இயல்பான பினாங்கை நோக்கி வியூகத் திட்டப் பணிக்குழு மூலம் மாநிலப் பொருளாதாரத்தை மீண்டும் நிலைநிறுத்த முடியும் – முதல்வர்

Admin

 

ஜார்ச்டவுன் – மாநில அரசு ‘இயல்பான பினாங்கை நோக்கி வியூகத் திட்டம்’ மூலம், கோவிட் -19 தாக்கத்தினால் குறிப்பாக மாநிலப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை மேற்கொள்வதற்குத் தயார் நிலையில் இருப்பதாக இன்று கொம்தாரில் நடைபெற்ற முகநூல் நேரலையில் மாநில முதல்வர் சாவ் கொன் யாவ் குறிப்பிட்டார்.

இத்திட்டத்தின் அணுகுமுறையில் பொருளாதார மேம்பாடு, பினாங்கு மாநில அரசு அறிவித்த இத்திட்டத்தின் மூன்று கூறுகளான நிறுவனம், பொருளாதாரம் மற்றும் சமூகம் மேம்பாடு ஆகியவற்றில் ஒன்றாகத் திகழ்கிறது.

முதல்வர் கூறுகையில், உலகளாவிய விநியோகச் சங்கிலி மாற்றத்தில் பினாங்கு மாநிலத்தை மீண்டும் நிலைநிறுத்துவதற்காக, மாநில அரசு ‘இயல்பான பினாங்கை நோக்கி வியூகத் திட்டம்’ செயல்படுத்த சிறப்புப் பணிக்குழுவை நியமித்துள்ளது என்றார்.

“அமெரிக்க-சீனா வர்த்தகப் போர் மற்றும் கோவிட்-19 பாதிப்பு போன்ற நெருக்கடிகளின் விளைவாக உலகளாவிய விநியோகச் சங்கிலியில் பினாங்கின் நிலையை மறுசீரமைப்புச் செய்து; மாநில, நாடு, மற்றும் உலகளாவிய பொருளாதார வளர்ச்சியின் திசையை அடையாளம் கண்டு ஈர்க்கும் யுத்திகளை உருவாக்கி; பினாங்கு மற்றும் மலேசியாவில் புதிய முதலீடுகள் ஈர்க்க இப்பணிக்குழு செயல்படும்.

“மேலும், இந்த உலகளாவிய பொருளாதார மாற்றத்தின் நன்மைகள் நாட்டிற்கு பயனளிக்கும் என்பதை உறுதிப்படுத்த முன்கூட்டியே செயல்பட நாங்கள் (பினாங்கு) திட்டமிட்டுள்ளோம்.

“இந்த ஆரம்பகால பொருளாதார யுத்திகள் பினாங்கு மக்களுக்கு நம்பிக்கையும், அதே வேளையில் மக்கள் மற்றும் அரசின் நலன்கள் பாதுகாக்கப்படும்”, என முதல்வர் சாவ் விவரித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த முதல்வர், ‘இயல்பான பினாங்கை நோக்கி வியூகத் திட்டம்’ வாயிலாக பொதுத் திட்டங்கள் மற்றும்
மாநிலத்தின் சிறு மற்றும் நடுத்தர வணிக துறையை வலுப்படுத்துவதன் மூலம் பினாங்கின் பொருளாதார வளர்ச்சியை உறுதிப்படுத்தப்படும்.

இரண்டாவது, பினாங்கு மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் துறையில் அதன் நிலையை வலுப்படுத்துகிறது. கடந்த 10 ஆண்டுகளில், மாநில அரசு இத்துறையை விரிவுபடுத்தி வருகிறது. தற்போது சில அனைத்துலக மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் பினாங்கில் செயல்பட்டு வருகின்றன.

மூன்றாவதாக, மின் மற்றும் மின்னணு (இ & இ) துறைகளில் மின்னணு தயாரிப்புகளிலிருந்து தொலைத்தொடர்பு அமைப்புகள், தொழில்துறை 4.0 உபகரணங்கள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் பல தொழில்துறை பயன்பாடு தயாரிப்புகள் மாற்றத்திற்குக் கவனம் செலுத்தும்.

நான்காவதாக, உலகளாவிய சேவைகள் பகிர்வுத் துறையை விரிவுபடுத்துகிறது, இன்றுவரை பினாங்கு இத்துறையில் ஈடுபட்டுள்ள 60க்கும் மேற்பட்ட நிறுவனங்களை நிதி, விநியோகச் சங்கிலி மேலாண்மை, வர்த்தகம், பகுப்பாய்வு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு போன்ற சேவைகளின் மூலம் 12,000 ஊழியர்களுக்கு அதிக மதிப்புள்ள வேலைகளை வழங்கி வருகிறது.

இந்த விநியோகச் சங்கிலிகளின் வசதிகள் பினாங்கு மற்றும் மலேசியாவிற்கு பல அனைத்துலக நிறுவனங்களை ஈர்க்கவும்; குறைந்த விலை சூழல் கொண்ட அமைப்பை உருவாக்க இயலும்.

ஐந்தாவது இப்பணிக்குழு மூலம் மாநிலத்தை மீண்டும் நிலைநிறுத்துவதாகும்.

இதற்கிடையில், பினாங்கு மாநிலம் நான்கு நாட்களில் கோவிட்-19 க்கு சுழியம் வழக்கு பதிவாகியுள்ளது.மாநில முதல்வர், 14 நாட்களில் கோவிட்-19 வழக்கு அறிக்கை கண்காணிப்பின் அடிப்படையில், கூடுதல் வழக்குகள் பதிவு இடம்பெறவில்லை என்றால் தீவின் அனைத்து மாவட்டங்களும் பச்சை நிற மண்டலமாக வருகின்ற ஏப்ரல் மாதம் 27-ஆம் நாள் அறிவிக்கப்படும் என்று நம்பிக்கைத் தெரிவித்தார்.