பிறை– “மலேசிய சுகாதார அமைச்சின் கீழ் செயல்படும் உணவு பாதுகாப்பு மற்றும் தர பிரிவு 386A(2)உணவு விதிமுறை 1985-யின் சட்ட அமலாக்க நடவடிக்கையைத் தள்ளுபடி செய்தது அதிருப்தியை அளிக்கிறது,” என பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் சத்தீஸ் முனியாண்டி செய்தியாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்தார்.
இச்செயல் சுகாதார மிக்க சமூகத்தை உருவாக்குவதில் ‘பின்னோக்கு‘ செயலாக கருதப்படுகிறது. சுகாதார அமைச்சு கடந்த 2016-ஆம் ஆண்டு உணவு விதிமுறை 1985-யின் கீழ் மதுபானம் குறித்த சட்ட திருத்தம் செய்யப்பட்டு அரசிதழ் பதிவு பெற்றது. இதன் மூலம் மதுபானம் 700மில்லி லிட்டருக்குக் குறைவாக கண்ணாடி போத்தலில் தயாரிக்கக் கூடாது என அறிவிக்கப்பட்டது. இந்த அமலாக்கத்தின் மூலம் மலிவு விலை மதுபானம் மறைமுகமாக ஒழிக்கப்பட்டு சுகாதார மற்றும் கட்டொழுங்கு பிரச்சனைக் குறைக்கப்படும், என மேலும் விவரித்தார்.
சுகாதார அமைச்சர் டாக்டர் சுல்கிப்லி பின் அமாட் கடந்த 16 அக்டோபர் 2018 அன்று வெளியிட்ட பத்திரிக்கை அறிக்கையில் 361 மற்றும் 386A, மதுபானம் குறித்த உணவு விதிமுறைகள் 1985, உணவு விதிமுறையின் கீழ் சட்ட திருத்தம் மேற்கொண்டு 16 அக்டோபர் முதல் இச்சட்டம் அமலுக்கு வரும் என குறிப்பிடப்பட்டது. இருப்பினும் மலேசிய மதுபானம் மற்றும் உற்பத்தி சங்கம் விடுத்த முறையீட்டுக்கு இணங்க சுகாதார அமைச்சு 6 மாத (1/11/2018 – 1/5/2019) காலத்திற்குத் தள்ளுபடி செய்தது .
தற்போது இச்சங்கத்தின் மேல் முறையீட்டுக்குச் செவி மடுத்து சுகாதார அமைச்சின் உணவு பாதுகாப்பு மற்றும் தர பிரிவினர் மீண்டும் 6 மாதத்திற்கு இச்சட்ட அமலாக்கத்தைத் தள்ளுபடி செய்துள்ளனர்.
மலேசிய மலிவு மதுபான ஒழிப்பு இயக்கத் தலைவரும் செபராங் பிறை நகராண்மைக் கழக உறுப்பினருமாக டேவிட் மார்ஷல் இச்சட்டம் அமலாக்கம் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார். ஏனெனில் 2018-ஆம் ஆண்டு இறுதியில் ஏறக்குறைய 70 பேர்கள் மலிவு மதுபானம் குடித்து மரணம் ஏய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மலேசிய மலிவு மதுபான ஒழிப்பு இயக்க ஒத்துழைப்புடன் நடத்தப்பட்ட பிரச்சாரத்தில் மலிவு மதுபான ஒழிப்புத் திட்டத்திற்கு 2014-ஆம் ஆண்டு முதல் இதுவரை 50,000 கையெத்துகள் பெறப்பட்டது என மேலும் தெரிவித்தார்.