3,407 மூத்தக்குடிமக்களுக்கு குடியுரிமை வழங்கப்படுகிறது – பேராசிரியர்

Admin

ஜோர்ச்டவுன் – இந்நாட்டில் மலேசியர்கள் குறிப்பாக இந்தியர்கள் குடியுரிமை பிரச்சனைக்குத் தீர்வுக்காணும் நோக்கில் நம்பிக்கை கூட்டணி அரசு 60 வயதுக்கு மேற்பட்ட 3,407 மூத்தக்குடிமக்களுக்கு குடியுரிமை வழங்குவதாக அண்மையில் அறிவிக்கப்பட்டது என கொம்தாரில் நடைபெற்ற மாநில அரசின் மக்கள் சேவை விழாவில் கலந்து கொண்டு இவ்வாறு குறிப்பிட்டார் பினாங்கு மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி.

பினாங்கு மாநில கார்னிவலை தொடக்கி வைத்தார் இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி

14-ஆவது பொதுத் தேர்தல் கொள்கை அறிக்கையில் குடியுரிமை பிரச்சனைக்குத் தீர்வுக்காணப்படும் என்ற வாக்குறுதியை நம்பிக்கை கூட்டணி மெய்ப்பித்துள்ளது என அவர் தமதுரையில் குறிப்பிட்டார். அண்மையில் இந்திய நம்பிக்கை கூட்டணி அரசியல் தலைவர்கள் ஒன்றாக இணைந்து நம் நாட்டின் பிரதமர் துன் டாக்டர் மாகதீர் பின் முகமது உடனான சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தியதன் வெற்றியாக இது கருதப்படுவதாக மேலும் அவர் சூளுரைத்தார்.

மேலும், இந்நிகழ்வில் வாக்காளர் பதிவு, சமூகநல உதவி, குடிநுழைவுத் துறை தொடர்பான அலுவல்கள், அனைத்து தங்கத் திட்டங்களிலும் பதிவுச் செய்தல், பினாங்கு வீடமைப்புத் திட்டத்திற்கு விண்ணப்பித்தல் போன்ற சேவைகளும் ஏற்பாடுச் செய்யப்பட்டன. இத்திட்டம் பினாங்கு மாநிலத்தில் உள்ள மற்ற மாவட்டங்களிலும் தொடர்ந்து நடத்தப்படும் என மேலும் விவரித்தார் பேராசிரியர். நான்காவது முறையாக குடியுரிமை சிறப்பு குழுவின் முயற்சியில் இந்நிகழ்வு நடைபெறுவதாகப் புகழாரம் சூட்டினார்.

இதனிடையே, அண்மையில் மத்திய அரசு 60 வயதுக்கு கீழ்ப்பட்டவருக்கும் குடியுரிமை வழங்கப்படுவது பரிசீலிக்கப்படும் என அறிவித்திருந்தது. மேலும், நீல நிற அடையாள அட்டையை வழங்க சம்மந்தப்பட்டோரின் பெற்றோர் மலேசிய பிரஜையாக இருத்தல் முக்கிய அம்சமாக கணக்கிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

சீன, இந்தியர் இனத்தைச் சேர்ந்த மூத்தக்குடிமக்கள் பலருக்கு சரியாக மலாய் மொழி பேசத்தெரியாததால், அரசாங்க பதிவிலாகாவிற்குச் சென்று குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும் பட்சத்தில், மலாய் பேசுவதில் ஏற்படும் சிக்கலால் இவர்களின் விண்ணப்பம் நிகாரிக்கப்படும் சூழ்நிலையும் உருவாகி விடுகிறது என்று கூறிய பேராசிரியர் டாக்டர் இராமசாமி, இது போன்ற பிரச்சனைகளைக் களைய அரசாங்கம் சரியாக சிந்தித்து செயல் பட்டால், இந்தியர்களின் குடியுரிமை பிரச்சனைகள் உட்பட மற்ற இனத்தவரின் பிரச்சனைகளும் முறையாக தீர்வுக்காண்பதற்கான வாய்ப்பு இருப்பதை பேராசிரியர் வரவேற்புரையில் கூறினார்.

பினாங்கு மாநில அரசாங்கத்தின் கீழ் செயல்படும் குடியுரிமை சிறப்புப் பணிக்குழு தொடர்ந்து பணியில் ஈடுப்படுவர். எனவே, பொதுமக்கள் இக்குழுவினரை நேரில் சென்று பிரச்சனைகளுக்குத் தீர்வுக்காணலாம் என ஏற்பாட்டு குழுவினர் கேட்டுக் கொண்டனர்.