பினாங்கு மாநிலத்தில் அண்மையில் நான்காவது முறையாக குளுகோர் ஜாலான் துங்கு குடின் சாலை அமைந்துள்ள எழுபது ஆண்டுகள் பழமையான ஶ்ரீ முனீஸ்வரர் ஆலயம் பொறுப்பற்ற ஆசாமிகளால் சேதப்படுத்தப்பட்டது. இச்சம்பவத்தை நேரில் சென்று பார்வையிட்டனர் புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ராம் கர்பால் மற்றும் ஶ்ரீ டெலிமா சட்டமன்ற உறுப்பினர் திரு.நேதாஜி இராயர்.
செபராங் பிறை பெனாந்தியில் இரண்டு ஆலயங்களும், சுங்கை நிபோங் கெச்சிலில் மற்றொரு ஆலயமும் மர்ம ஆசாமிகளால் சேதப்படுத்தப்பட்டதோடு தொடர்ந்து தீவுப் பகுதியிலும் இந்நிகழ்வு ஏற்பட்டிருப்பதை வன்மையாக சாடினார் நாடாளுமன்ற உறுப்பினர் திருராம் கர்பால். இந்நிகழ்வினை தொடர்ந்து அவர் காவல்துறையிலும் புகார் கொடுத்துள்ளார்.
தொடர்ந்தாற்போல், நடைபெறும் ஆலயங்கள் சேதப்படுத்தும் ஆசாமியைப் பிடிக்க பினாங்கு காவல்துறை சிறப்புக்குழு அமைத்து அண்மையில் குளுகோர் ஶ்ரீ முனீஸ்வரர் ஆலயத்தை சேதப்படுத்திய அந்த ஆசாமியை காவல்துறையினர் கைதுச்செய்தனர். கைதுச்செய்யப்பட்ட அந்த ஆசாமி போதைப்பித்தர் என்றும் பெருநிலத்தில் நடந்த மற்ற மூன்று ஆலய சேதத்திற்கு தொடர்பு உள்ளதா என குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 295 கீழ் மேல் விசாரணை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது
இம்மாதிரியான நடவடிக்கை பொதுமக்களிடையே ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தைச் சீர்குலைய செய்வதோடு பிற மத நம்பிக்கையும் கலாச்சாரத்தையும் நாசப்படுத்தும் வேலை என்றும் இம்மாதிரியான சூழ்நிலை நிகழாமல் இருக்க மாநில அரசு முக்கிய நடவடிக்கை கையாளும் என நம்பிக்கை தெரிவித்தார் ஶ்ரீ டெலிமா சட்டமன்ற உறுப்பினர் திரு.நேதாஜி இராயர்.