அரசு சாரா அமைப்புகளின் பங்களிப்பு சமூக வளர்ச்சிக்கு வித்திடும் – சாவ்

Admin

 

பிறை – ஜாலான் பாரு, ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயம் இந்து மதம் சார்ந்த நடவடிக்கைகள் மட்டுமின்றி இந்திய சமூகத்தின் முன்னேற்றத்திற்குப் பல சமூகநலத் திட்டங்களையும் வழிநடத்தி வருகிறது. ஆண்டுத்தோறும் இந்த ஆலய நிர்வாகத்தின் கீழ் அரசு சாரா இயக்கங்களின் நடவடிக்கைகளுக்கு நன்கொடைகள்; வழிபாட்டு தலங்களுக்கான நன்கொடைகள், மாணவர்களுக்கான கல்வி நிதியுதவி மற்றும் பல சமூகநல திட்டங்களை முன்னெடுத்துச் செல்கிறது.

“இது மாநிலத்தின் பினாங்கு2030 இலக்குக்கு ஏற்ப மாநில வளர்ச்சி, பன்முகத்தன்மை மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்த வலியுறுத்துகிறது,” என பராமரிப்பு அரசாங்கத்தின் மாநில முதலமைச்சருமான மேதகு சாவ் கொன் இயோவ் ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாம், பல் மருத்துவம் & குடும்ப தினம் 2023 நிகழ்ச்சியினை தொடங்கி வைத்த பின்னர் தமதுரையில் இவ்வாறு குறிப்பிட்டார்.

“ஏழாவது ஆண்டாக நடைபெறும் இந்நிகழ்ச்சியில் இம்முறை 30 அரசு சாரா இயக்கங்கள் கைகோர்த்து ஒன்றிணைந்திருப்பது பாராட்டக்குரியது. இன்னும் வரும் காலங்களிலும் அதிகமான அரசு சாரா இயக்கங்கள் சமூகநல வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் இதில் இணைய வேண்டும்,” என சாவ் வலியுறுத்தினார்.

15ஆண்டுகளாக பினாங்கு மாநில அரசாங்கத்தின் ஆட்சியில் பினாங்கு வாழ் மக்கள் பல மாற்றங்களைக் கண்டு மகிழ்ச்சியுடனும் வளமான வாழ்க்கையிலும் வாழ்ந்து வருகின்றனர். இது இம்மாதிரியான நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்வதன் மூலம் புலப்படுகிறது என சாவ் புகழாரம் சூட்டினார்.

மேலும், இம்மாதிரியான நிகழ்ச்சிகள் பொதுமக்களிடையே உடல் வலிமையுடனும், மன ஆரோக்கியத்துடனும் வாழ்வதற்கான விழிப்புணர்வை மேலோங்க வழிவகுக்கிறது என சாவ் குறிப்பிட்டார்.

இந்நிகழ்ச்சியில், ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயத் தலைவர் மேஜர் சேகரன் முனியாண்டி, ஆலய நிர்வாக உறுப்பினர்கள், அரசு சாரா இயக்க பிரதிநிதிகள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் வரவேற்பு உரை வழங்கிய தலைவர் மேஜர் சேகரன், ஆலயத்தின் வாகன நிறுத்துமிட நிர்மாணிப்புத் திட்டம் தொடங்குவதற்கு அரசு அமைப்புகளிடம் இருந்து ஒப்புதல் கிடைத்துவிட்டது. தற்போது, குத்தகையாளரை நியமிக்கும் பணியில் ஈடுப்பட்டுள்ளோம். ஆகவே, கூடிய விரைவில் இத்திட்டத்தின் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும் என குறிப்பிட்டார்.

மேலும், வாகனம் நிறுத்துமிட நிர்மாணிப்புப் பற்றி கருத்துரைத்த சாவ் அனைத்து பாதுகாப்பு அம்சங்களையும் கருத்தில் கொண்டு இத்திட்டத்தை பக்தர்களின் நலனுக்காக வெற்றியடைய விரைவில் தொடங்கப்பட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

இலவச மருத்துவ முகாம், பல் மருத்துவம் & குடும்ப தினம் 2023 நிகழ்ச்சியில் இரத்த தான முகாம், சமையல் போட்டி, மாணவர்களுக்கான வர்ணம் தீட்டும் போட்டி, பல் & உடல் பரிசோதனை மற்றும் பல அம்சங்கள் இடம்பெறுகின்றன.

மாநில முதல்வர் சாவ் உடல் பரிசோதனை மேற்கொண்டார்.

இந்நிகழ்ச்சிக்காக ஆலய நிர்வாகம் ரிம40,000 செலவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.