‘AES’ சமத்துவப் பொருளாதாரத் திட்டம்

Admin

‘மக்கள் சேவையே மகேசன் சேவை’ என்ற மந்திரக் கோலைக் கையில் கொண்டு சிறந்த ஆட்சிமுறையை செயற்படுத்தி வரும் பினாங்கு மக்கள் கூட்டணி அரசின் மற்றுமொரு அரிய திட்டம்தான் ‘AES- Agenda Ekonomi Saksama’ எனப்படும் சமத்துவப் பொருளாதாரத் திட்டம். இத்திட்டத்திற்காக மாநில அரசு ரிம20 மில்லியனை ஒதுக்கீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. பினாங்கு மாநில அரசு ஒவ்வோர் ஆண்டும் வரவு செலவு கணக்கில் மிகை நிதியைப் பதிவு செய்ததன் பலனாக இந்த ஒதுக்கீடு சாத்தியப்பட்டுள்ளது என்று முதல்வர் மாண்புமிகு லிம் குவான் எங் மகிழ்ச்சி தெரிவித்தார்.

இவ்வாண்டு ஜனவரி மாதம் முதல் தொடக்கம் காணும் இவ்வறுமையொழிப்புத் திட்டத்தின் மூலம் வறுமைக் கோட்டின் குறைந்தபட்ச வருமானமாக ரிம770க்கு கீழ் வருமானம் பெறும் குடும்பத்திற்கு மாநில அரசு ஒவ்வொரு மாதமும் தொகையதிகரிப்புச் செய்யும். உதாரணத்திற்கு, ரிம600ஐ பெறும் ஒரு குடும்பம் இத்திட்டத்தின் வழி மாநில அரசிடமிருந்து ரிம 170ஐ மாதந்தோறும் பெற தகுதியுடையதாகிறது. எனவே, மாநில அரசு பினாங்கு வாழ் குடும்பங்கள் வறுமைக் கோட்டிற்கு மேல் மாத வருமானமாக குறைந்தபட்சம் ரிம770ஐப் பெறுவதை உறுதி செய்யும். இதன்வழி, மலேசிய நாட்டில் வறுமையை ஒழித்த முதல் மாநிலமாகப் பினாங்கு மாநிலம் திகழும் என முதல்வர் நம்பிக்கை தெரிவித்தார்.

644573_607763005907820_1775059427_n

ஆற்றல், பொறுப்பு, வெளிப்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் ஊழலற்ற தூய ஆட்சிமுறையைச் செயற்படுத்திவரும் பினாங்கு மக்கள் கூட்டணி அரசு 2008-ஆம் தொடங்கி தொடர்ந்து ஒவ்வோர் ஆண்டும் மிகை நிதியைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த 2011-ஆம் ஆண்டிற்கான கணக்குத் தணிக்கை அறிக்கையின்படி பினாங்கு மாநில அரசின் மிகை நிதி ரிம 105 மில்லியன் அதாவது 312% உயர்வு கண்டு மாபெரும் சாதனை புரிந்தது. பினாங்கு மாநில அரசின் வரலாற்றில் இதுவே முதன் முறையாக மக்கள் கூட்டணி அரசின் கீழ்ச் செயல்படும் அரசு அதிகபடியான மிகை நிதியைப் பதிவு செய்துள்ளது என்பது பெருமைக்குரியதாகும். இச்சாதனையைப் பினாங்கு மக்களுடன் பகிர்ந்து கொள்ளவே மாநில அரசு பல தங்கத் திட்டங்களை அறிமுகம் செய்து பினாங்கு வாழ் மக்களுக்குப் பயனளித்து வருகிறது. அவ்வகையில், இந்தச் சமத்துவப் பொருளாதாரத் திட்டம் அதி வறுமையில் வாழும் மக்களுக்கு ஒரு விடிவெள்ளியாக விளங்கி ஏழ்மை என்னும் இருட்டறையிலிருந்து வெளியேறி தங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்ள வழிவகை செய்யும் என்று மாண்புமிகு முதல்வர் லிம் குவான் எங் தம் எதிர்ப்பார்ப்பையும் நம்பிக்கையையும் தெரிவித்தார்.

