பத்து காவான் – மின் அளவீட்டு தொழில்நுட்ப நிபுணரான LEM நிறுவனம், பினாங்கில் US$17 மில்லியன் மதிக்கத்தக்க அதிநவீன தொழிற்சாலையை அதிகாரப்பூர்வமாகத் திறந்துள்ளது.
அதன் அதிநவீன உள்கட்டமைப்பு, சுற்றுச்சூழல் பாங்கான உற்பத்தி தொழில்நுட்பத்துடன் இணக்கம் கொள்கிறது. இது சிம்பாங் அம்பாட், வடக்கு பினாங்கு அறிவியல் பூங்காவில் அமைந்துள்ளது.
இந்த புதிய வசதி மலேசியாவில் மேம்படுத்தப்பட்ட LEM நிறுவனத்தின் முதல் உற்பத்தி ஆலையாகும் என அதன் தலைமைச் செயல் அதிகாரி Frank Rehfeld கூறினார்.
“இந்நிறுவனம் அதிநவீன வசதிகளில் தொடர்ந்து முதலீடு செய்வது இன்றியமையாதது. இதன் மூலம், வேகமாக வளர்ந்து வரும் சந்தைகளின் வரம்பிற்கு ஏற்ப உலகின் முன்னணி தயாரிப்புகளைத் தயாரிக்க முடியும்.
“எனவே, பினாங்கில் குறைக்கடத்தி உற்பத்தியில் பிராந்தியத்தின் நிபுணத்துவத்தை அங்கீகரிப்பதால் LEM நிறுவனம் கணிசமான முதலீட்டை வழங்குகிறது.
“இந்தப் புதிய தொழிற்சாலையை அமைப்பது LEM இன் வளர்ச்சித் திட்டத்தை பிரதிபலிக்கிறது. இந்நிறுவனத்தின் முக்கிய தயாரிப்புகள், தற்போதைய மற்றும் மின்னழுத்த சென்சர்களுக்கான உலகளாவிய தேவையைப் பூர்த்தி செய்வதன் மூலம் இயக்கப்படுகிறது.
“மேலும், தொழில்துறை, இயக்கம் மற்றும் ஆற்றல் உற்பத்தி ஆகியவற்றின் தேவைக்கேற்ப எங்களின் உற்பத்தி பொருட்கள் ஆட்டோமேஷன், ஆட்டோமோட்டிவ், இழுவை மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உட்பட அனைத்துத் துறைகளிலும் பயன்படுத்தப்படும்.
எங்கள் தயாரிப்புகளின் தேவையும் அதிகரிக்கிறது,” என்று Rehfeld LEM நிறுவனத்தின் அடிக்கல் நாட்டு விழாவின் போது தனது உரையில் இவ்வாறு தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ், மலேசியாவுக்கான சுவிஸ் தூதர் ஆண்ட்ரியா ரெய்ச்லின், பினாங்கு வர்த்தகம், தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புறநகர் மேம்பாட்டு ஆட்சிக்குழு உறுப்பினர் ரஷிட் ஜினோல், புக்கிட் தம்புன் சட்டமன்ற உறுப்பினர் கோ சூன் ஐக், இன்வெஸ்ட் பினாங்கின் தலைமைச் செயல் அதிகாரி டத்தோ லூ லீ லியான், பினாங்கு மிடா மேம்பாட்டு ஆணையத்தின் இயக்குநர் முஹம்மது கடாபி சர்தார் முகமது, LEM நிறுவன இயக்குநர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Rehfeld கூற்றுப்படி, புதிய 12,000 சதுர மீட்டர் ஆலை அடுத்த சில ஆண்டுகளில் 500 வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் விழாவை சிறப்பித்த மாநில முதலமைச்சர் சாவ், பினாங்கிற்கு LEM-ஐ வரவேற்பதில் மகிழ்ச்சி அடைந்தார்.
“LEM போன்ற அனைத்துலக புகழ்பெற்ற நிறுவனம், அதன் தரத்திற்கே சிறந்த நற்பெயரைக் கொண்டுள்ளது. இந்நிறுவனம் பினாங்கில் முதலீடு செய்யத் தேர்ந்தெடுத்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். அதோடு, நமது மக்களின் நிபுணத்துவமும் அங்கீகரிக்கப்படுகிறது.
“LEM நிறுவனத்தின் புதிய வசதி அதன் வளர்ச்சிப் பாதையில் மற்றொரு முன்னேற்றத்தைக் குறிக்கிறது. இது பிராந்தியத்தில் கணிசமான முதலீட்டைப் பிரதிபலிக்கிறது,” என்று சாவ் கூறினார்.
“மேலும், பினாங்கு மாநிலம் சுற்றுச்சூழல் பாங்கான தொழில்துறை அமைப்புக்குப் புகழ்பெற்றது. தொழில்துறை நிறுவனங்களுக்குத் தேவையான அடுத்த தலைமுறை தொழில்நுட்பங்கள் மற்றும் வளமான வளர்ச்சியை ஆதரிக்கும் திறன்களும் கொண்டுள்ளது.
“எனவே, கிழக்கு சிலிக்கான் பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படும் பினாங்கில் முதலீடு செய்யும் LEM நிறுவனம் பல நன்மைகள் பெறும்,” நம்பிக்கை தெரிவித்தார்.
பினாங்கில் LEM நிறுவனத்தின் முதலீடு மாநிலப் பொருளாதாரத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குவதோடு மட்டுமல்லாமல், புத்தாக்கத்தைத் தூண்டும், அறிவு பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் மற்றும் மாநிலத்தின் தொழிலாளர்களின் திறன்களை உயர்த்தும் என்று சாவ் தனது நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.
LEM மற்றும் பினாங்கு அரசாங்கத்திற்கு இடையிலான கூட்டமைப்பு, அதன் நிலையான வளர்ச்சி, தொழில்நுட்ப முன்னேற்றம் மற்றும் பொருளாதார வளைர்ச்சியைப் பிரதிபலிக்கிறது, என்றார்.