ஆயர் ஈத்தாம் – “இந்திய சமூகத்தின் மேம்பாட்டுக்கு பினாங்கு இந்து அறப்பணி வாரியம் ஆற்றும் சேவை பாராட்டக்குரியது. மாநில அரசு தொடர்ந்து இந்தியர்களின் நலனைப் பாதுகாக்க உத்தேசிக்கும் என்று மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் இயோவ் கூறினார்.
நில மேம்பாடு & பொருளாதாரம் மற்றும் தகவல்தொடர்புகளுக்கான ஆட்சிக்குழு உறுப்பினருமான சாவ், புளோட் ஏ, செக்ஷன் 2, பண்டார் ஆயர் ஈத்தாம் தலத்தில் இந்திய சவக்கிடங்கு கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்து இவ்வாறு கூறினார்.
இந்து அறப்பணி வாரியம் இந்திய சமூகத்தை மேம்படுத்துவதற்காக நிறுவப்பட்டது. இது 100 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
“பினாங்கில் உள்ள இந்தியர்கள் தொடர்பான விஷயங்களில் சமூகத்திற்கும் அரசாங்கத்திற்கும் இடையில் ஒரு மத்தியஸ்தராக இந்த வாரியம் பங்கு வகித்து மாநில அரசின் வளர்ச்சிக்கு உறுதுணையாகத் திகழ்கிறது.
“இந்த இந்து சவக்கிடங்கு மையம் இந்து மத நம்பிக்கையாளர்களுக்கு மட்டுமல்ல, இந்துக்கள் அல்லாதவர்களுக்கும், குறிப்பாக சீன சமூகத்தினரும் பயன்படுத்தலாம். மேலும், அவர்களின் தற்போதைய சவக்கிடங்கு வசதிகள் போதுமானதாக இல்லை,” எனக் கூறினார்.
பாடாங் கோத்தா மாநில சட்டமன்ற உறுப்பினரும், பத்து காவான் நாடாளுமன்ற உறுப்பினருமான சாவ், 1,873 சதுர அடி நிலத்தில், தற்காலிக உரிமம் (TOL) ஆக்கிரமிப்பு அனுமதியுடன் இரண்டு முதல் மூன்று மாதங்களுக்குள் இக்கட்டிடத்தை கட்டுவதற்கு அறப்பணி வாரியம் கிட்டத்தட்ட ரிம302,000 நிதிச்செலவில் நிர்மாணிக்கும், என்று கூறினார்.
மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி, மாநிலத்தில் உள்ள இந்திய சமூகத்தின் கல்வி மற்றும் கலாச்சார மேம்பாட்டுக்கும் பல திட்டங்கள் செயல்படுத்தி வருவதாகக் கூறினார்.
பினாங்கு முழுவதும் இதுவரை ஏழு இந்து மையானங்கள் நிர்வகித்து வருவதாகக் கூறினார்.
“இந்து அறப்பணி வாரியத்தின் கீழ் பாலிக் புலாவ், பட்டர்வொர்த், தாமான் பாகான் மற்றும் நிபோங் திபால் ஆகிய இடங்களிலும் கருமகிரியை செய்வதற்கான இடத்தை அமைக்கும் திட்டமும் செயல்படுத்த இணக்கம் கொண்டுள்ளது,” என்று பிறை சட்டமன்ற உறுப்பினருமான இராமசாமி விளக்கினார்.
இந்த இந்து சவக்கிடங்கு கட்டிட கட்டுமானத் திட்டத்தைச் செயல்பாடு காண உறுதுணையாக இருக்கும் அனைத்து தரப்பினருக்கும் நன்றித் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் சத்தீஸ்; புக்கிட் பெண்டேரா நாடாளுமன்ற உறுப்பினர், சியர்லீனா அப்துல் ரஷித், பினாங்கு மாநகர் கழகச் செயலாளர் (எம்.பி.பி.பி), டத்தோ இராஜேந்திரன் மற்றும் அறப்பணி வாரிய ஆணையர்களும் இவ்விழாவில் பங்கேற்றனர்.