ஜார்ச்டவுன் – பினாங்கு மாநில அரசு அனைத்து வணிக தளங்களும், Penang Contact Tracer’ அல்லது PGCare செயலி பயனர்களும் மத்திய அரசு உருவாக்கிய MYSEJAHTERA செயலியை பயன்படுத்துமாறு அறிவுருத்தியது.
“மாநிலம் முழுவதும் உள்ள ஒவ்வொரு வணிகத் தளமும் MYSEJAHTERA செயலியைப் பயன்படுத்தி தங்களின் வணிகத் தளத்திற்கு வருபவர்களின் நுழைவை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். மத்திய அரசு கூடிய விரைவில் நாடு முழுவதும் இந்த செயலி பயன்பாடு குறித்து கட்டாயமாக்க உத்தேசித்துள்ளது.
“பினாங்கு வாழ் மக்கள் மற்றும் அனைத்து வணிக தளங்களிலும் MYSEJAHTERA செயலியைப் பயன்படுத்த தொடங்க வேண்டும்,” என மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் யாவ் கேட்டுக்கொண்டார்.
“இம்மாநிலத்தை சேர்ந்த பொது மக்கள் MYSEJAHTERA செயலியைப் பயன்படுத்தாமல் எதிர்காலத்தில் பிரச்சனையை எதிர்நோக்க வேண்டாம் என்பதால் மத்திய அரசின் அறிவிப்புக்கு இணங்க பினாங்கில் இச்செயலியை பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்,” என முதல்வர் தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த கொன் யாவ், இம்மாநிலத்தில் பொது மக்கள் MYSEJAHTERA செயலியை முழுமையாக பயன்படுத்த தொடங்க மத்திய அரசு சில கால அவகாசம் கொடுக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
“வருகின்ற ஆகஸ்ட் மாதம் 31-ஆம் தேதிக்குள் அனைத்து தரப்பினரும் இந்த செயலியை முழுமையாக பயன்படுத்த தொடங்க ஏதுவாக இருக்கும் என விளக்கமளித்தார்.
“கோவிட்-19ஐ எதிர்த்து போராடும் முயற்சியில் இந்த PGCare செயலி மலேசிய சுகாதார அமைச்சுக்கு இத்தொற்று குறித்த தொடர்பை கண்காணிக்க முக்கிய பங்கு வகித்தது.
இந்த PGCare செயலி பயன்பாடு பொது மக்கள் மற்றும் பினாங்கு வருகை தரும் பயணர்களிடம் இருந்தும் மிகுந்த வரவேற்பை பெற்றது. மேலும் இந்த செயலி நடத்துநர் மற்றும் பயன்பாட்டாளர்கள் அனைவருக்கும் பாராட்டினை தெரிவித்தார்.
இன்று (5/8/2020) நண்பகல் வரை PGCare செயலியில் 36,521 வணிக தளங்களும் 1,355,596 பயனர்களும் பதிவுச்செய்துள்ளனர். அதேவேளையில் கடந்த மே,15 முதல் 16,484,326 நுழைவு (check-in) பதிவுச்செய்யப்பட்டது.
தற்காப்பு அமைச்சர் கூடிய விரைவில் MYSEJAHTERA செயலியைப் அரசாங்கப் பதிவேட்டில் இடம்பெறச் செய்வதை தேசிய சட்டத்துறை தலைவர் உறுதிபடுத்துவார் என அறிவித்தார்.
இந்த MYSEJAHTERA செயலியைக் கட்டாயம் அனைத்து வணிகத் தள உரிமையாளர்களும் கொண்டிருத்தல் அவசியமாகும்.
நாட்டில் கோவிட்-19 பெருந்தொற்று பரவுவதைக் கண்காணிக்க உதவும் பொருட்டு MYSEJAHTERA செயலியின் பயன்பாடு அறிமுகப்படுத்தப்பட்டது.
இருப்பினும், புறநகர்ப் பகுதிகளில் இணைய வசதி இல்லாத நிலையில் அங்கு MYSEJAHTERA செயலி பயன்பாடு இல்லாமல் அவர்கள் வழக்கம் போல வருகைப் புத்தகத்தில் தங்களின் விவரக் குறிப்புகளை எழுத்து வடிவில் பதிவிட்டுச் செல்ல அனுமதி வழங்கப்படுகிறது.