பினாங்கு மாசற்ற பசுமையாக மாநிலமாக மாற்றியமைக்கும் முயற்சியில் அடிப்படை பொருட்களில் இருந்து கழிவுகளை தனிமைப்படுத்தும் திட்டம் (Projek Perintis Dasar Pengasingan Sisa di Punca) தொடங்கியது. பினாங்கு மாநிலத்தில் ஒவ்வொரு நாளும் சராசரிக்கு 1700 டன் குப்பைகள் புலாவ் பூரோங்கில் அகற்றப்படுகிறது. இதனைக் குறைக்கும் நோக்கில் மாநில அரசு இப்புதிய திட்டத்தை அமல்படுத்த இலக்கு கொண்டுள்ளதாக இந்நிகழ்வின் அறிமுக விழாவில் தெரிவித்தார் பினாங்கு மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங்.
2016-ஆம் ஆண்டு இரண்டு ஊராட்சி மன்றங்களான பினாங்கு மாநகர் மன்றம் மற்றும் செபராங் பிறை நகராண்மைக் கழகம் ஆகியவை தத்தம் ரிம 100.31 லட்சம் மற்றும் ரிம 98.99 லட்சம் திடக் கழிவு மற்றும் பொது சுத்திகரிப்பு நிர்வகிப்பதற்கு செலவிடுகிறது என்றால் குறிப்பிடத்தக்கது. ஊராட்சி மன்றங்களின் இச்சுமையைக் குறைக்க 3R திட்டம், உரமாக்கல் மற்றும் இதர திட்டங்கள் பசுமையான தூய்மையான சுற்றுச்சுழலை உருவாக்கும் எண்ணத்தில் மாநில அரசு இம்முயற்சியை கையாளுகின்றது. மேலும், நெகிழிப்பை பயன்பாட்டு தடை, உணவுவை முழுமையாக உண்ணுதல் போன்ற திட்டங்களும் கழிவுப்பொருட்களைக் குறைக்க துணைபுரியும் என நம்பிக்கை தெரிவித்தார் மாநில முதல்வர்.
தேசிய அளவினைக் காட்டிலும் பினாங்கு மாநிலத்தில் மறுப்பயனீடு திட்டம் 32% அதிகரித்துள்ளது. அடிப்படை பொருட்களில் இருந்து கழிவுகளைத் தனிமைப்படுத்தும் திட்டம் முதல் ஐந்து மாதங்களுக்கு தோட்டப்புற வீடுகள், தாமான், அடுக்குமாடி குடியிருப்பு, தொழிற்சாலைகள், உணவகங்கள், அரசு அலுவலகங்கள் என இரண்டு ஊராட்சி மன்றங்களால் கழிவுப்பொருட்கள் சேகரிக்கப்பட்டு பரிசீலனைச் செய்யப்படும் என கூறினார் உள்ளூராட்சி, போக்குவரத்து மற்றும் வெள்ள நிவாரண ஆட்சிக்குழு உறுப்பினர் சாவ் கொன் யாவ். இம்மாதிரியான திட்டத்தின் வழி, புவி வெப்பமடைதலை குறைக்க முடியும் என்பதையும் பினாங்கு மாநிலத்தை தூய்மை, பசுமை, பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியமாக மாற்றியமைக்க முடியும் என்பது வெள்ளிடைமலை. இந்நிகழ்வுக்கு ஏற்பாடுச் செய்த சங்காட் சமூக பாதுகாப்பு மற்றும் முன்னேற்றம் கழகத்தை பாராட்டினார் ஆட்சிக்குழு உறுப்பினர் சாவ் கொன் யாவ். இந்நிகழ்வில் செபராங் பிறை நகராண்மைக் கழகத் தலைவர் மைமுனா முகமது சாரிப், ஜாவி சட்டமன்ற உறுப்பினர் சூன் லிப் சீ மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.