்வாக பினாங்கு திகழ்கிறது. இங்கு, சுற்றுலாப் பயணிகளுக்குப் போதுமான உணவகங்கள் கிடைப்பதால், உள்ளூர் உணவு வகைகளுக்கு ஏராளமான பயணிகள் ஈர்க்கப்படுவதாக சாவ் கூறினார்.

“அடுத்த ஆண்டு புதிய பினாங்கு வாட்டர்ஃபிரண்ட் மாநாடு மையம்(PWCC) திறப்பு விழா, மாநிலத்தில் நடைபெறும் கண்காட்சிகளை ஈர்க்கும் பிரதான தலமாக அமையும். எனவே, சுற்றுலாத் துறைக்கும் நன்மை பயக்கும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.
20241228 113825

புதிய தங்கும்விடுதியின் திறப்பு விழாவிற்கான வரவேற்பின் போது, ​​இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினருக்கும் சாவ் தனது நன்றியைத் தெரிவித்தார்.

“இந்த ஆண்டு பிப்ரவரியில், இம்மாநிலத்தின் அழகிய கர்னி பேக்கு எதிரே உள்ள பினாங்கு மேரியட் தங்கும்விடுதி திறப்பு விழாவில் கலந்து கொண்டேன். இன்று மற்றொரு புதிய தங்கும்விடுதி திறப்பு விழா மலேசியாவின் முதன்மை சுற்றுலா நுழைவாயிலாக பினாங்கின் நிலைப்பாட்டிற்கும், நமது சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் மேலாண்மை துறையின் உறுதியான வளர்ச்சிக்கும் சான்றாக இடம்பெறுகிறது.

“ஒவ்வொரு ஆண்டும், பினாங்கு மாநிலத்திற்கு உலகம் முழுவதிலுமிருந்தும் மில்லியன் கணக்கான சுற்றுலாப் பயணிகள் மட்டுமின்றி உள்நாட்டு பயணிகளையும் ஈர்க்கிறது. எங்களின் நாள்காட்டியில் பண்டிகை அல்லது பொது விடுமுறையைப் பார்க்கும் போதெல்லாம், பினாங்கு மாநிலம் கார்கள் மற்றும் சுற்றுலாப் பேருந்துகளால் நிறைந்திருக்கும்.
இந்த ஆண்டு, ஜனவரி முதல் அக்டோபர் வரை அனைத்துலக மற்றும் உள்நாட்டைச் சேர்ந்த சுமார் 6.18 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை வரவேற்றுள்ளது,” என்றார்.

பினாங்கு மாநில அரசு, பினாங்கில் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் எங்கள் முயற்சிகளில், பெருநிறுவனத் துறையுடன் ஒன்றுபட்டு செயல்படுகிறது.

புதிய தங்கும்விடுதியின் சுற்றுப்பயணத்தின் போது, இதன் புதிய மற்றும் நவீன வசதிகளால் முதலமைச்சர் ஈர்க்கப்பட்டார். மாநிலத்தில் உள்ள மற்ற தங்கும்விடுதிகளும் இந்த சாதனையைப் பின்பற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

பினாங்கு மேம்பாட்டுக் கழகம்(PDC) மற்றும் வடக்கு காரிடார் அமலாக்க ஆணையம் (NCIA)
போன்ற மாநில நிறுவனங்கள் சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் மேலாண்மை துறை வளர்ச்சியின் முன்முயற்சிக்கு ஊன்றுகோளாகச் செயல்படுகிறது.

சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறைகளின் வளர்ச்சியானது பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கான புதிய வாய்ப்புகளைத் திறக்கும். உதாரணமாக, இந்தத் தங்கும்விடுதி உள்ளூர் பொருளாதாரத்தில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இது பல்வேறு வேலை வாய்ப்புகளை வழங்குவதோடு, சுற்றியுள்ள சமூகத்தின் நல்வாழ்வையும் ஆதரிக்கிறது என தெரிவித்தார்.

ஐகானிக் மார்ஜோரி தங்கும்விடுதியின் குழுமத்தின் பொது மேலாளர் கெவின் சியா, இந்த தங்குவிடுதி எதிர்காலத்தில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் என்ற நம்பிக்கையில், இந்தத் திறப்பு விழாவுக்கு அயராது உழைத்த அனைத்து தரப்பினருக்கும் நன்றித் தெரிவித்தார்.

இந்த விழாவில், பினாங்கு மாநில சீன மக்கள் குடியரசின் கவுன்சில் ஜெனரல் சோ யூபின், சுங்கை புயூ சட்டமன்ற உறுப்பினர் பீ சின் ட்சே, முன்னாள் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ஸ்ரீ பீ பூன் போ, பினாங்கு மாநகர் கழக (எம்.பி.பி.பி) மேயர் டத்தோ இராஜேந்திரன், ஐகானிக் குழுமத் தலைவர் டத்தோ ஸ்ரீ தான் கீன் தெட், மற்றும் மேரியட் இன்டர்நேஷனல் துணைத் தலைவர் சொத்து மேலாண்மை இயோவ் சூ ஹின் ஆகியோர் கலந்து கொண்டனர்.