KRT சமூக நல்லிணக்கத்தைப் பேணும் அமைப்பாகச் செயல்படுகிறது

Admin

பிறை – மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் இயோவ் தங்கள் குடியிருப்புப் பகுதிகளில் அமைக்கப்பட்டுருக்கும் ‘Kawasan Rukun Tetangga'(KRT) எனும் அமைப்புக்கு முழு ஆதரவை வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

KRT என்பது உள்ளூர் சமூகத்திற்கு மிகவும் நெருக்கமான ஒரு அமைப்பாகவும், நம் நாட்டில் உள்ள பல்லின சமூகத்தை ஒன்றிணைக்கும் ஒற்றுமையின் முகவராக செயல்படுகிறது என்று சாவ் கூறினார்.

“எனவே, மாநில அரசாங்கம் KRT ஏற்பாடு செய்யும் சமூக நிகழ்ச்சிகளை ஆதரிப்பதன் மூலம் அதன் ஈடுபாட்டை உறுதிசெய்கிறது.

“மேலும், பல KRT நடவடிக்கைகள் ஒருவருக்கொருவர் சமூக பாங்கான தொடர்புகளை உருவாக்கவும் ஒற்றுமையை வலுப்படுத்தவும் துணைபுரிகிறது.

“சமூக அடிப்படையிலான நடவடிக்கைகள் குடியிருப்பாளர்கள் ஒன்றிணைந்து ஒருவருக்கொருவர் வலுவான பிணைப்பை உருவாக்க முடிகிறது. சில சமயங்களில் நடத்தப்படும் கேளிக்கை நிகழ்ச்சிகள் அவர்களுக்கு மகிழ்ச்சியையும் அளிக்கிறது.

“அதுமட்டுமின்றி, நாம் பல்வேறு பின்னணிகள், மதங்கள் மற்றும் கலாச்சாரங்களைச் சேர்ந்த சமூகம் கொண்ட ஒரு நாட்டில் வாழ்கிறோம்.

“எனவே, நாம் வசிக்கும் இடத்தில் நட்புறவை வலுப்படுத்தவும், சமூக உணர்வை மேலோங்கச் செய்யவும் அவர்தம் குடியிருப்புப் பகுதியில் இருக்கும் KRT க்கு வலுவான ஆதரவை வழங்குவது நமது கடமையாகும்,” என்று KRT தாமான் புக்கிட் மின்யாக் ஏற்பாடு செய்த தீபாவளி திறந்த இல்ல உச்சரிப்பில் சாவ் இவ்வாறு கூறினார்.

இந்நிகழ்ச்சியில், புக்கிட் தெங்கா சட்டமன்ற உறுப்பினர் கூய் சியோ-லியுங், KRT தாமான் புக்கிட் மின்யாக் தலைவர் மதியழகன் கிருஷ்ணன் மற்றும் முதல்வரின் துணைவியார் தான் லீன் கீ ஆகியோரும் கலந்து கொண்டனர்.

மாநிலத்தில் செயல்படும் KRT அமைப்புகள், சமூகத்தில் ஏற்படும் ஏதேனும் சிக்கல்கள் அல்லது சிரமங்களுக்குத் தீர்வுக் காண தங்கள் தொகுதிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியிடம் தெரிவிக்குமாறும் சாவ் வலியுறுத்தினார்.

“இதன் மூலம் மாநிலத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் சமூகத்தில் ஏற்படும் பிரச்சனைகளுக்குத் தீர்வுக் காண சம்பந்தப்பட்ட துறைகள் மற்றும் முகவர்களுடன் தொடர்புக் கொள்ள முடியும்,” என்று அவர் மேலும் விளக்கமளித்தார்.