empowerNCER திட்டம் திருமதி பிரேமாவை உணவக நடத்துனர் மட்டுமின்றி டிஜிட்டல் ரீதியிலும் உணவு வணிகத்தை மேம்படுத்த ஊக்குவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் பிரேமா ரொட்டி, பேக்கரி மற்றும் பேஸ்ட்ரி தயாரிக்கும் பட்டறையில் பங்கேற்றுப் பயனடைந்தார்.
முழுநேர இல்லத்தரசியான திருமதி பிரேமா, தொடக்கத்தில் கணவருடன் வீட்டிலேயே உணவு வியாபாரம் செய்யத் தொடங்கினார். இருப்பினும், சமையல் துறையில் அவருக்கு இருந்த மிகுந்த ஆர்வம் அவரை உணவுத் துறையில் படிப்பதற்குத் தூண்டியது.
அதுவே அவரை empowerNCER திட்டத்தில் சேர வழிகாட்டியாக அமைந்தது.
அவரின் சமையல் துறையில் கொண்ட திறமையும், தொழில் முனைவோர் அறிவையும் கொண்டு அவர், உணவுப் பொருட்களின் தரத்தை மேம்படுத்துவதிலும், உணவுப் பொருட்களின் வகைகளை பல்வகைப்படுத்துவதிலும் வெற்றிப் பெற்றார்.
கெபாலா பத்தாஸில் சப்பாத்தி, தோசை, இனிப்பு அப்பம், ரொட்டி சானாய் போன்ற பல்வேறு உணவு வகைகளைத் தயாரித்து ஒரு சிறு உணவகத்தைத் திறந்து வியாபாரத்தை மேம்படுத்தியுள்ளார்.
எதிர்காலத்தில் இந்திய உணவகம் தொடங்க விரும்பும் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவ பிரேமா இணக்கம் பூண்டுள்ளார்.
இம்மாதிரியான empowerNCER திட்டத்தை சிறு வணிகர்கள் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.
இதற்கிடையில், NCIA பினாங்கு மாநில அலுவலகத்தின் தலைவர், நூருல் சைடாதுல் நாடியா சுல்கிப்லி கூறுகையில், மத்திய செபராங் பிறை மாவட்டத்தில் 200 பங்கேற்பாளர்களை உள்ளடக்கிய NCER-திறன் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி பாடநெறி பயிலரங்கம் 2019 இல் தொடங்கியது.
“பங்கேற்பாளர்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற வரவேற்பைப் பார்த்த பிறகு, இத்திட்டத்தை இரண்டாவது கட்டமாக தொடர NCIA-க்கு அரசாங்கம் தொடர்ந்து நம்பிக்கை அளித்தது.
“இரண்டாம் கட்டமாக, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 200 பங்கேற்பாளர்கள் என 800 பங்கேற்பாளர்களை உள்ளடக்கிய மத்திய செபராங் பிறை, தென் செபராங் பிறை, வடகிழக்கு மற்றும் தென்மேற்கு மாவட்டங்களில் இத்திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்துகிறோம்.
“பின்னர், பினாங்கு மாநிலத்தில், பெரும்பாலான பங்கேற்பாளர்கள் மிகச் சிறந்த செயல்திறனை வெளிப்படுத்தியதை முன்னிட்டு இம்மாநிலத்தின் ஐந்து மாவட்டங்களை உள்ளடக்கிய 750 பங்கேற்பாளர்கள் மூன்றாவது கட்டமாக அரசாங்கம் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துகிறது,” என்று அவர் முத்துச் செய்திகள் நாளிதழ் நிருபரிடம் கூறினார்.
இந்தத் திட்டத்தின் மூலம், NCIA, அந்தந்த மாவட்டங்களில் சந்தை தேவைக்கு ஏற்ப வழங்கப்படும் என்பதை உறுதிப்படுத்த, சேவை வழங்குநர்களை நியமிப்பதுடன், விவரக்குறிப்பு ஆய்வையும் நடத்துகிறது.
“ஆவண செயல்முறையை முடித்த பிறகு, கல்வி மற்றும் தொழில்துறை பயிற்சியை உள்ளடக்கிய தொழில்முனைவோர் திறன் பயிற்சியை வழங்குவதன் மூலம் அடுத்தக் கட்டத்திற்குச் செல்கிறோம்.
.
“மூன்று மாதங்களுக்குத் தொழில்துறை பயிற்சியை மேற்கொள்வதுடன், பங்கேற்பாளர்கள் டிஜிட்டல் மயமாக்கல், இ-காமர்ஸ் மற்றும் ஆன்லைன் வணிக சந்தைப்படுத்தல் ஆகியவற்றை கற்றுக்கொள்ள சிறந்த தலமாகவும் அமைகிறது,” என்று அவர் விளக்கினார்.
நூருல் சைதாதுல் நதியா கூறுகையில், பயிற்சிக் காலம் முடிந்ததும் பங்கேற்பாளர்கள் தங்கள் தொழிலை மேலும் விரிவுபடுத்தவும் அல்லது புதிய தொழில் தொடங்குவதை உறுதி செய்வதற்காக அடிப்படை உபகரணங்களும் இதில் வழங்கப்படும் என்றார்.