பினாங்கு மாநிலஅரசு 2,627 வாடகைக் கார் ஓட்டுனர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கியது. பினாங்கு மாநில மக்கள் கூட்டணி அரசாங்கம் வாடகைக் கார் ஓட்டுனர்களுக்கு தலா ரி.ம300-ஐ வழங்கியது பாராட்டக்குறியதாகும். இந்தச் சன்மானம் வழங்குவதற்காக மாநில அரசு ரி.ம788,100 ஒதுக்கியது என மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் கூறினார். கடந்த 13-வது பொதுத்தேர்தலின் போது மக்கள் கூட்டணி அரசு தேர்தல் அறிக்கையில் சுற்றுலா துறையின் சேவை தரத்தை மேம்படுத்த வாடகைக் கார் ஓட்டுனர்களுக்கு ஒரு வருடத்திற்கு ரிம600 ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என அறிவித்ததைத் தொடர்ந்து கடந்த 2013-ஆம் ஆண்டு தொடங்கி 6-வது முறையாக வழங்குகிறது.
இந்த ஆண்டுக்கான முதல் தவணை ஊக்கத்தொகை பிப்ரவரி மாதத்திலும் இரண்டாம் தவணைக்கான ஊக்கத்தொகை ஜூன் மாதம் 14-ஆம் திகதி வழங்கப்பட்டது.மலேசிய மேம்பாட்டு நிறுவனத்தின் (1MDB) ரிம42 பில்லியன் கடன் பற்றி துன் மகாதீர் முகமது, நாட்டு பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் துன் இராசாக் மீது எழுப்படும் கேள்விகளால் நாட்டின் நாணய மதிப்பு சரிவுக்காண்கிறது என்றார் நிதி அமைச்சர் டத்தோ அகமட் மஸ்லான். அமைச்சரின் கூற்று பொருந்தா வாதம் என்றார் முதல்வர் மேதகு லிம் குவான் எங்.
மேலும் மலேசிய பொருளாதரம் 6% வளர்ச்சியும் தாய்லாந்து நாட்டு பொருளாதாரம் 1% வளர்ச்சிப் பெற்ற போதிலும் அதன் நாணய மதிப்பீடு மலேசியாவைக் காட்டிலும் வலுவாகவுள்ளது எனச் சுட்டிக்காட்டினார். கூட்டரசு அரசாங்கம் நெடுஞ்சாலைகளின் சாலைக் கட்டணத்தை அதிகரிக்க வேண்டாம் என வேண்டுகோள் விடுத்தார் மாநில முதல்வர். பொது மக்கள் பொருள் சேவை வரி, பெட்ரோல் விலையேற்றம் ஆகியவற்றால் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் கூடுதல் சுமை சேர்க்க வேண்டாம் எனவும் நினைவுறுத்தினார்.
இந்நிகழ்வில் ஆட்சிக் குழு உறுப்பினர்களான பீ புன் போ மற்றும் லிம் ஹொக் செங் கலந்து சிறப்பித்தனர். 6-வது முறைவாக ஊக்கத்தொகை பெற்ற வாடகைக் கார் ஓட்டுனர் திரு இராமதாஸ் மாநில அரசிற்கு நன்றி மாலைச் சூட்டினார். மேலும் இப்பணம் சாலை வரி செலுத்துவதற்கும் வாகனத்தைப் பழுதுப் பார்ப்பதற்கும் பயன்பத்துவதாகக் கூறினார்.
10 வருடத்திற்கு கூடுதலான வாடகைக் கார்களுக்குப் பதிலாக புதிய வாடகைக் கார் பெறுவதற்கு மாநில அரசு பொது போக்குவரத்து ஆணைக்குழுவிடம் கலந்துரையாட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார் வாடகைக் கார் ஓட்டுனர் திரு புஸ்பநாதன்.