ஜார்ச்டவுன் – ஜாலான் உத்தாமாவில் அமைந்துள்ள ‘The Pure Lotus Hospice of Compassion’ எனும் நோயாளிகளுக்கான கருணை இல்லம், புற்றுநோய் நோயாளிகளுக்கு அப்பால் தனது சேவைகளை விரிவுப்படுத்தும் நோக்கத்தில், புதிய ரிம10 மில்லியன் மதிப்பிலான மையத்தை நிர்மாணிக்கவுள்ளது. இத்திட்டம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதுள்ள பராமரிப்பு மையத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள இந்த புதிய மையம், வீடற்ற தனிநபர்கள் மற்றும் வாழ்நாள் முழுவதும் ஆதரவு தேவைப்படும் முதியவர்களுக்குக் கருணை அடிப்படையிலான பராமரிப்பை வழங்க இம்மையம் அனுமதிக்கும்.
மேலும், நன்கொடை வள்ளள்கள், நிறுவனங்கள் மற்றும் மாநில அரசின் தாராளமான பங்களிப்புகள் மூலம் இந்த மைல்கல் சாத்தியமானது.
இந்தக் கருணை இல்லத்தின் தலைவரான வெனரபள் லியான் ஷிஹ், அனைவரும் வழங்கிய ஆதரவுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். இத்திட்டத்தின் விரிவாக்கம் மற்றும் மேம்பாட்டிற்காக நிதி திரட்டும் தொடர்ச்சியான முன்முயற்சியையும் பாராட்டினார்.
“எங்கள் கருணை இல்லத்தின் தூண்களாக இருந்த எங்கள் ஆதரவாளர்கள், தன்னார்வலர்கள் மற்றும் நன்கொடையாளர்களுக்கு என் இதயப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
“அனைவரின் அசைக்க முடியாத ஆதரவு இல்லாமல் நாங்கள் இன்று இங்கு இருந்திருக்க முடியாது,” என்று அடிக்கல் நாட்டு விழாவின் போது அவர் கூறினார்.
தற்போதைய வீட்டிலிருந்து நடந்து செல்லும் தூரத்தில் அமைந்துள்ள புதிய மையம், 33 நோயாளிகளுக்கு இடமளிக்கும் என்றும், ஆயுளைக் கட்டுப்படுத்தும் நோய்களால் பாதிக்கப்பட்ட அதிகமான நபர்கள் தங்களுக்குத் தேவையான பராமரிப்பைப் பெறுவதை உறுதி செய்யும் என்றும் அவர் மேலும் கூறினார்.
லியான் ஷிஹ், தற்போது இக்கருணை இல்ல பராமரிப்பில் உள்ள புற்றுநோய் நோயாளிகளின் சூழ்நிலையையும் எடுத்துரைத்தார்.
“இந்த இல்ல மேம்பாட்டிற்குப் பல சவால்கள் இருந்தபோதிலும், நமது கருணை இல்லத்தின் சூழல் நேர்மறையை ஊக்குவிக்கிறது,” என்று அவர் கூறினார். அடிக்கல் நாட்டு விழாவை நடத்தியதற்காக மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவுக்கு நன்றித் தெரிவித்தார்.
இந்தக் கருணை இல்லத்திற்கு ஆதரவு அளிக்கும் வகையில், புதிய மையத்தின் கட்டுமானத்திற்கு முதலமைச்சர் ரிம100,000 மானியத்தை அறிவித்தார்.
“பினாங்கில் முதுமை மக்கள்தொகை அதிகரித்து வருவதால், தரமான நோய்த்தடுப்பு சிகிச்சைக்கான தேவை அவசியமாகிறது.
“முதியோர் மற்றும் கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் நல்வாழ்வை நாம் முன்னுரிமைப்படுத்த வேண்டும்,” என்று அவர் கூறினார்.
இந்தக் கருணை இல்லத்தை ஆதரிப்பதிலும், பாதிக்கப்படக்கூடிய நபர்களின் நலனை உறுதி செய்வதிலும் பினாங்கு அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.
முதுமையானவர்களைப் பராமரிப்பதன் முக்கியத்துவத்தையும் அவர் ஒப்புக்கொண்டார். சமூகத்திற்குப் பயனளிக்கும் வகையில் முதுமையானவர்களின் நலனுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் பல்வேறு கொள்கைகளை மாநில அரசு வகுத்து வருவதாகக் குறிப்பிட்டார்.
“மாநில அரசு தொடர்ந்து இந்தக் கருணை இல்லத்திற்கு உதவி செய்வதோடு அதன் பராமரிப்பில் உள்ளவர்களின் நல்வாழ்வை உறுதி செய்வதற்குத் தேவையான ஆதரவை வழங்கும்,” என்று அவர் மேலும் கூறினார்.
மேலும், துணை நிதி அமைச்சரும் தஞ்சோங் நாடாளுமன்ற உறுப்பினருமான லிம் ஹுய் யிங் நிதி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் கட்டிட நிதிக்கு ரிம50,000 பங்களித்தார்.
“நன்கொடைகள், தன்னார்வத் தொண்டு அல்லது விழிப்புணர்வு மூலம் அனைவரும் தங்கள் ஆதரவை வழங்குமாறு நான் கேட்டுக்கொள்கிறேன்.
“வாழ்க்கையின் இறுதிக்கால பராமரிப்பு என்பது வெறும் மருத்துவத் தேவை மட்டுமல்ல – அது ஒரு தார்மீகப் பொறுப்பு” என்று அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என். இராயர், மாநில இளைஞர், விளையாட்டு மற்றும் சுகாதார ஆட்சிக்குழு உறுப்பினர் டேனியல் கூய், மாநில சமூக நல மேம்பாடு மற்றும் இஸ்லாம் அல்லாதோர் விவகார ஆட்சிக்குழு உறுப்பினர் லிம் சியூ கிம் மற்றும் கொம்தார் சட்டமன்ற உறுப்பினர் தே லாய் ஹெங் ஆகியோரும் கலந்து கொண்டனர்.