PACE திட்டம் விளையாட்டு வீரர்களின் சிறந்த எதிர்காலத்திற்கு வழிகாட்டி

Admin

 

மாநில இளைஞர் மற்றும் விளையாட்டு ஆட்சிக்குழு உறுப்பினர் சூன் லிப் சீ, ‘பினாங்கு தடகள தொழில் கல்வி’ (PACE) திட்டத்தின் வழி பெறுநர்களை சம்பந்தப்பட்ட விளையாட்டுகளில் சிறந்து பிரகாசிக்க வைக்கவும் வாழ்க்கையின்  குறிக்கொள்களை மேம்படுத்தவும்  ஊக்குவிப்பதாக கூறினார்.

ஆசை, முயற்சி, நம்பிக்கை மற்றும் உடல் வலிமை (ஆரோக்கியம்) போன்ற குறிக்கோள்களை முன்னிலைப்படுத்தி, அவை வெற்றியை நோக்கி பயணிக்க உதவும் என சூன் வலியுறுத்தினார்.

“முதலில், நீங்கள் சாதிக்க வேண்டும் என ஆசைக் கொள்ள வேண்டும். இந்த ஆசை நீங்கள் செல்ல விரும்பும் உயர்நிலைக்கு கொண்டு செல்ல வழிவகுக்கும். இரண்டாவதாக, நீங்கள் தொடர்ந்து மன வலிமையுடன் போராட வேண்டும்.

“மூன்றாவதாக, நம்பிக்கை கொள்ள வேண்டும். உங்களால் செய்ய முடியும் என்று நீங்கள் நம்ப வேண்டும். நான்காவதாக உங்கள் உடல் வலிமை பெற
உடற்பயிற்சி செய்து உங்கள் ஆரோக்கியத்தை  கவனித்துக் கொள்ள வேண்டும்.

“இந்த அனைத்து கூறுகளும்
ஒரு விளையாட்டு வீரர்கள் வெற்றியின் பயணத்தை நோக்கி செல்ல வித்திடும்,” என  ஜூம் வழியாக ‘பினாங்கு தடகள தொழில் கல்வி’ திட்டத்தில் விளையாட்டு வீரர்களுடனான  அமர்வின் போது சூன் லிப் சீ இவ்வாறு குறிப்பிட்டார்.

முன்னதாக ஜூன்,12 அன்று நடைபெற்ற மெய்நிகர் ‘PACE’ திட்டம் மூலம், மாநில அரசு மீண்டும் மாநில விளையாட்டு வீரர்களின் நல்வாழ்வை உறுதி செய்யும் என்பதை  உறுதிப்படுத்தியது.

இதற்கிடையில், பினாங்கு மாநில விளையாட்டு கவுன்சில் இயக்குனர் ஹாரி சாய், PACE திட்டத்தின் அனைத்து நிறுவன ஆதரவாளர்களின் தொடர்ச்சியான ஆதரவுக்கு நன்றி தெரிவித்தார்.

“கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்ட பின்னர் PACE திட்டத்தை விரைவாக செயல்படுத்த உதவுவதில் எங்கள் ஆதரவாளர்கள் முக்கிய பங்கு வகித்துள்ளனர்.

“எங்களுக்கு பலத்தின் தூணாக இருந்ததற்கு நன்றி. எங்கள் விளையாட்டு வீரர்களை விளையாட்டிலும் அவர்களின் கல்வியிலும் சிறப்பாக செயல்பட உங்கள் பங்களிப்பு அளப்பரியது.

“விளையாட்டு வீரர்களின் எதிர்காலம் பிரகாசமாக அமைகிறது. இதன் மூலம், பினாங்கு மாநிலத்தில் விளையாட்டுத் துறையில் இன்னும் அதிகமான  சாதனைகள் படைக்க முடியும்.

“மேலும், விளையாட்டு வீரர்களிடம் இத்துறையின் எதிர்காலத்தை ஒப்படைக்கிறோம். இதன் வாயிலாக  எங்களுக்கு கௌரவத்தையும் பெருமையையும் சேர்ப்பீர்கள்,” என நம்பிக்கை கொள்வதாக சாய் கூறினார்.

அமெரிக்கா, லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறும் 2028 ஒலிம்பிக்கில் பங்கேற்கெடுத்து வெற்றி கோப்பை பெற வேண்டும் என்ற ஆசையை தேசிய அம்பு ஏய்தல் வீரர் கம்பேஸ்வரன் மோகனராஜா தெரிவித்தார்.

“அம்பு ஏய்தல் போட்டியில் இரண்டு பிரிவுகள் உள்ளன. அவை ‘ரீகேவ்’ மற்றும் ‘கொம்பாவுன்’ ஆகும். இதுவரை, ஒலிம்பிக் போட்டியில் ‘ரீகேவ்’ பிரிவு  மட்டுமே உள்ளது.

“2028 ஒலிம்பிக்கில்,  முதல் முறையாக கொம்பாவுன் பிரிவு அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இந்த விளையாட்டு பிரிவு இடம்பெறாவிட்டால் நான் ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப்பில் கவனம் செலுத்துவேன்,” என்று கம்பேஸ்வரன் கூறினார். அவர் தற்போது மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தில் தனது மேல்கல்வியைத் தொடர்கிறார்.

2019-ஆம் ஆண்டு பிலிப்பைன்ஸில் நடைபெற்ற சீ விளையாட்டு போட்டியில் தேசிய அம்பு எய்தல போட்டியில் தங்கப்பதக்கம் வென்றது அவரது மிக உயரிய சாதனையாகும்.

கம்பேஸ்வரனைத் தவிர, தேசிய தரைப்பந்து வீரர்களான சோங் ஹான் மற்றும் பெனடிக்ட் யோ சுன் கீட் மற்றும் ஹாக்கி வீரர்,  இசினிசா இஸ்மாயில் அவர்களும் இந்த அமர்வில் கலந்து கொண்டனர்.