கெபுன் பூங்கா – கடந்த இரண்டு ஆண்டுகளாக கோவிட்-19 தாக்கத்தின் காரணமாக நடைப்பயணம் அல்லது நெடுவோட்ட நிகழ்ச்சியை ஏற்று நடத்தாத சூழலில், அண்மையில் Glo-Walk 7.0 நடைப்பயணம் பொது மக்களிடையே அதிக வரவேற்பைப் பெற்றது. தாமான் பண்டாராயாவில் (இளைஞர் பூங்கா) நடைபெற்ற இந்த நடைப்பயணத்தில் 3,000-க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர்.
கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் கோவிட்-19 பெருந்தொற்றிலிருந்து நம் நாடு எண்டமிக் கட்டத்தில் நுழைந்தப் பின் நடத்தப்பட்ட முதல் பெரிய நடைப்பயணமாகக் கருதப்படுகிறது.
“பினாங்கு தெக் டோம், நிகழ்ச்சியை ஏற்று நடத்துவதற்கும், இதன் வாயிலாக நிதி திரட்டுவதோடு, Glo-walk 7.0 -ஐ ஒரு வருடாந்திர நிகழ்ச்சியாக நடத்த இணக்கம் கொண்டதற்குத் தனது பாராட்டுகளை
பினாங்கு மாநில இரண்டாம் துணை முதல்வர், பேராசிரியர் ப.இராமசாமி தெரிவித்தார்.
குடும்பத்துடனும் நண்பர்களுடனும் சிறந்த வழியில் நேரத்தை செலவிடுவதற்கு ஒரு நல்ல தலமாக இந்த நடைப்பயணம் அமையும் என பேராசிரியர் நம்பிக்கைத் தெரிவித்தார்.
பினாங்கின் சிறந்த எதிர்காலத்திற்காக இளையத் தலைமுறை குறிப்பாக மாணவர்கள் அறிவியல் துறையில் தனது மேற்கல்வியைத் தொடர வேண்டும். மேலும், பினாங்கு மாநிலத்தில் வளர்ச்சி மற்றும் தொழில்துறையை மேம்படுத்த திறமையான மற்றும் நிபுணத்துவம் வாய்ந்த தொழிலாளர்கள் குறிப்பாக திறன்மிக்க மனித வளம் அவசியம்.
பினாங்கு தெக் டோம் மாணவர்கள் அறிவியல் துறையில் ஆர்வம் கொள்ள தொடர்ந்து பங்களிப்பு நல்கும் என்று அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.
இதனிடையே, 5 கிலோமீட்டர் Glo-walk நடைப்பயணத்தை மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி அதிகாரப்பூர்வமாகத் துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் புலாவ் தீக்குஸ் சட்டமன்ற உறுப்பினர் கிரிஸ் லீ சூன் கிட்; கெபுன் பூங்கா சட்டமன்ற உறுப்பினர் ஜெசன் ஓங் கான் லீடான் மற்றும் பினாங்கு தெக் டோம் பிரதிநிதிகளும் கலந்து சிறப்பித்தனர்.
Glo- walk 7.0-ஐ நடைப்பயணத்தில் கலந்து கொண்ட பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் சட்டையும் பதக்கமும் வழங்கப்பட்டன. நடைப்பயணத்தை முழுமையாக முடித்தவர்களுக்கு சான்றிதழ் மற்றும் அதிர்ஷ்ட குலுக்கல் பரிசு ஆகியவையும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.