சமுதாய மேம்பாட்டினைக் கருத்தில் கொண்டு செயற்படுத்திவரும் பினாங்கு மாநிலத் தங்கத் திட்டங்கள் தொடர்ந்து நடைபெறுவதைப் பொது மக்களே உறுதி செய்ய வேண்டும் என்று முதல்வர் கேட்டுக் கொண்டார். மக்கள் தங்களுக்கு அந்த வாய்ப்பையும் அதிகாரத்தையும் வழங்கினால் நாங்கள் பினாங்கு மாநிலத்தை எல்லாத் துறைகளிலும் மேன்மை கண்ட மலேசியாவின் தலைச்சிறந்த மாநிலமாக உருமாற்ற சிறந்த ஆட்சி முறையினை மேற்கொண்டு வழிநடத்திச் செல்வோம் என்று முதல்வர் உறுதி பூண்

881923_607764815907639_1799900224_o

      இந்தச் சமத்துவப் பொருளாதாரத் திட்டத்தில் இதுவரை 2,814 பேர் பதிவு செய்துள்ளனர். இவர்களுக்கு, ரிம 200 – ரிம770 வரை ஒவ்வோர் மாதமும் வழங்கப்படும். பினாங்கு மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இந்தச் சமத்துவப் பொருளாதாரத் திட்டத்தின் உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது குறிப்பிடத்தக்கதாகும். வடகிழக்கு மாவட்டத்திற்கான இவ்வுதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சியில் பயனடைந்த திருமதி மகாதேவி வரதன் அவர்கள் தம் குடும்பச் சுமையினைக் குறைக்க மாதந்தோறும் தமக்குப் பணம் கிடைக்கப்போவதைக் கூறி அகம் மகிழ்ந்தார். ஆறு பிள்ளைகளுக்குத் தாயான இவர் 25 ஆண்டுகளாகக் கணவனைப் பிரிந்து வாழ்கிறார். போதிய வருமானம் இல்லாததால் தம் மூன்று குழந்தைகள் உறவினரிடம் வளர்ந்து வருவதாக மிகவும் வருத்தத்துடன் கூறினார். மேலும், தம் மூத்த மகன் நடராஜா உடல் ஊனமுற்று இருப்பதாலும் தாம்தான் விட்டிலிருந்து அவரைப் பார்த்துக் கொள்வதாகக் கூறினார். இனி, தாம் எதிர்நோக்கி வந்த பொருளாதாரப் பிரச்சனைக்குச் சிறந்த தீர்வு கிடைத்துள்ளதில் பெருமகிழ்வு அடைவதாகவும் அதற்கு வழிவகுத்த மாநில அரசுக்குத் தம் மனம்கனிந்த நன்றியினையும் தெரிவித்துக் கொண்டார். தொடர்ந்து, தாமான் துன் சாடோனைச் சேர்ந்த திரு இராஜேந்திரன் அவர்கள் மூன்று ஆண்டுகள் சிங்கப்பூரில் வேலை செய்து வந்தவர். வேலை இடத்தில் நிகழ்ந்த விபத்து ஒன்றில் தன் கால்கள் செயலிழந்ததாக வருத்ததுடன் கூறினார். அவருடைய மனைவியோ தீ விபத்து ஒன்றில் சிக்கியதால் உடல் முழுதும் தீப்புண் காயங்களுக்கு ஆளாகியிருந்தது மனதை வாட்டியது. மாநில அரசிடமிருந்து கிடைக்கபெறும் இந்நிதி தமக்கும் தன் மனைவிக்கும் பேருதவியாக இருக்கும் என மகிழ்ச்சியுடன்  கூறினார்.

     ஆக, ரிம 770க்கும் கீற்பட்ட வருமானம் பெறும் குடும்பங்கள் உடனே  உங்கள் சட்டமன்றத் தொகுதி சேவை மையத்திலோ, மாநில சமூக நலன் மற்றும் மேம்பாட்டுக் கழக அலுவலகத்திலோ சென்று தங்கள் விவரங்களைக் கொடுத்துப் பதிந்து கொள்ளலாம். மாநில அரசு வழங்கும் இவ்வாய்ப்பைப் வறுமையில் வாழும் பினாங்கு வாழ் இந்தியர்கள் சரியாகப் பயன்படுத்திக் கொள்வர் என எதிர்பார்க்கிறோம். அதோடு, விவரம் தெரிந்தவர்கள் இதனை ஏழ்மை நிலையில் உள்ள மக்களுக்கு இத்திட்டத்தைப் பற்றி விளக்கிக் கூறும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம். ‘யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்!’