ஜோர்ஜ்டவுன் மே 9- மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்ட 10 ஆட்சிக்குழு உறுப்பினர்களும் இன்று பாடாங் கோத்தா ஸ்ரீ பினாங் மண்டபத்தில் மாண்புமிகு பினாங்கு மாநில முதல்வர் லிம் குவான் எங் கண்ணுற மாநில ஆளுநர் யாங் டிபெர்துவா துன் அப்துல் ரஹ்மான் அபாஸ் அவர்களின் முன்னிலையிலும் பதவிப் பிரமாணம் எடுத்தனர். கடந்த முறை ஆட்சிக்குழுவில் இடம் பெற்றிருந்தவர்களில் பெரும்பாலோருக்கு மீண்டும் அதே பொறுப்புகள் வழங்கபட்ட வேளையில் புதியவர்களுக்கும் இம்முறை ஆட்சிக்குழுவில் வாய்ப்பளிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
முன்னால் முதலாம் துணை முதல்வரும் தற்போதைய நிபோங் தெபால் நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ மன்சோர் ஒஸ்மானுக்குப் பதிலாகப் புதுமுகமான பந்தாய் ஜெரெஜாக் சட்டமன்ற உறுப்பினரான முகமட் ரஷிட் ஹஸ்னோன் அவர்கள் முதலாம் துணை முதல்வராக நியமிக்கப்பட்டார். இவர், அனைத்துலக வணிகத் தொழில்துறை மேம்பாடு, கூட்டுறவு மற்றும் சமூகத் தொடர்பு, தொழில் முனைவு மேம்பாட்டுச் சேவைக் குழுவின் தலைவராகவும் பொறுப்பேற்றார்.
பிறை சட்டமன்றத் தொகுதியில் வெற்றிபெற்ற மாண்புமிகு பேராசிரியர் ப இராமசாமி இத்தவணைக்கும் தம் இரண்டாம் துணை முதல்வர் பதவியைத் தக்கவைத்துக் கொண்டார். இவரைப்போல், மாண்புமிகு சௌ கொன் யௌ, டத்தோ அப்துல் மாலிக் காசிம், லிம் ஹொக் செங், லோ ஹெங் கியாங், பீ பூன் போ ஆகியோர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்களாக நிலைநிறுத்தப்பட்டனர். அதோடு, புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்களாக மேலும் மூவர் பதவி ஏற்றனர். முன்னால், இளைஞர், விளையாட்டு, மகளிர், குடும்பம், சமூக மேம்பாடு மற்றும் கலை சேவைக் குழுத் தலைவரான லிடியா ஒங் கொக் ஃபுய் பதிலாக பாடாங் லாலாங் சட்டமன்ற உறுப்பினரான சொங் எங் அப்பதவியை ஏற்றார். டத்தோ கெராமட் சட்டமன்ற உறுப்பினரான மதிப்பிற்குரிய ஜெக்டிப் சிங் டியோ மதிப்பிற்குரிய வொங் ஹொன் வாய்க்குப் பதிலாகக் கிராமம், நகரம் மற்றும் வீடமைப்புத் திட்டமிடல் சேவைக் குழுவின் தலைவராகப் பொறுப்பேற்றார். வேளாண்மை, வேளாண்மை சார்ந்த தொழில்துறை, கிராமப்புற மேம்பாடு மற்றும் ஆரோக்கியச் சேவைக் குழுத் தலைவராகச் செபெராங் ஜெயா சட்டமன்ற உறுப்பினரான டாக்டர் அஃபீஃப் பஹார்டின் பதவியேற்றார்.
நில விவகாரம், நில மேம்பாடு, தகவல், பாரம்பரியம், மற்றும் முஸ்லீம் அல்லாதோர் அலுவல்கள், பாகான் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆயர் பூத்தே சட்டமன்ற உறுப்பினருமான பினாங்கு மாநில முதல்வர் லிம் குவான் எங் பொறுப்பில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. பினாங்கு மாநிலத்தில் இரண்டு இந்தியர்கள் ஆட்சிக்குழுவில் நியமிக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும். பல்வேறு இனம், வெவ்வேறு வயது நிலையில் தேர்ந்த்தெடுக்கப்பட்டுள்ள மாநில ஆட்சிக்குழுவினர் பினாங்கின் வளர்ச்சிக்கு முதுகெலும்பாகத் திகழ்ந்து சிறப்பான சேவையை வழங்கும் பொருட்டு திறன்பட செயல்படுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.