அனைவரும் எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்த பினாங்கு அனைத்துலக இந்திய சந்தை பெருவிழா 2016 கடந்த ஜூலை 6 முதல் 10-ஆம் திகதி வரை ஸ்பாய்ஸ் அரேனா அரங்கத்தில் இனிதே நடைபெற்றது. இந்நிகழ்வை பினாங்கு மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி மற்றும் அஜெண்டா சூரியா நிறுவனத்தின் தலைவர் திரு ஜெகா ராவ் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தனர். பிரமுகர்கள் அனைவரும் இந்திய பாரம்பரிய நடனத்துடன் வரவேற்கப்பட்டனர்.
இந்த அனைத்துலக இந்திய சந்தை பெருவிழாவிற்கு பினாங்கு வாழ் மக்கள் மட்டுமின்றி பேரா, கெடா மாநிலங்களிலிருந்தும் மக்களின் கூட்டம் திரளாகக் காணப்பட்டது. 8வது முறையாக நடைபெறும் இவ்விழாவில் துணிமணிகள், காலணிகள், சுடிதார், சேலை, அழகுச் சாதனப்பொருட்கள், உணவுப் பதார்த்தங்கள் என பல்வகை பொருட்களும் மிக மலிவான விலையில் விற்கப்பட்டன. பொதுவாகவே மலேசியாவில் விற்கப்படும் பொருட்கள் தென் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவை. இந்த மாபெரும் விழாவில் விற்கப்படும் பொருட்கள் யாவும் வித்தியாசமானவை காரணம் இந்தியாவின் வட மாநிலங்களான புதுடில்லி, காஷ்மீர், இராஜஸ்தான் மற்றும் அண்டை நாடுகளான பாகிஸ்தான் ஆகிய இடங்களிலிருந்தும் வணிகர்கள் தங்களின் பொருட்களை இங்கு விற்கின்றனர்.
கோலாலம்பூர் மாநிலத்திற்கு அடுத்து 8 ஆண்டுகளுக்கு முன்பு பினாங்கு மாநிலத்தில் தான் அஜெண்டா சூரிய நிறுவனம் முதல் முறையாக அனைத்துலக இந்திய சந்தை பெருவிழாவை துவக்கியது என அதன் தலைவர் திரு ஜெகா ராவ் தெரிவித்தார். இங்கு வியாபார சந்தை நடத்துவதற்கு பல எதிர்ப்புகள் வந்தாலும் மாநில இரண்டாம் துணை முதல்வர் மற்றும் மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் ஆதரவுடன் தொடர்ந்து அங்கம் வகிக்கிறது என்றார். இந்த ஆண்டு 185 கடைகள் அமைக்கப்பட்டன, அதில் 90 கடைகள் உள்ளூர் வியாபாரிகளால் தொடங்கப்பட்டன. ஏறக்குறைய40% வணிக வாய்ப்பினை உள்ளூர் வியாபாரிகள் பெற்றுள்ளனர் என மேலும் தெரிவித்தார். அதுமட்டுமின்றி உள்ளூர் வியாபாரிகளும் இணையதள வியாபாரத்தை மேம்படுத்த ஆர்வம் கொள்ள வேண்டும் சிறு வியாபாரம் நாளடைவில் பெரிய சாம்ராஜியத்தை உருவாக்கும் சாத்தியம் உண்டு எனக் கேட்டுக் கொண்டார்.