செபராங் பிறை நகராண்மைக் கழக ஏற்பாட்டில் கடந்த அக்டோபர் 22-ஆம் திகதி புக்கிட் மெர்தாஜாம் மைடின் மால் அரங்கத்தில் அனைத்துலக கழிவறை தினம் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வினை அதிகாரப்பூர்வமாக துவக்கி வைத்தார் பினாங்கு மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி. பினாங்கு மாநிலத்தை தூய்மை, பசுமை, ஆரோக்கியம், பாதுகாப்பு நிறைந்த மாநிலமாக உருமாற்றும் முயற்சியில் இத்திட்டமும் திகழ்கிறது என தமதுரையில் கூறினார். இதனிடையே, பொதுமக்களிடையே கழிவறையின் முக்கியத்துவத்தையும் அதனை பாதுகாக்கும் விழிப்புணர்வையும் மேலோங்க இத்திட்டம் ஊந்துகோளாக அமையும் என சூளுரைத்தார்
இவ்வாண்டுக்கான “Tandas Bestari Penang Lestari” எனும் கருப்பொருளுடன் அனைத்துலக கொண்டாட்டத்தை மேலும் மெருகூட்டும் வகையில் பொது இடங்களில் கழிவறை தூய்மை பேணும் நோக்கத்தில் போட்டி நடத்தப்பட்டது. இப்போட்டி உணவகம், தங்கும்விடுதி, மருத்துவமனை, எரிவாயு நிலையங்கள், அரசு அலுவலகங்கள், பள்ளிக்கூடங்கள், பேரங்காடிகள், மசூதிகள் மற்றும் பொது கழிவறைகள் என ஒன்பது குழுக்களாக நடத்தப்பட்டது. பினாங்கு ஊராட்சி மன்ற அதிகாரிகள் பெருநிலம் மற்றும் தீவுப் பகுதி என அனைத்து இடங்களுக்கு நேரடியாக சென்று கழிவறைகளை மதீப்பீடு செய்து வெற்றியாளர்களை தேர்வுச் செய்தனர். ஒவ்வொரு பிரிவுகளுக்கு ஐந்து வெற்றியாளர்களுக்கு ரொக்கப்பணமும் சான்றிதழும் மாநில இரண்டாம் துணை முதல்வர் எடுத்து வழங்கினார். இத்திட்டத்தில் அடுத்தாண்டு இன்னும் பல இடங்களை இணைக்க எண்ணம் கொண்டுள்ளதாக கூறினார் ஆட்சிக்குழு உறுப்பினர் சாவ் கொன் யாவ்.
இதனிடையே, பொதுமக்களின் பங்களிப்பு, ஒத்துழைப்பு மற்றும் விழிப்புணர்வு இத்திட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. பினாங்கு மாநிலத்தை அனைத்துலக ரீதியில் வளர்ச்சியடைந்த அறிவார்ந்த மாநிலமாக உருமாற்றும் இலக்கில் இக்கழிவறை தினக் கொண்டாட்டமும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்நிகழ்வில் பினாங்கு மாநில ஆட்சிக்குழு உறுப்பினர், செபராங் பிறை நகராண்மைக் கழக செயலாளர், பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் அ.தனசேகரன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர்.