Innospark பினாங்கு திட்டம் STEM மீதான ஆர்வத்தை மேம்படுத்தும்

Admin

ஜார்ச்டவுன் – பள்ளி மாணவர்களிடையே STEM(அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம்) மீதான ஆர்வத்தைத் தூண்டும் வகையில், டெக் டோம் பினாங்கு (TDP) ‘ Innospark Penang ‘ என்ற சிறப்பு முன்முயற்சியைத் தொடங்கியுள்ளது.

டெக் டோமில் புத்தாக்கத் திட்டங்கள் செயல்படுத்துவதன் மூலம் மாணவர்கள் STEM மீதான ஆர்வத்தைத் தூண்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, என டெக் டோம் வாரியத் தலைவரான இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் ப.இராமசாமி கூறினார்.

‘Innospark Penang ‘ என்பது மாணவர்களுக்கு இளம் வயதிலே படைப்பாற்றல் மற்றும் STEM ஆர்வத்தைத் தூண்டும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு தனித்துவமானத் திட்டமாகும்.

“மாணவர்களுக்கு குறியீடு(coding) குறித்த ஈர்க்கக்கூடிய மற்றும் அணுகக்கூடிய அறிமுகத்தை வழங்குவதன் மூலம், இளம் வயதிலே புத்தாக்கத் திறன் மற்றும் பிரச்சனைகளுக்குத் தீர்வுக் காணும் திறன்களைக் கண்டறிய அனுமதிக்கிறது.

“மேலும், அடுத்த தலைமுறையை டிஜிட்டல் உலகில் பங்களிப்பதற்கு சிந்தனை வளம் கொண்டவர்களாகவும், படைப்பாற்றல் கொண்டவர்களாகவும் சிறந்து விளங்குவதை உறுதி செய்வது எங்கள் பொறுப்பாகும்,” என்று டெக் டோமில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியின் அறிமுக விழாவில் இராமசாமி தனது உரையில் இவ்வாறு கூறினார்.

இந்நிகழ்ச்சியில், பத்து உபான் சட்டமன்ற உறுப்பினர் குமரேசன், கொம்தார் சட்டமன்ற உறுப்பினர் தேய் லாய் ஹெங், பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் சத்தீஸ் முனியாண்டி, ஆயிர் ஈத்தாம் சட்டமன்ற உறுப்பினர் ஜோசப் இங் சூன் சியாங் மற்றும் டேக் டோம் பினாங்கு தலைமை செயல் அதிகாரி கூ பூ வூய் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Innospark பினாங்கு திட்டம் மூன்று முக்கிய கூறுகளை உள்ளடக்கியுள்ளன.

“முதலாவது, இத்திட்டத்தில் இளம் மாணவர்களுக்கு ஒரு வேடிக்கையான மற்றும் ஈர்க்கக்கூடிய வகையில் கருத்துகளை அறிமுகப்படுத்த வடிவமைக்கப்பட்ட சில பயிற்சிப் பட்டறைகளை வழங்குகிறது.

“மாணவர்கள் மேக்கர் யூனோ முறை (குறியீடு மற்றும் மின்னணுவியலுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட இணக்கமான பலகை) அமைப்பைப் பயன்படுத்தி smart home concept உருவாக்கும் செயல்பாட்டில் கலந்து கொள்வர்.

“இதன் மூலம், மாணவர்கள் தங்கள் புத்தாக்கத் திறனை மேலும் மேம்படுத்த முடியும் மற்றும் அவர்களின் ‘ஸ்மார்ட் ஹோம்’ அமைப்பை உருவாக்கும் போது அவர்களின் படைப்பாற்றலையும் மேம்படுத்த முடியும்,” என்று அவர் கூறினார்.

‘புரோகிராமிங்’ உலகின் வெற்றிக்கு வழிகாட்டுதல் மிக முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம்.

“Innospark திட்டம் மாணவர்களை அனுபவமிக்க வல்லுநர்கள் மற்றும் கல்வியாளர்களுடன் இணைக்கிறது. அவர்களின் கற்றல் பயணம் விலைமதிப்பற்ற வழிகாட்டுதல், நுண்ணறிவு மற்றும் ஆதரவை மாணவர்களுக்கு வழங்குவர்.

“எங்கள் வழிநடத்துனர்கள் முன்மாதிரியாக செயல்படுவதோடு சவால்களை சமாளிக்க மாணவர்களுக்கு வாய்ப்புகள் அளிக்கிறார்கள்.

“மூன்றாவதாக, இப்போட்டியை நடத்துவதன் மூலம் மாணவர்களிடையே நல்லிணக்கத்தை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது, அவர்களின் வெற்றிக்கு நல்லிணக்கம் திறவுகோலாக அமைகிறது.

The

“நல்லிணக்கம் மற்றும் போட்டித்திறன் மூலம், இது மாணவர்களிடையே நட்புறவை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், அவர்களின் ஆக்கப்பூர்வமான சிந்தனைத் திறனையும் மேம்படுத்தும் என்று நம்பப்படுகிறது,” என்று அவர் மேலும் கூறினார்.

பினாங்கு மாநிலத்தில் உள்ள 80 தொடக்கப்பள்ளிகளைச் சேர்ந்த மொத்தம் 2,400 மாணவர்களை இந்தத் திட்டத்தில் பங்கேற்பர் என டேக் டோம் இலக்கு வைத்துள்ளது என்று கூ கூறினார்.

“ஏப்ரல் மாதம் தொடங்கி, டேக் டோம் இந்த திட்டத்தின் கீழ் வழிநடத்துனர்களுக்குப் பயிற்சி அளிக்கத் தொடங்கும்.

“மேலும், மே முதல் டிசம்பர் வரை, 80 தொடக்கப்பள்ளிகளில் இருந்து மாணவர்களுக்கு வழிநடத்துனர்கள் படிப்படியாக பயிற்சி அளிக்கத் தொடங்குவார்கள்.