MIFA ஏற்பாட்டில் இரண்டாவது முறையாக தேசிய ரீதியிலான காற்பந்து போட்டி பினாங்கில் நடைபெறவுள்ளது

Admin

ஜூரு – தேசிய ரீதியில் தமிழ்ப்பள்ளி இடையிலான 12 வயதுக்குட்பட்ட காற்பந்து போட்டி பினாங்கு காற்பந்து சங்கம்(FAP), பினாங்கு இந்தியர் காற்பந்து சங்கம்(PIFA, மலேசிய இந்தியர் காற்பந்து சங்கம்(MIFA) ஒருங்கிணைப்பில் இரண்டாவது முறையாக பினாங்கு மாநிலத்தில் நடைபெறும்.

வருகின்ற டிசம்பர் 23 மற்றும் 24 தொடங்கி இரண்டு நாட்களுக்கு பினாங்கு, அரேனா கோப்பா அரங்கத்தில் நடைபெறும்.

MIFA துணைத் தலைவர் மற்றும் இப்போட்டியின் ஏற்பாட்டுக் குழுத் தலைவர் ஸ்ரீ சங்கர்.

இம்முறை நடத்தப்படும் இந்தப் போட்டியில் பல மாநிலங்களைப் பிரதிநிதித்து ஆண்களுக்கானப் பிரிவில் 40 குழுக்களும் மற்றும் பெண்களுக்கானப் பிரிவில் 20 குழுக்களும் கலந்து கொள்வர் என MIFA துணைத் தலைவரும் இப்போட்டியின் ஏற்பாட்டுக் குழுத் தலைவருமான ஸ்ரீ சங்கர் தெரிவித்தார்.

தேசிய ரீதியில் நடத்தப்படும் இந்தப் போட்டியில் கெடா, பேராக், பினாங்கு, சிலாங்கூர், பகாங், கோலாலம்பூர், நெகிரி செம்பிலான், ஜோகூர் மற்றும் மலாக்கா என ஒன்பது மாநிலங்களைச் சேர்ந்த தமிழ்ப்பள்ளி மாணவர்கள் களம் இறங்குகின்றனர்.

முதல் முறையாக MIFA ஏற்பாட்டில் தமிழ்ப்பள்ளி மாணவிகளுக்காக காற்பந்து போட்டி நடத்தப்படுகிறது. பெண்களுக்கானப் பிரிவில் 20 குழுக்கள் கலந்து கொள்கின்றனர்.
இது ஆண், பெண் என பாலினம் சாராமல் மாணவர்களிடையே காற்பந்து துறையில் அவர்களின் ஆர்வம் மேலோங்கி காணப்படுவதை நன்கு பிரதிபலிக்கிறது என ஸ்ரீ சங்கர் கூறினார்.

“இந்த மாதிரியானப் போட்டிகள் நடத்துவதன் மூலம் நமது இந்திய மாணவர்களிடையே விளையாட்டுத் துறையில் மேம்பாடு காண முடியும்.

“மேலும், நமது இளம் மாணவர்களைச் சுறுசுறுப்பான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்ற ஊக்குவிப்பதோடு, எதிர்கால சந்ததியினர் விளையாட்டுத் துறையில் கால் தடம் பதிக்கப் பயனளிக்கும், என்றார்.