அருள்மிகு பாலதண்டாயுதபாணி மலைக் கோவிலுக்கு வட ஊர்திச் சேவை

தமிழ்க் கடவுள் முருகப் பெருமானின் உலகப் புகழ்மிக்க தலங்களில் ஒன்றான பினாங்கு தண்ணீர்மலை ஆலயத்திற்கு வட ஊர்தி ‘Cable Car’ நிர்மாணிக்கப்படவுள்ளது. இந்த இனிப்புச் செய்தியைக் கடந்த அக்டோபர் 20—ஆம் திகதி ஆலய அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பினாங்கு முதல்வர் மாண்புமிகு லிம் குவான் எங் அறிவித்தார்.

403766_364060426955990_828585574_n

பக்தர்கள் மலைக்கோவிலுக்கு ஏறிச் செல்ல சிரமம்படும் படிகள்

 

பல கோடி பொருட்செலவில் மிக அழகிய ஓவியக்கலை மற்றும் சிற்பக்கலை நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டிருக்கும் பினாங்கு அருள்மிகு பாலதண்டாயுதபாணி மலைக் கோவிலின் திருக்குட நன்னீராட்டு விழா அண்மையில்தான் மிக பிரமாண்டமான முறையில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது நாம் அறிந்ததே. கோலாலம்பூர், பத்துமலை முருகன் கோவில் 272 படிகளைக் கொண்டிருக்கையில் புதிதாய் கட்டப்பட்ட இப்பினாங்கு மலைக்கோவிலோ சுமார் 514 படிகளைக் கொண்டுள்ளது. இதனால், மலேசியாவின் உச்சி மலை முருகனைச் சென்று தரிசிக்க பக்தர்கள் குறிப்பாக வயது முதிர்ந்தோர் சிரமத்தை எதிர்நோக்குகிறார்கள் என்று ஆலயத் தலைவர் திரு குவனராஜூ கருத்துரைத்தார். மேலும், இவ்வாலயத்தில் தனியாருக்குச் சொந்தமான ஒரு சாலை இருந்தும் அது பொதுமக்கள் பயன்படுத்துவதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. அச்சாலை கட்டுமானப் பொருட்களையும் ஆலய மூலப் பொருட்களையும் எடுத்துச் செல்ல மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது என விளக்கமளித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பக்தர்கள் ஆலய நிர்வாகத்தினரிடம் தொடர்ந்து தங்களின் அதிருப்தியை வெளிபடுத்தி வந்த நிலையில் நாங்கள் உடனே பினாங்கு முதல்வருடனும் பினாங்கு இந்து அறப்பணி வாரியத் தலைவரும் பினாங்கு இரண்டாம் துணை முதல்வருமான பேராசியர் ப.இராமசாமி அவர்களுடனும் சந்திப்புக் கூட்டம் மேற்கொண்டோம். அதன் பலனாகவே இன்று அதிகாரப்பூர்வமாக இத்திட்டத்தைப் பற்றி பேசக் கூடியுள்ளோம் என்று ஆலயத் தலைவர் உள்ளக்களிப்புடன் தெரிவித்தார்.

 

148873_516134318415266_167939108_n

 பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தலைவர் பேராசிரியர் ப.இராமசாமி இத்திட்டத்தைப் பற்றி கூறுகையில், தங்கள் பொறுப்பின் கீழ் இருக்கும் இக்கோவிலுக்கு முறையான ஒரு போக்குவரத்து வசதி ஏற்படுத்தி தருவது மிகவும் அவசியமாகிறது என்றார். அதோடு, மலேசியாவின் முக்கிய விழாக்களில் ஒன்றான தைப்பூசத் திருநாளன்று கோலாலும்பூருக்கு அடுத்த நிலையில் பினாங்கில் உள்ள இம்மலைக் கோவிலுக்குத்தான் அதிகமான மக்கள் படையெடுத்து வருகின்றனர். ஆக, பொது மக்களின் வசதியைக் கருதி அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க 514 படிகளைக் கடந்து செல்லும் சிரமத்தைச் சூரியனைக் கண்ட பனி போல் போக்கிச் சுலபமான முறையில் மலைக் கோவிலைச் சென்றடைந்து முருகப் பெருமானை மனமுருக தரிசிக்க வழிவகை செய்யும் வகையில் மக்கள் கூட்டணி அரசு இந்த வட ஊர்திச் சேவையை அமைக்கும் திட்டத்தை மேற்கொள்ளவுள்ளது என பெருமிதத்துடன் பகர்ந்தார்.

மக்கள் நலன் பேணும் மற்றுமோர் அருமையான திட்டத்தை அறிமுகம் செய்வதில் தாம் மிகுந்த பெருமையும் மகிழ்ச்சியும் கொள்வதாகப் பினாங்கு முதல்வர் மாண்புமிகு லிம் குவான் எங் கூறினார். இத்திட்டத்தைக் குறித்துச் சந்தித்துப் பேசும் போது முதல்வர் மிகுந்த முனைப்பும் ஆர்வமும் காட்டியதாக ஆலயத் தலைவர் கூறியது இங்கு குறிப்பிடத்தக்கதாகும். மன அமைதிக்காக ஆலயத்தை நாடி வரும் பக்தர்கள் ஐந்நூற்றுக்கும் அதிகமான படிகளில் ஏறிச் சென்று வழிபடுவது என்பது ஒரு கடினமான பயணமாகவே அமைகிறது என்று முதல்வர் கருத்துரைத்தார். அதிலும், முதியோர்கள் நிச்சயம் பெரும் சிரமத்தை எதிர்நோக்குவர் என்றார். அவர்களின் தேவையைக் கருத்தில் கொண்டு இத்திட்டத்தை உடனே செயல்படுத்த திறந்த விலை ஒப்பந்தம் விடப்படும் என்றார்.

இத்திட்டத்தை மேற்கொள்ள உள்நாட்டு மட்டுமன்றி வெளிநாட்டு நிறுவனங்களும் வரவேற்கப்படுகின்றன. இத்திறந்த விலை ஒப்பந்தம் மூன்று குறிக்கோளை மையப்படுத்தி அமைய வேண்டும். அதாவது, சிறந்த இலாபப் பகிர்வைக் கொண்டிருத்தல், இதன் கட்டுமானப் பணி குறுகிய கால அளவில் நிறைவடைதல், இறுதியாக அனைத்துலகத் தரநிலையில் அமைதல் ஆகியவையாகும். எனவே, மாநில அரசு நிச்சயம் இத்திட்டத்தைச் செம்மையாக நிறைவு செய்து செறிவாகவும் திறைமையாகவும் நிர்வகிக்கும் ஆற்றல் கொண்ட அனுபவமிக்க ஒரு சிறந்த நிறுவனத்திடமே ஒப்படைக்கும் என மாண்புமிகு முதல்வர் உறுதியளித்தார். மேலும், பினாங்கின் முதல் வட ஊர்திச் சேவையை வழங்கும் தலமாகப் பினாங்கு தண்ணீர் மலை முருகன் ஆலயம் விளங்கிச் சுற்றுலாத்துறைக்கு ஓர் உந்துச் சக்தியாக விளங்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.