பாயான் பாரு – பினாங்கு மேம்பாட்டுக் கழகம் (பி.டி.சி) இன்று தனது 55வது ஆண்டு நிறைவு விழாவைக் கொண்டாடியது. இது சமூக-பொருளாதார மேம்பாடு மற்றும் மாநிலத்தின் பொருளாதாரம் வலுப்படுத்துவதில் அதன் சாதனையை எடுத்துக்காட்டுகிறது.
பினாங்கு முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ், பாயான் லெபாஸில் உள்ள பினாங்கு மேம்பாட்டுக் கழக தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசுகையில், பி.டி.சி இன் எண்ணற்ற முயற்சிகளைப் பாராட்டினார். இது மாநிலத்தின் முன்னேற்றத்திற்குக் குறிப்பிடத்தக்க பங்களிப்பையும் மற்றும் மலேசியாவில் ஒரு முக்கிய முதலீட்டு இடமாகவும் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
சாவ் தனது உரையின் போது, 2024 இல் பி.டி.சி அடைந்த பல குறிப்பிடத்தக்க சாதனைகளைக் கோடிட்டுக் காட்டினார்.
அதன் சிறப்பு அம்சங்களில், ஜி.பி.எஸ் டெக்ஸ்பேஸ் (GBS TechSpace) கட்டிடம் முடிவடைந்தது அடங்கும். இது நான்காவது உலகளாவிய வணிக சேவைகள் (ஜி.பி.எஸ்) வசதியை பி.டி.சி உருவாக்கியுள்ளது. மேலும், இது ஆகஸ்ட் மாத இறுதியில் அதன் நிறைவு மற்றும் இணக்கச் சான்றிதழை (CCC) பெற்றது.
60,000 சதுர அடி வாடகைக்குக் விடக்கூடிய இடத்துடன், முதலீடுகளை ஈர்ப்பது மற்றும் Integrated circuit (IC) எனும் துறையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட மாநிலத்தின் ‘பினாங்கு சிலிக்கான் வடிவமைப்பு @5km+’ முன்முயற்சியுடன் இத்திட்டம் இணைந்துள்ளது. இந்த வசதி,
டெக்னோப்ளெக்ஸ் பாயான் லெபாஸ் தொழில்துறை பூங்காவில் அமைந்துள்ளது. இது பினாங்கில் மனித மூலதனத்தை தக்கவைத்துக் கொள்வதற்கும் பொருளாதார வாய்ப்புகளை மேம்படுத்துவதற்கும் அமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் டிசம்பர்,7 ஆம் தேதி திறப்பு விழா காணத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதனிடையே, முடிவடையும் தருவாயில் உள்ள மற்றொரு முக்கிய திட்டமான ஜி.பி.எஸ் பை தி சீ கட்டிடம், இந்த ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதி வரை 98.9% கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளது. இந்த மூன்றாவது ஜி.பி.எஸ் வசதி, 294,000 சதுர அடி வாடகைக்கு முக்கிய இடமாக திகழும். இது டிசம்பர் தொடக்கத்தில் அதன் CCC ஐப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது உலகளாவிய வணிக நடவடிக்கைகளை நடத்தும் பினாங்கின் திறனை மேலும் விரிவுபடுத்துகிறது.
அதிக மதிப்புள்ள முதலீடுகளை ஈர்ப்பதற்கும் இடமளிப்பதற்கும் தொழில்துறை பூங்காக்களை வளர்ப்பதில் பி.டி.சி இன் முக்கிய பங்கை சாவ் எடுத்துரைத்தார்.
பத்து காவான் தொழில்துறை பூங்கா 3 (BKIP3) மற்றும் பண்டார் கசியா தொழில்துறை பூங்கா (BCTP) ஆகியவை தற்போது வலுவான முன்னேற்றத்தைக் கண்டு வருகின்றன. பல பன்னாட்டு நிறுவனங்கள் (MNCs) இந்த மூலோபாய மையங்களில் கட்டுமானப் பணிகளைத் தொடங்குகின்றன.
தொடர்ந்து, Siliconware Precision Malaysia, Plexus Manufacturing மற்றும் MKS Instruments ஆகியவை பி.சி.தி.பி இல் புதிய வசதிகளை உருவாக்கி, தூய்மையான மற்றும் நிலையான தொழில்துறை வளர்ச்சிக்கான பினாங்கின் உறுதிப்பாட்டை வலுப்படுத்தும் நிறுவனங்களில் அடங்கும்.
“ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக பினாங்கின் சமூக-பொருளாதார மாற்றத்தின் முதுகெலும்பாக பி.டி.சி திகழ்கிறது.
“பிரதான முதலீடுகள் மற்றும் புத்தாக்க முன்முயற்சி திட்டங்கள் மூலம், இது பல்வேறு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்துள்ளது. ஆயிரக்கணக்கான வேலைகளை உருவாக்கியதோடு மாநிலத்தின் உள்கட்டமைப்பை வலுப்படுத்தியுள்ளது.
“இந்த வெற்றி பினாங்கு வாழ் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது மட்டுமல்லாமல் முதலீட்டாளர்கள் மற்றும் வணிகங்களுக்கு விருப்பமான இடமாக பினாங்கின் நற்பெயரை உறுதிப்படுத்துகிறது,” என்று சாவ் தனது உரையில் கூறினார்.
உள்கட்டமைப்பு மற்றும் முதலீட்டு வெற்றிகள் மட்டுமின்றி சமூகநலத் திட்டங்கள் செயல்படுத்துவதற்கும் பி.டி.சி-ஐ முதலமைச்சர் பாராட்டினார்.
பினாங்கு மேம்பட்டுக் கழக்த்தின் வருடாந்திர தீபாவளித் திறந்த இல்ல உபசரிப்புக் கொண்டாட்டம் பினாங்கின் பன்முக கலாச்சார உணர்வையும், பினாங்கு2030 இலக்கின் ஒற்றுமைக்கான அர்ப்பணிப்பையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
பி.டி.சி 56வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் வேளையில், பினாங்கின் வளர்ச்சிப் பாதையில் அதன் தொடர்ச்சியான தாக்கம் குறித்து சாவ் நம்பிக்கை தெரிவித்தார். மேற்கொள்ளப்பட்டிருக்கும் திட்டங்கள் மற்றும் 2024 முதல் 2028 வரையிலான மாநகராட்சியின் மூலோபாய சாலை வரைப்படத்தை மேற்கோள் காட்டினார்.
“தீபாவளி வாழ்த்துக்கள் மற்றும் இந்த குறிப்பிடத்தக்க சாதனைகள் பதிவு செய்த பி.டி.சி-க்கு வாழ்த்துக்கள்,” என்று சாவ் குறிப்பிட்டார்.
பி.டி.சி இந்து சங்கத் தலைவர் புவனேஸ்வரி கூறுகையில், தீபாவளிப் பண்டிகை இருளுக்கு எதிரான ஒளியின் வெற்றி, நம்பிக்கை ஆகியவற்றின் அடையாளமாகவும் ஆழமான பொருளையும் கொண்டுள்ளது, என்றார்.
“எங்கள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, பினாங்கில் உள்ள ஆறு தமிழ் ஆரம்பப் பள்ளிகளுக்கு தலா ரிம500 பெருநிறுவன சமூகப் பொறுப்பு (CSR) பங்களிப்பில் வழங்கியுள்ளோம் என்பதையும் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஆறு பள்ளிகளான இராஜாஜி தமிழ்ப்பள்ளி, சுங்கை ஆரா தமிழ்ப்பள்ளி, அசாட் தமிழ்ப்பள்ளி, பிறை தோட்டத் தமிழ்ப்பள்ளி, ஜுரு தோட்டத் தமிழ்ப்பள்ளி மற்றும் பத்து காவான் தோட்டத் தமிழ்ப்பள்ளி ஆகியவை அடங்கும்.
“இந்தக் கொள்கை, கல்வியை வளர்ப்பதற்கும், நமது அடுத்த தலைமுறையை மேம்படுத்துவதற்கும் நாம் பகிர்ந்து கொண்ட உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது.
மேலும், பினாங்கு மாநிலச் செயலாளர் டத்தோ சுல்கிஃப்லி லாங், மாநில வீட்டுவசதி மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ஸ்ரீ சுந்தராஜூ சோமு, வாணிகம், தொழில்முனைவோர் மற்றும் புறநகர் மேம்பாடு ஆட்சிக்குழு உறுப்பினர் ரஷிடி ஜினோல், மாநில இளைஞர், விளையாட்டு மற்றும் சுகாதார ஆட்சிக்குழு உறுப்பினர் டேனியல் கூய் ஜி சென், பி.டி.சி தலைமைச் செயல் அதிகாரி டத்தோ அஜிஸ் பாக்கர் மற்றும் முக்கிய பிரமுகர்கள்
ஆகியோர் கலந்து கொண்டனர்.