இந்து அறப்பணி வாரியத்தின் மானியம் ரிம2.0 மில்லியனாக உயர்த்தப்படும் – முதலமைச்சர் அறிவிப்பு

Admin

ஜார்ச்டவுன் – “பினாங்கு மாநில அரசாங்கம் 2008 ஆம் ஆண்டு முதல் பின்னணி, இனம் மற்றும் மதம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் அனைத்து சமூகத்தின் மேம்பாட்டுக்கும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது.

“பினாங்கு2030 இலக்கின் அடிப்படையில் மாநில அரசாங்கம் இம்மாநிலத்தின் இந்திய சமூக முன்னேற்றத்திற்கு வருடாந்திர மானியமாக பினாங்கு இந்து அறப்பணி வாரியத்திற்கு ரிம1.5 மில்லியன்
வழங்குகிறது.

” 2024 ஆண்டு முதல் மாநில அரசாங்கம் இந்து அறப்பணி வாரியத்தின் வருடாந்திர மானியத்தை ரிம1.5 மில்லியன் இருந்து ரிம2.0 மில்லியனாக உயர்த்தப்படும்.

மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோ பினாங்கு மாநில இந்து அறப்பணி வாரியம் ஏற்பாட்டில் நடைபெற்ற கல்வி உபகாரச் சம்பளம் வழங்கும் நிகழ்ச்சியில் இதனை அறிவித்தார்.

இந்திய மாணவர்கள் தங்கள் மேல்கல்வியைத் தொடங்குவதற்கு கடந்த 2010 ஆண்டு முதல் 2023 வரை ரிம4,180,367.33 நிதி உபகாரச் சம்பளமாக வழங்கியுள்ளது.

ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என் இராயர் தலைமையில் அமைக்கப்பட்ட புதிய ஆணையர் குழுவினர் புதிய உத்வேகத்துடன் இந்து அறப்பணி வாரியத்தை வழிநடத்தி மதம், கலாச்சாரம், கல்வி மற்றும் சமூக மேம்பாட்டுக்கு ஓர் அடித்தளமாக செயல்பட வேண்டும் என முதலமைச்சர் கேட்டுக்கொண்டார்.

இந்த மானியம் இந்திய சமூகத்தின் மதம், கல்வி, மருத்துவம் மற்றும் மேம்பாட்டுத் திட்டங்கள் ஆகிய அம்சங்களை உள்ளடக்கிய பல்வேறு சிறப்பு திட்டங்களை மேற்கொள்வதற்காக வழங்கப்படுகிறது, என்றார்.

புதிய தலைமைத்துவத்தின் கீழ் எங்களின் குறிக்கோள்
ஒன்றாக இணைந்து ஒற்றுமையாக செயல்படுவதாகும். மக்களுக்குச் சேவை செய்வதே எங்களின் உயரிய நோக்கமாகும். மாநில முதலமைச்சர் மற்றும் இரண்டாம் துணை முதலமைச்சர் ஜெக்தீப் சிங் டியோ வழிகாட்டலில் அறப்பணி வாரியத்தை முன்னெடுத்துச் செல்வோம் என இந்து அறப்பணி வாரியத் தலைவரும் ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆர்.எஸ்.என் இராயர் தெரிவித்தார்.

“இந்து அறப்பணி வாரியத்தின் கல்வி உபகாரச் சம்பளத்தின் கீழ் 2023 ஆண்டுக்கு ரிம376,250 நிதி ஒதுக்கீடுச் செய்யப்பட்டுள்ளது. இந்நிதி ஒதுக்கீடு மூலம் 318 மாணவர்கள் நன்மை பெறுகின்றனர்.

“இன்றைய நிகழ்ச்சியில் 205 மாணவர்கள் (இளங்கலை),
55 மாணவர்கள் (டிப்ளோமா)
மற்றும் 10 மாணவர்கள் (சான்றிதழ்) என மேல்கல்வியைத் தொடரும் மாணவர்கள் காசோலையைப் பெற்றுக் கொண்டனர்.

“2018 ஆண்டுக்குப் பின் இந்த ஆண்டு (2023) மிக அதிகமான நிதி ஒதுக்கீடு மற்றும் கூடுதல் மாணவர்களுக்கு கல்வி உபகாரச் சம்பளம் வழங்கப்படுகிறது,” என செனட்டரும் இந்து அறப்பணி வாரியத் துணை தலைவருமான டாக்டர் ஆர்.ஏ லிங்கேஸ்வரன் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ சுந்தராஜு, பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் குமரன், பத்து உபான் சட்டமன்ற உறுப்பினர் குமரேசன் மற்றும் அறப்பணி ஆணையர்கள் கலந்து கொண்டனர்.