சாலை விபத்துகளைக் குறைக்கும் நோக்கில் வாகன ஓட்டுனர்கள் வேகக் கட்டுப்பாட்டைப் பின்பற்றுவதை உறுதி செய்ய மத்திய அரசு அறிமுகம் செய்த தானியங்கி அமலாக்க முறை பினாங்கில் நிறுவப்படுவதை மாநில அரசு அனுமதிக்கவில்லை என்று அண்மையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் அறிவித்தார்.
பினாங்கு மாநில அரசு, இத்தானியங்கி அமலாக்க ஒளிப்பதிவுக் கருவிகளை அகற்ற பினாங்கு நகராண்மைக் கழக அதிகாரிகளுக்கும் பினாங்கு செபெராங் பிறை நகராண்மைக் கழக அதிகாரிகளுக்கும் வலியுறுத்தியத்துடன் இது சம்பந்தமாக மறுப்பேதும் இருந்தால் நீதிமன்றத்திற்குச் செல்லவும் தயாராக இருப்பதாக முதல்வர் தெரிவித்தார். பினாங்கு மாநில ஆட்சிக் குழு உறுப்பினர்களுடனான ‘AES’ நிறுவுவதைப் பற்றிய விளக்கக் கூட்டத்தைப் போக்குவரத்து அமைச்சின் சிறப்பு அதிகாரி காரணமின்றி ஒத்தி வைத்ததால் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று மேலும் விளக்கமளித்தார்.
“ பொதுவாக போக்குவரத்து மற்றும் சாலை விதிமுறைகளைப் பின்பற்ற எடுக்கப்படும் எந்தவொரு முயற்சிக்கும் பினாங்கு மாநில அரசு எதிர்ப்பு தெரிவித்ததில்லை. ஆனால், இந்த தானியங்கி அமலாக்க முறைக்கு கடும் எதிர்ப்பு தெரிவிப்பதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன. முதலாவதாக, இதில் நிர்ணயிக்கப்பட்டிருக்கும் வேக வரம்பான 50கிமீ- 60கிமீ மணி நேரம் நடப்பு சூந்நிலைக்கு ஏற்றவாறு அமையாததால் வாகன ஓட்டுநர்களுக்குப் அது பெரும் சிரமத்தையளிக்கும். மேலும், இவ்வமலாக்க முறை தேசிய முன்னணியின் ஆதரவில் உள்ள இரண்டு தனியார் நிறுவனங்களுக்கு இலாபத்தை ஈட்டித் தரும் கருவியாகச் செயல்படுகிறது. வேகக் கட்டுப்பாட்டை மீறும் வாகனமோட்டிகளுக்கு விதிக்கப்படும் அபராதத்தின் ஒரு பகுதி இந்த நிறுவனங்களுக்குச் சேரும். அமலாக்க முறை என்பது தனியார்மயப்படுத்தப்படக்கூடாது மாறாக அது மக்கள் தேர்வு செய்த அரசாங்க அதிகாரத்தின் கீழ்ச் செயற்பட வேண்டும்.” என்று மாண்புமிகு முதல்வர் லிம் குவான் எங் தெளிவுபடுத்தினார்.