48 மணி நேரத்திற்கு நீர் விநியோகத் தடை, போதுமான நீரைச் சேமிக்கவும் – முதல்வர்

Admin

சுங்கை டுவா – மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் இயோவ் மீண்டும் ஒருமுறை இம்மாநிலத்தில் வசிப்பவர்களை, குறிப்பாக செபராங் பிறை பகுதியில் 48 மணிநேரத்திற்குப் போதுமான தண்ணீரைச் சேமிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

வருகின்ற டிசம்பர் 2 முதல் 4 வரை பினாங்கு நீர் விநியோக வாரியம் (PBAPP) சுங்கை டுவா நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ‘வால்வ்’ மாற்றும் பணிகளைச் செயல்படுத்த திட்டமிடப்பட்டதால் நீர் விநியோகத் தடை ஏற்படும் என்று அவர் கூறினார்.

“வால்வ் நிறுவும் பணி டிசம்பர்,2 அன்று இரவு 10.00 மணிக்குத் தொடங்கி 18 மணிநேர காலவரையறையில் நிறைவுப்பெறும்.

“நீர் விநியோக அமைப்பை மீட்டெடுப்பதற்கான செயல்முறை 12 மணி நேரமாகும். அதன் பிறகு, தாழ்வானப் பகுதிகளுக்கு நீர் விநியோகத்தை மீண்டும் இணைக்க முடியும், அதேவேளையில் உயர்வானப் பகுதிகளுக்கானச் சீரான நீர் விநியோகம் பெற கூடுதல் நேரமாகும்.

“இந்த மேம்பாட்டுப் பணிகள் சீராக நடந்தால், தாழ்வானப் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு 36 மணி நேரத்தில் குடிநீர் விநியோகம் வழங்கப்படும் என எதிர்பார்க்கிறோம்.

“எனவே, பொது மக்கள் குறிப்பாக செபராங் பிறையில், இந்த காலகட்டத்தில் பயன்படுத்தப் போதுமான தண்ணீரை சேமிக்குமாறுக் கேட்டுக் கொள்கிறேன்,” என்று அவர் சிறிது நேரத்திற்கு முன்பு சுங்கை டுவாவிற்கு வருகை அளித்த போது செய்தியாளர் கூட்டத்தில் இவ்வாறு கூறினார்.

இந்த சந்திப்புக் கூட்டத்தில் சமூகநலன் மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினர் பீ புன் போ மற்றும் பினாங்கு நீர் விநியோக வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, Ir. பத்மநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கொன் இயோவ் கூறுகையில், பொது மக்களின் சிரமங்களைக் குறைக்க, பினாங்கு நீர் விநியோக வாரியம் மற்றும் தன்னார்வ தீயணைப்புப் படையினர் 12 மணிநேர நீர் விநியோகத் தடைக்குப் பின்பு முக்கியமானப் பகுதிகளில் தண்ணீர் லாரிகள் மூலம் நீர் விநியோகிக்கப்படும்.

“தன்னார்வத் தீயணைப்புப் படை, செபராங் பிறை மாநகர் கழகம் மற்றும் பினாங்கு மாநகர் கழகம் ஆகியவற்றுடன் சேர்ந்து நீர்த் தொட்டிகளை அவசரப் பகுதிகளுக்கு அந்தக் காலகட்டத்தில் அனுப்பப்படும்,” என ஆட்சிக்குழு உறுப்பினர் பீ புன் போ  தெரிவித்தார்.

“நீர் விநியோகம் தொடர்பான ஏதேனும் சிக்கல்களை எதிர்கொள்ளும் பொது மக்கள் PBAPP ஐ தொடர்பு கொள்ளலாம் அல்லது சட்டமன்ற உறுப்பினர்களின் உதவியை நாடலாம்,” என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், PBAPP மூலம் நான்கு தண்ணீர் லாரிகள் வழங்கப்படும் என்றும் மேலும் 32 தண்ணீர் லாரிகள் தன்னார்வ தீயணைப்புப் படையினரால் வழங்கப்படும் என்றும் பத்மநாதன் கூறினார்.

முன்னதாக, PBAPP ஓர் அறிக்கையில், சுங்கை டுவா நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள 1200 மில்லிமீட்டர் (மி.மீ) மற்றும் 1350 மி.மீ வால்வ்-களை மாற்றுவதற்கான பணிகளை மேற்கொள்ளும் என்று கூறியது. இது வட செபராங் பிறை, மத்திய செபராங் பிறை மற்றும் தென் செபராங் பிறை ஆகிய மூன்று மாவட்டங்களை உள்ளடக்கிய 197,851 நீர் பயனர்களும் பாதிக்கப்படுவர்.

PBAPP கூற்றுப்படி, அந்த எண்ணிக்கையில், 24,615 நீர் பயனர்கள் குறைந்த நீர் அழுத்தத்தை அனுபவிப்பர், அதே நேரத்தில் 173,236 பயனர்களின் நீர் விநியோகம் முழுமையாகத் துண்டிக்கப்படும்.

நீர் விநியோகத் தடை பற்றிய கூடுதல் தகவல்களுக்கு, பினாங்கு நீர் விநியோக வாரியத்தின் முகநூல் பக்கத்தை வலம் வரலாம்.