24 எம்.பி.எஸ்.பி கவுன்சிலர்கள் பதவிப் பிரமாணம்

Admin

 

செபராங் ஜெயா – 2023 ஆம் ஆண்டுக்கான செபராங் பிறை மாநகர் கழக (எம்.பி.எஸ்.பி) கவுன்சிலர்களாக 24 பேர்கள், அதில் ஒருவர் புதிய முகம் உட்பட மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் இயோவ் முன்னிலையில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.

இன்று நியமிக்கப்பட்ட அனைத்து கவுன்சிலர்களும் ஊராட்சி சட்டம் 1976 இன் பிரிவு 10 (1) கீழ் 2023 ஜனவரி, 1 முதல் ஆகஸ்ட் 31 வரை எட்டு மாத காலத்திற்குச் சேவையாற்றுவர்.

மேலும், இந்த நிகழ்ச்சியில் முதலாம் துணை முதல்வர் டத்தோ அமாட் சாக்கியுடின் அப்துல் ரஹ்மான்; உள்ளாட்சி மற்றும் நகர்ப்புற & கிராமப்புற மேம்பாட்டு ஆட்சிக்குழு உறுப்பினர், ஜெக்டிப் சிங் டியோ; பாகான் நாடாளுமன்ற உறுப்பினர், லிம் குவான் எங்; மாநில அரசு செயலாளர், டத்தோ முகமட் சயுதி பாகார்; எம்.பி.எஸ்.பி மேயர், டத்தோ அசார் அர்ஷாத்; ஆட்சிக்குழு உறுப்பினர்கள்; மாநில சட்டமன்ற உறுப்பினர்கள்; எம்.பி.எஸ்.பி மாநகர் செயலாளர், படேருல் அமீன் அப்துல் ஹமிட் மற்றும் பினாங்கு மாநகர் மேயர் டத்தோ இயூ துங் சியாங் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தனது உரையின் போது, ​​அனைத்து கவுன்சிலர்களும் மக்களுக்கும் மாநில அரசுக்கும் இடையே இணைப்பாளராகச் செயல்பட வேண்டும் என்று கொன் இயோவ் கேட்டுக் கொண்டார்.

“செபராங் பிறை சமூகத்திற்கு மிகவும் திறமையான, பயனுள்ள மற்றும் பயனடையக்கூடிய சேவைகளை வழங்குவதற்கு கவுன்சிலர்கள், மேயர் மற்றும் எம்.பி.எஸ்.பு ஊழியர்களுக்கு நெருக்கமான ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.

“இந்த பொறுப்பை ஏற்க நியமிக்கப்பட்ட அனைத்து கவுன்சிலர்களுக்கும் நல்வாழ்த்துக்கள்.

“செபராங் பிறை, பினாங்கு மாநிலத்தின் எதிர்கால வளர்ச்சியின் முன்னோடியாகும். மாநிலம் மற்றும் தேசிய ரீதியில் பினாங்கை ஒரு வளமான, இணக்கமான மற்றும் பசுமையான மாநிலமாக உருமாற்றம் காணும்,” என்று நம்புகிறேன்.

கொன் இயோவ் கூறுகையில், புலாவ் புரோங் கழிவு நிலத்தில் ஏற்பட்ட தீ விபத்தின் போது கடந்த ஆண்டு (2022) எம்.பி.எஸ்.பி- க்கு சவாலான ஆண்டாக இருந்தது, என்றார்.

“இருப்பினும், எம்.பி.எஸ்.பி இந்த சிக்கலை வெற்றிகரமாக சமாளித்து, அதனைத் தீர்ப்பதற்குப் பொருத்தமான முன்முயற்சியை எடுத்துள்ளது என்று நான் நினைக்கிறேன்.

“எனவே, அனைத்து எம்.பி.எஸ்.பி ஊழியர்கள் மற்றும் கவுன்சிலர்களின் அர்ப்பணிப்பு மற்றும் சிறந்த ஒத்துழைப்புக்காக எனது பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

“இந்த ஆண்டு புதிய உறுதியுடனும் உற்சாகத்துடனும், பினாங்கு2030 இலக்கை அடையும் உறுதிப்பாட்டிற்கு ஏற்ப மேலும் சிறப்புடன் சேவையாற்ற வேண்டும் என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், ஜெக்டிப் நியமிக்கப்பட்ட கவுன்சிலர்கள் எம்.பி.எஸ்.பி அடைந்த பல்வேறு வெற்றிகளில் திருப்தி அடைய வேண்டாம் என்றும் நினைவூட்டினார். ஏனெனில், இன்னும் பல பிரச்சனைகள் தீர்ப்பதில் கவனம் செலுத்தப்பட வேண்டும்.

“பினாங்கு மாநில கட்டமைப்புத் திட்டம் 2030 (RSNPP2030) மற்றும் பினாங்கு2030 உள்ளிட்ட பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்த கவுன்சிலர்கள் தங்கள் முழு ஈடுபாட்டை வழங்க வேண்டும்.

இதற்கிடையில், சிறந்த சேவையை வழங்குவதற்காக, குழு முறையில் வேலைச் செய்தல், செயல்திறன், புதுமை மற்றும் மக்களின் கருத்துக்களை உள்ளடக்கிய கலாச்சாரத்தை பராமரிக்க எம்.பி.எஸ்.பி இல் சிறந்த
சேவையாற்ற வேண்டும் என்று அசார் கேட்டுக் கொண்டார்.

“வெற்றிக்கரமான ஒன்றை அடைய பல்வேறு அம்சங்களில் இருந்து ஒருமித்த கருத்தைப் பெற ஆலோசிப்பது அல்லது விவாதிக்கும் நடைமுறை எப்போதும் செயல்பாட்டில் இருக்க வேண்டும்,” என்று அவர் மேலும் கூறினார்.

ஜனநாயக செயல் கட்சி (ஐ.செ.க) 10 உறுப்பினர்கள்; மக்கள் நீதிக் கட்சி, (பி.கே.ஆர்) (9), தேசிய அறக்கட்டளை, அமானா (2) மற்றும் அரசு சாரா அமைப்புகள், அரசு சாரா இயக்கங்கள்
(3) உறுப்பினர்கள் ஆகியவற்றிலிருந்து மொத்தம் 24 கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.