5,262 நெல் விவசாயிகளுக்கு ரிம2,631,000 நிதியுதவி

Admin

ஜார்ச்டவுன் – மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் இயோவ் பினாங்கு மாநிலத்தில் உள்ள 5,262 நெல் விவசாயிகளுக்கு ரிம2,631,000 நிதி ஒதுக்கீடு வழங்குவதாக அறிவித்தார். பினாங்கு மாநில வேளாண்மை துறையின் கீழ் பதிவுப்பெற்ற 5,262 விவசாயிகளுக்கு
ரிம500 (ஒரு முறை மட்டுமே) வாழ்வாதார உதவித்தொகையாக வழங்கப்படும்.

தற்போதைய வானிலையின் நிச்சயமற்ற தன்மை; அதிகரித்து வரும் இரசாயன உரங்கள் மற்றும் வேளாண் இரசாயன உள்ளீடுகளின் விலை; கோவிட்-19 தொற்றுநோயின் தாக்கம் மற்றும் ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான சமீபத்திய போர் ஆகிய சவால்களை விவசாயிகள் எதிர்கொள்ள உதவும் பொருட்டு இந்நிதி உதவி வழங்குவதாக
நில மேம்பாடு, பொருளாதாரம் மற்றும் தகவல்தொடர்புகளுக்கான ஆட்சிக்குழு உறுப்பினருமான சாவ் கூறினார்.

“இந்த உதவித் தொகையானது நெல் விவசாயிகள் எதிர்கொள்ளும் சுமையைக் குறைக்கும். மேலும், மலேசியாவிலே நெல் உற்பத்தியாளர்களின் பட்டியலில் முதன்மை இடத்தில் பினாங்கு மாநிலத்தைத் தக்க வைக்க நெல் விவசாயிகளுக்கு ஊக்கமளிக்கும்,” என்று கொம்தாரில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் முதல்வர் விளக்கமளித்தார்.

பினாங்கு மாநிலத்தில் நெல் பயிர்களின் பரப்பளவு 12,105.59 ஹெக்டர் ஆகும். 2020 ஆம் ஆண்டில் சராசரி மாநில அரிசி உற்பத்தி, ஹெக்டேருக்கு 4,831 மெட்ரிக் டன்கள் பெறப்படுகிறது.

தஞ்சோங் நாடாளுமன்ற உறுப்பினருமான கொன் இயோவ், பினாங்கு மாநிலத்தில் சராசரி அரிசி உற்பத்தி ஹெக்டேருக்கு தேசிய சராசரியான 4,039 மெட்ரிக் டன்களை விட அதிகமாக உள்ளது, என்றார்.

2021 இன் பருவகால சராசரியைப் பொறுத்தவரை, பினாங்கு ஒரு ஹெக்டேருக்கு மொத்தம் 5,595 மெட்ரிக் டன்களைப் பதிவு செய்துள்ளது. இது மாநிலத்தின் அரிசி விளைச்சலின் அதிகரிப்பு மாநில அரசாங்கத்தின் இலக்கிற்கு ஏற்ப உள்ளது என்பதைக் காட்டுகிறது.

பினாங்கு மாநிலம் நம் நாட்டின் பிரதான உணவான ‘அரிசி’ உற்பத்தியில் பங்களிப்பது புதியதல்ல.

“2020 ஆம் ஆண்டிற்கான மூன்றாவது மிக உயர்ந்த அடைவுநிலையும் பினாங்கு மாநிலத்தில் 61.44 சதவீத அடிப்படைத் தேவைகளுக்கு (SSL) பங்களித்துள்ளது,” என்றார்.

மாநில வேளாண் துறையின் கீழ் பதிவுசெய்யப்பட்ட நெல் விவசாயிகளுக்கு ‘ஒரு முறை மட்டுமே’ வழங்கப்படும் நிதியுதவிக்கான பரிவர்த்தனை மின்னனு நிதி பரிமாற்றம் (EFT) மூலம் செய்யப்படும், என வேளாண் தொழில்நுட்பம் மற்றும் உணவுப் பாதுகாப்பு, ஊரக வளர்ச்சி மற்றும் சுகாதாரத் துறை ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் நோர்லேலே அரிஃபின் கூறினார்.