PH மீண்டும் ஆட்சி அமைத்தால் சமூகநலத் திட்டங்கள் மறு ஆய்வு

புக்கிட் தெங்கா – நம்பிக்கை கூட்டணி அரசாங்கம் மீண்டும் மத்திய அரசாங்கத்தை ஆள்வதற்கான அதிகாரம் வழங்கப்பட்டால், வசதிக் குறைந்த மக்களின் சமூகநலன் சார்ந்த பிரச்சனைகளில் கவனம் செலுத்தப்படும் என்று பத்து காவான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளர் சாவ் கொன் இயோவ் கூறினார்.

சாவ் கூற்றுப்படி, இன்று பல பகுதிகளுக்குச் சென்றபோது, ​​​​வறுமை கோட்டின் கீழே வாழும் ஒரு சிலர் இன்னும் மத்திய அரசின் சமூகநலத்திட்ட உதவிகளுக்காக காத்திருக்கிறார்கள், என்றார்.

“அரசு நிறுவனங்கள், நிதி மற்றும் பொருளாதார மேலாண்மை ஆகிய இரண்டிலும் ஏற்படும் மாற்றத்திற்கு ஏற்ப, மக்களின் சமூகநலன் திட்ட உதவிகளை மீண்டும் மறு ஆய்வு செய்ய வேண்டும், என்றார்.

“எனவே, மக்களுக்கு சமூகநலத் திட்டங்கள் வழங்கப்படுவதை உறுதிசெய்ய அதிக ஒதுக்கீடுகள் பகிர்ந்தளிக்கப்பட்டால் சிறப்பாகும்,” என சுங்கை செமிலாங்கில் சில குடியிருப்பாளர்களை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் சாவ் பேசினார்.

மேலும், புக்கிட் தெங்கா மாநில சட்டமன்ற உறுப்பினர், கூய் சியோவ் லியோங்; பிறை சட்டமன்ற உறுப்பினர், பேராசிரியர் ப.இராமசாமி;
பாகான் ஜெர்மல் சட்டமன்ற உறுப்பினர், சூன் லிப் சீ மற்றும் நம்பிக்கை கூட்டணி ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் கருத்துரைத்த கொன் இயோவ், மத்திய அரசிடம், குறிப்பாக சமூக நலத் துறையிடம் (ஜே.கே.எம்) கோரப்படும் சமூகநலத்திட்ட உதவிகள் விரைவாகப் பெறுவதை உறுதிபடுத்த வேண்டும் என்று பொது மக்கள் வேண்டுகோளையும் முன் வைத்தார்.

அதன் பிறகு, உள்ளூர் வணிகர்கள் மற்றும் குடியிருப்பாளர்களைச் சந்திப்பதற்காக அவர் அப்பகுதியில் நடைப்பயணம் மேற்கொண்டார்.