அனைத்துலக மகளிர் தினக் கொண்டாட்டம்

Admin

சிறந்த நாட்டையும் சிறந்த சமுதாயத்தையும் உருவாக்குவதில் பெண்கள் ஆற்றும் சேவை அளப்பரியது என்பதனையே ‘மாதராய் பிறந்திட மாதவம் செய்திட வேண்டும்’ என்ற பொன்மொழி சித்தரிக்கிறது. இன்றைய காலக்கட்டத்தில் கல்வி, பொருளாதாரம், அரசியல், திருமணம், வாழ்வியல் என அனைத்து நிலையிலும் பெண்கள் பீடுநடைப் போட்டு வருகின்றனர் என்பது பாராட்டுக்குரியது. ஆண்டுதோறும் மார்ச் 8ஆம் திகதியானது, உலக மகளிர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அவ்வகையில் கடந்த மார்ச் 8-ஆம் திகதி அனைத்துலக மகளிர் தினத்தைக் கொண்டாடிய அனைவருக்கும் பாடாங் கோத்தா சட்டமன்ற உறுப்பினர் மதிப்பிற்குரிய சாவ் கொன் யாவ் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டதோடு சாவ்ராஸ்தா மார்க்கெட்க்கு வருகைப் புரிந்து 500 மலர் கொத்துகளை மகளிர்களுக்கு அன்பளிப்பாக வழங்கினார். இதன் மூலம் பெண்கள் நாட்டிற்காகவும் வீட்டிற்காகவும் அளிக்கும் பங்களிப்பு அங்கீகரிக்கப்படுவதாகக் குறிப்பிட்டார்.

 

 

தொடர்ந்து ஜனநாயக செயல்முறையில் பெண்களின் பங்கு அளப்பரியது எனத் தெரிவித்தார். மேலும் பெண்கள் அரசியல் விடயங்களில் அதிகமான கவனம் செலுத்துவதோடு நாட்டின் வளர்ச்சியிலும் பங்களிப்பை வழங்க வேண்டுகோள் விடுத்தார். இன்றைய நிலையில் பெண்கள் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கினாலும் குடும்பப் பொறுப்புகளினால் பலர் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கின்றனர். எனவே, பெண்களின் பிரச்சனையைக் களையும் பொருட்டுக் குழந்தை பராமரிப்பு மையங்கள் அமைக்கப்படவுள்ளதாகக் குறிப்பிட்டார். பினாங்கு மாநிலத்தை பொருத்தமட்டில் ஆண்களைக் காட்டிலும் பெண்களே அதிகமான வாக்களிப்பை அளிக்கவுள்ளனர், அதாவது  429 144 வாக்காளர்கள்  51.42% ஆகும். இந்த 5 ஆண்டு கால மக்கள் கூட்டணியின் ஆட்சிக் கீழ் பெண்களுக்காகப் பல அமைப்புகள் அமைத்ததோடு பல பயன்தரும் நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது. எனவே பினாங்கு மாநிலத்தின் தலைமைத்துவத்தைப் பெண்கள் நிர்ணயிக்கின்றனர் என்பது வெள்ளிடைமலையாகும்.