பினாங்கு மாநில இந்து அறப்பணி வாரியம் இந்திய மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்குத் தூண்டுக்கோளாகத் திகழ்கிறது. அவ்வகையில் இந்து அறப்பணி வாரியம் இந்திய மாணவர்களுக்கு நான்கு ஆண்டு காலமாக தொடர்ந்து உபகாரச் சம்பளம் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்நிகழ்வு கடந்த 29-6-2013 முதல் 1-7-2013-ஆம் நாள் வரை தொடர்ந்து இந்து அறப்பணி வாரிய மண்டபத்தில் நடைபெற்றது. இந்த ஆண்டு 1300 இந்திய மாணவர்கள் விண்ணப்பம் செய்ததில் 300 மாணவர்கள் மட்டுமே இந்த உபகார சம்பளம் பெற தகுதிப்பெற்றனர் என்[பது குறிப்பிடத்தக்கது.
இவ்வுதவித் தொகை மூன்று நாட்களுக்கு மூன்று பிரிவாக வழங்கப்பட்டது. நிதிப் பற்றாக்குறைக் காரணமாகக் குறைந்த எண்ணிக்கை மாணவர்களுக்கே வழங்கியதாக இரண்டாம் முதல்வர் பேராசிரியர் ப இராமசாமி தெரிவித்தார். பினாங்கு மாநிலத்தைப் பொறுத்தவரையில் மாநில அரசாங்கம் வழங்கும் நிதியிலுருந்து ஒரு பகுதியை ஒதுக்கி மாணவர்களின் கல்வி சுமையைக் குறைக்க வழங்குகின்றனர். கடந்த 2010 முதல் 2013 வரை இந்து அறப்பணி வாரியம் வழங்கிய உபகாரச் சம்பளம் மற்றும் மாணவர்களின் எண்ணிக்கை விபரங்கள் கீழ் வருமாறு:
ஆண்டு |
மாணவர்களின் எண்ணிக்கை |
தொகை (ரிம) |
2010 |
39 |
109 253 |
2011 |
149 |
227 000 |
2012 |
268 |
243 100 |
2013 |
267 |
278 900 |
பணப் பிரச்சனையால் கல்வியைத் தொடர இயலாத இந்திய மாணவர்களுக்கு நிதியாதரவு வழங்கும் இந்து அறவாரியத்தின் செயல்பாடு பாராட்டுக்குரியது என்றார் இரண்டாம் முதல்வர். இதனிடையே, இந்திய சமுதாயத்தினருக்குக் கல்வியின் அவசியத்தையும் முக்கியதுவத்தையும் சுட்டிக் காட்டினார். நாம் ஒரு அறிவார்ந்த சமுதாமாக உருவாக மாணவர்கள் கண்ணும் கருத்துமாகப் பயில வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
அவரின் தூரநோக்கு திட்டமாக நோர்வேய், சுவிடன் போன்ற நாடுகளைப் போல நம் நாட்டிலும் இலவசக் கல்வி வழங்கப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டார். கல்வி மட்டுமின்றி, இந்து அறவாரியம் கோவில் நிலம், இடுகாட்டு நிலம் போன்றவை நிர்வாகிக்கும் விவகாரங்களில் தலையிட்டு, பல நிலங்கள் முறையாகப் பதிவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
துர்கா பெருமால் என்ற மருந்தகத் துறையில் இளங்கலைப் பட்டம் பயிலும் இரண்டாம் ஆண்டு மாணவி ரிம 3000-ஐ உபகாரச் சம்பளமாகப் பெற்றுக் கொண்டதில் அகம் மகிழ்ந்தார். இந்நிதியைப் பயன்படுத்தி தமது இரண்டாம் ஆண்டுக்கானப் பதிவுக் கட்டணத்தைச் செலுத்தப் போவதாகத் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் பினாங்கு மாநில இரண்டாம் முதல்வரும் இந்து அறப்பணி வாரியத் தலைவருமான பேராசிரியர்
ப இராமசாமி, பினாங்கு மாநில இந்தியர் கலை, கலாச்சார சேவைக் கழகத் தலைவர் டத்தோ கா புலவேந்திரன், ஸ்ரீ டெலிமா சட்டமன்ற உறுப்பினர் ஆர்.எஸ். நேதாஜி ராயர், பாகான் டாலாம் சட்ட மன்ற உறுப்பினர் ஆகியோர் சிறப்பு விருந்தினராகக் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட மாணவர்கள் இந்த உபகார சம்பளம் அவர்களுக்கு பெரும் அளவில் உதவி புரிகின்றது எனக் கூறினர். மேலும் இந்து அறப்பணி வாரியத்தின் சேவை மேலோங்க வேண்டும் என விருப்பம் தெரிவித்தனர்.