பத்து காவான் – இன்று மலேசியாவின் 66வது சுதந்திர தினத்தை நினைவுக்கூரும் வகையில் பினாங்கு மாநில அளவிலான சுதந்திர தின அணிவகுப்பைக் காண ஏறக்குறைய
20,000-க்கும் மேற்பட்ட பொது மக்கள் பத்து காவான் அரங்கத்தில் கூடினர்.
இந்த ஆண்டுக்கான சுதந்திர தின கொண்டாட்டத்தின் கருப்பொருளானது ‘மலேசிய மடானி: உறுதியான ஒருமைப்பாடு நிறைவான நம்பிக்கை’ என்பதாகும்.
பினாங்கு ஆளுநர் துன் அஹ்மத் ஃபுஸி அப்துல் ரசாக் மற்றும் அவரது துணைவியார் தோ புவான் கத்தீஜா முகமது நோர் வருகைக்குப் பிறகு, மாநில அளவிலான சுதந்திர தின அணிவகுப்பு காலை 8.30 மணியளவில் தொடங்கியது.
இக்கொண்டாட்டத்திற்கு மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ், மாநில சட்டமன்ற சபாநாயகர் டத்தோ லாவ் சூ கியாங், நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஆட்சிக்குழு உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
வருகையளித்த பொது மக்களிடையே தேசப்பக்தியை மேலோங்கச் செய்யும் வகையில் பல்வேறு இசை நிகழ்ச்சிகள்; அலங்கரிக்கப்பட்ட வாகன அணிவகுப்பு; முப்படை வீரர்களின் அணிவகுப்பு; மாநில மற்றும் தனியார் துறைகளின் அணிவகுப்பும் இடம்பெற்றது.
மாநில சுதந்திர தின அணிவகுப்பில் மாநில அரசு, தனியார் நிறுவனம், அரசு சாரா இயக்கம், உயர்க்கல்வி மையம், பள்ளி மாணவர்கள் மட்டுமின்றி 296 வாகனங்களும் இடம்பெற்றன. இதில் 117 குழுக்கள் அடங்கிய 8,977 பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்த அணிவகுப்பில் கலந்து கொண்ட பங்கேற்பாளர்கள் தேசியக் கொடி மற்றும் மாநில கொடியை கையில் ஏந்தியவாறு தங்களின் தேசப் பக்தியை வெளிப்படுத்தினர்.
பினாங்கு மாநிலம் தூய்மையாகவும் பசுமையாகவும் காட்சியளிப்பதற்கு துணைபுரியும் இரு ஊராட்சி மன்ற (எம்.பி.பி.பி மற்றும் எம்.பி.எஸ்.பி) ஊழியர்கள் மட்டுமின்றி அவர்கள் பயன்படுத்தும் வாகனங்களும் அணிவகுப்பில் இடம்பெற்றது.
இது தவிர, பார்வையாளர்களைக் கவரும் வகையில் பல்வேறு அமலாக்க அமைப்புகளின் மொத்தம் 17 சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த ஆண்டுக்கான சுதந்திர தின சிறப்புச் செய்தியில் மாநில முதலமைச்சர், அரசியல் கருத்து வேறுபாட்டில், மக்களைப் பிளவுபடுத்தக்கூடும் 3R (இனம், மதம் மற்றும் அரசக் குடும்பம்) சார்ந்த விவகாரங்களைப் பயன்படுத்துவதை நிறுத்துமாறு அனைத்துக் கட்சிகளையும் வலியுறுத்தியுள்ளார்.
“தயவுசெய்து மத மற்றும் இன உணர்வுகளைப் பயன்படுத்தி இனவாத அறிக்கைகளை வெளியிடுவதைத் தவிர்க்கவும் அல்லது தவறான தகவல்களைக் குறிப்பாக சமூக ஊடகங்களில் பரப்புவதனால் வெவ்வேறு இன மக்களிடையே ஒற்றுமையின்மைக்கு வழிவகுக்கிறது,” என்று அவர் கூறினார்.
சுதந்திர தின விழாவை முன்னிட்டு அனைத்து தரப்பினரும் ஒருமைப்பாட்டில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
ஏனென்றால், ஒற்றுமை இன்றி தேசிய மற்றும் மாநில அளவிலான நிலைப்பாடு, செழிப்பு மற்றும் தொடர்ச்சியான முன்னேற்றத்தை அடைவது சாத்தியமில்லை என்று அவர் கூறினார்.
பினாங்கில் ஒற்றுமை அரசாங்கம் உருவாகியதன் மூலம் இந்த ஆண்டுக்கான சுதந்திர தின கொண்டாட்டம் சிறப்பு வாய்ந்தது என்று முதலமைச்சர் மேலும் கூறினார்.
“ஒற்றுமை அரசாங்கத்திற்கு வழங்கப்பட்ட புதிய ஆணையுடன், புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள் மற்றும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில சட்டமன்ற உறுப்பினர்கள், மக்களின் நல்வாழ்வை உறுதிப்படுத்தவும், மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை மேலும் மேம்படுத்தவும் புதிய நிர்வாகத்தை வழிநடத்தத் தயாராக உள்ளது,” என்று அவர் கூறினார்.