கெபுன் பூங்கா- மலேசிய இந்து சங்க புக்கிட் பெண்டேரா பேரவையின் ஏற்பாட்டில் ‘ஆலயம் செல்வோம் & சனாதன தர்மம் அறிவோம்’ எனும் தொடக்க விழா சிறப்பாக நடைபெற்றது.
” புக்கிட் பெண்டேரா நாடாளுமன்ற தொகுதி பல்லின மக்களின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை பறைச்சாற்றுவதில் தனித்துவம் பெற்று திகழ்கிறது.
“இந்த தொகுதியில்
இந்து அறப்பணி வாரிய தலைமையகம்; 15-க்கும் மேற்பட்ட இந்து ஆலயங்கள்; இரண்டு தமிழ்ப்பள்ளிகள்; மலேசியாவின் முதல் இந்திய அருங்காட்சியகம் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிலே மிக பிரமாண்டமாக நடைபெறும் தைப்பூச விழா ஆலயமான பால தண்டாயுதபாணி ஆலயமும் இங்கு அமைந்துள்ளன என்பது பாராட்டக்குரியது,” என புக்கிட் பெண்டேரா நாடாளுமன்ற உறுப்பினர் வோங் ஒன் வாய் இந்நிகழ்ச்சியினை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்து இவ்வாறு கூறினார்.
இந்த விழாவில் முதலாவது புக்கிட் பெண்டேரா நாடாளுமன்ற ஆலய ஒருங்கிணைப்புக் கூட்டமும் நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில் 15 ஆலயங்களின் பிரதிநிதிகள் மற்றும் தலைவர்கள் ஏறக்குறைய 30 பேர்கள் வருகையளித்தனர்.
மேலும், இந்தக் கூட்டத்தில் அனைத்து ஆலயங்களும் ஒரு குடையின் கீழ் ஒன்றிணைந்து ‘ஆலயம் செல்வோம் & சனாதன தர்மம் அறிவோம்’ எனும் நிகழ்ச்சியை மட்டுமின்றி பல ஆக்கப்பூர்வமான சமய நிகழ்ச்சிகளும் நடத்த திட்டமிட்டுள்ளன. இந்த ஒருங்கிணைப்புக் கூட்டம் மூன்று மாதத்திற்கு ஒரு முறை நடத்த இலக்கு கொண்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் மலேசிய பினாங்கு மாநில இந்து சங்கத் தலைவர் முனியாண்டி, ஸ்ரீ மீனாட்சி ஆலயத் தலைவர் டத்தோ செல்வகுமார் மற்றும் மலேசிய இந்து சங்க புக்கிட் பெண்டேரா பேரவையின் தலைவர் தர்மன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
“ஆலயம் செல்வோம் & சனாதன தர்மம் அறிவோம் எனும் நிகழ்ச்சியானது இத்தொகுதியில் இருக்கும் 15 ஆலயங்களிலும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் சமயம் மற்றும் ஆலய வழிபாட்டு குறித்த சொற்பொழிவு நடைபெறும். இளைய தலைமுறையினர் குறிப்பாக தமிழ்ப்பள்ளி மற்றும் தேசியப் பள்ளி மாணவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வரவேற்கப்படுகின்றனர்.
“இந்நிகழ்ச்சி வழிநடத்துவதன் மூலம் இளைய தலைமுறையினருக்கு நெறியான வழிபாட்டு முறை கற்றுக்கொடுப்பதோடு ஆலயம் வழிபாட்டில் கலந்து கொள்ளவும் ஊக்குவிக்கப்படும். மேலும், இந்து ஆலயங்கள் இந்தியர்களின் சமூக மையமாக உருமாற்றம் காண வழிவகுப்பதும் இந்நிகழ்ச்சியின் முதன்மை நோக்கங்களில் ஒன்றாக திகழ்கிறது.