பினாங்கில் வியாபாரத் துறையில் முன்னணி வகித்து வரும் ப.கிருஷ்ணன் அவர்கள் அண்மையில் ஜார்ச்டவுன், பீர்ச் தெருவில், ‘பம்பாய் கிச்சன்’ எனும் புதிய இந்திய உணவகத்தைத் தொடக்கியுள்ளார்.
பம்பாய் கிச்சன் உணவகம் இரண்டு மாதங்களுக்கு முன்பு பொதுமக்களுக்கு திறக்கப்பட்டது. இது கிருஷ்ணன் அவர்களால் தொடங்கப்பட்டாலும், ஜெம்ஸ் குழுமம் நிறுவனத்தின் உணவக சங்கிலியின் கீழ் தோற்றுவிக்கப்பட்டது.
திரு.கிருஷ்ணன் வெளிநாட்டில் சட்டத்துறையைப் பயின்று வழக்கறிஞர் பணியை விடுத்து வியாபாரத் துறையில் கால் தடம் பதித்த அனுபவத்தை முத்துச் செய்திகள் நாளிதழ் குழுவினருடன் பகிர்ந்து கொண்டார்.
சிறு வயது முதல் மறைந்த டத்தோஸ்ரீ உத்தாமா கர்பால் சிங் அவர்களின் கொள்கையைப் பின்பற்றி வளர்ந்ததாகவும், அவரை முன்னோடியாகக் கொண்டு சட்டம் படிக்க முடிவு செய்ததாகவும், கிருஷ்ணன் தெரிவித்தார்.
அவரது சட்டத்துறை மேற்கல்வியை முடித்தவுடன் தனது தந்தையின் வழிகாட்டலில் வியாபாரத் துறையில் ஈடுபடத் தொடங்கியதாகக் கூறினார். அவருக்கு சட்டத்துறை மட்டுமின்றி மிகவும் சுவையாகச் சமைக்கும் தனது தாயாரின் உணவிலும் மிகுந்த ஆர்வம் கொண்டதாகவும் தெரிவித்தார்.
இந்த ஜெம்ஸ் குழுமம் முதலில் 1997 இல் கோலாலம்பூரில் உள்ள பெட்டாலிங் ஜெயாவில் ஜெம் உணவகத்தைத் தொடங்கி 2009 இல் பினாங்கு பிசோப் தெருவில் மற்றொரு கிளையைத் தொடங்கி மேலும் பல கிளைகளுடன் வெற்றிநடைப் போட்டு வருகிறது.
“எனது தந்தையான டத்தோஸ்ரீ கே.பழனியப்பன்,68 அவர்களால் ஜெம்ஸ் குழுமம் தொற்றுவிக்கப்பட்டது. தற்போது பினாங்கு மற்றும் கோலாலம்பூரில் (ஜெம்ஸ் உணவகம்) எட்டு கிளை உணவகங்களைக் கொண்டுள்ளது.
“ஜெம்ஸ் உணவகம் இந்தியப் பாரம்பரிய சுவை மிக்க உணவை ருசிக்கும் அனுபவத்தை வழங்கும் அதே வேளையில், பம்பாய் கிச்சன் உணவு மற்றும் பானங்கள் தென் இந்தியாவின் உணவுப் பின்னணியைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது,” என முத்துச் செய்திகள் நாளிதழ் குழுவினருடன் பகிர்ந்து கொண்டார்.
முத்துச் செய்திகள் நாளிதழுக்கு அளித்த பிரத்தியேக நேர்காணலில் கிருஷ்ணன், யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளத்தில் இந்த உணவகம் அமைந்துள்ளதால், பாரம்பரிய கட்டிடத்தின் அசல் தோற்றத்தைத் தக்க வைத்துக் கொள்வதை உறுதிசெய்தேன். அதே நேரத்தில் பிரகாசமாகவும் வண்ணமயமான விளக்குகளை மட்டும் சேர்த்து, சிறந்த கலை வடிவமைப்புடன் சுற்றுச்சுழலை மேலும் அழகுப்படுத்தினேன், என்றார்.
“இந்த உணவகத்தின் இரண்டாவது மாடியில், பிறந்தநாள் கொண்டாட்டம், சந்திப்புக் கூட்டங்கள் மற்றும் கூட்டங்கள் போன்ற நிகழ்ச்சிகளுக்கு இந்த இடத்தைப் பயன்படுத்தும் வகையில் நாற்காலிகள், மேசைகள் மற்றும் விளக்குகள் கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது,” என்றார்.
மேலும் நேர்காணலின் போது, கிருஷ்ணன் உணவின் தரம் மற்றும் உணவகத்தின் தூய்மைக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுப்பவர் என்று வலியுறுத்தினார்.
“எங்கள் சமையல்காரர்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள், அவர்கள் அனைவரும் வட, தென் இந்தியா உணவு வகைகள் சமைப்பதில் நன்குப் பயிற்சி பெற்றவர்கள்.
“உணவின் தரம் மற்றும் தூய்மை இல்லாமல், இந்தத் தொழிலில் முன்னெடுத்துச் செல்வது மிகவும் கடினமாகும்.
“ஒவ்வொரு முறையும் நான் உணவகத்திற்குள் நுழையும் போது, மூலப்பொருட்களைத் தயாரிப்பது முதல் உணவுகள் சமைப்பது வரை அனைத்தையும் சுத்தமாக வைத்திருப்பதை உறுதிசெய்ய, சமையலறைக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளேன்,” என்று அவர் கூறினார்.
“சிஸ்லிங் பிளாக் பெப்பர் க்ரில்டு லாம்ப், ஸ்பாகெட்டி மட்டன் கிம்மா மற்றும் மட்டன் வருவல் பிஸ்ஸா ஆகியவை இந்த உணவகத்தின் பிரபலமான உணவு வகைகளில் அடங்கும்.
இந்த உணவகத்தில் கூட்டம் பொதுவாக மாலையில் தொடங்கி நள்ளிரவு வரை நீடிக்கும்.
“மாநிலத்தின் மிகவும் பிரபலமான சுற்றுலா தலமான ஜார்ச்டவுன் உலக பாரம்பரிய தலத்தில் இந்த உணவகம் அமைந்துள்ளதால் எங்கள் வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் வெளிநாட்டினர் ஆவர்,” என்று மேலும் கூறினார்.
இந்த உணவகம் தினமும் காலை 11.00 மணி முதல் நள்ளிரவு 12.00 மணி வரை திறந்திருக்கும்.