ஜார்ச்டவுன் – ஜாலான் ஸ்காட்லாந்தில் அமைந்துள்ள ஆதரவற்ற குழந்தைகளுக்கானப் பராமரிப்பு மையமான இராமகிருஷ்ணா ஆசிரமம், டிஜிட்டல் மயமாக்கலில் முன்னெடுத்துச் செல்லும் வகையில் புதிய தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப (ICT) ஆய்வகத்தைத் திறந்துள்ளது.
மாநில உள்ளாட்சி, வீட்டுவசதி, நகரம் மற்றும் கிராமப்புற திட்டமிடல் ஆட்சிக்குழு உறுப்பினருமான ஜெக்டிப் சிங் டியோ, மாணவர்கள் 21-ஆம் நூற்றண்டிற்கான வளர்ச்சியை நோக்கிப் பயணிப்பதற்கும் போட்டித் தன்மையுடன் டிஜிட்டல் உலகில் கால் தடம் பதிப்பதற்குத் தயார்படுத்தும் வகையில் இராமகிருஷ்ணா ஆசிரமம் இந்த மையத்தைத் தொடங்கியதற்குப் பாராட்டுத் தெரிவித்தார்.
“நாம் குழந்தைகளைப் பற்றி பேசும்போது, அவர்களின் எதிர்காலத்தைப் பற்றியும் சிந்திக்கிறோம். எதிர்காலம் என்று கூறும்போது, டிஜிட்டல்மயமாக்கலில் அதிவேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப
முன்னேறுவதற்கான வழிமுறைகளை அறிவதே ஆகும்.
“இராமகிருஷ்ணா ஆசிரமம் எப்போதுமே என் இதயத்திற்கு மிகவும் நெருக்கமானத் திகழும்.
குழந்தைகளுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்க இராமகிருஷ்ணா ஆசிரம நிர்வாகக் குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆற்றியப் பங்களிப்பைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன்.
“இத்திட்டத்திற்காக முதலில் ரிம10,000 நிதி ஒதுக்கீடு வழங்க எண்ணம் கொண்டேன். இருப்பினும், இப்பொழுது இத்திட்டத்திற்கு மானியத்தை (ரிம20,000) இரட்டிப்பாக கொடுக்க முடிவுச் செய்தேன் என ஜெக்டிப் தெரிவித்தார்.
“குழந்தைகளின் கல்வித் தேவைகளுக்கு ஏற்ப அவ்வப்போது முக்கிய வசதிகளை மேம்படுத்தவும், ICT ஆய்வகத்தைப் பராமரிக்கவும் இந்த நிதி ஒதுக்கீடு துணைபுரியும்,” என்று ICT ஆய்வகத்தை அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்து தனது உரையில் ஜெக்டிப் இவ்வாறு கூறினார்.
டத்தோ கெராமாட் சட்டமன்ற உறுப்பினருமான ஜெக்டிப், முன்னதாக இந்த ஆய்வகத்தை அமைப்பதற்கு ரிம15,000-ஐ நன்கொடையாக வழங்கினார்.
இதற்கிடையில், இராமகிருஷ்ணா ஆசிரம துணைத் தலைவர் இராமசாமி, குழந்தைகளின் நலனுக்காக ICT ஆய்வகத்தை உருவாக்க பங்களித்த ஜெக்டிப் மற்றும் நன்கொடை வழங்கிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றித் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், பினாங்கு மாநகர் கழக (எம்.பி.பி.பி) செயலாளர் டத்தோ இராஜேந்திரன் கலந்து கொண்டு, டத்தோ கெராமாட் மற்றும் ஆயர் ஈத்தாமில் செயல்படுத்தப்பட்ட வெள்ள நிவாரணத் திட்டங்களைப் பற்றியும் உரையாற்றினார்.
“கடந்த மூன்று ஆண்டுகளில் டத்தோ கெராமாட் மற்றும் ஆயர் ஈத்தாம் பகுதிகளில் பல முக்கிய வெள்ள நிவாரணத் திட்டங்கள் குறிப்பாக தாழ்வான சாலைகளை உயர்த்துதல் மற்றும் பம்ப் ஹவுஸ்களை அமைக்கும் திட்டத்தைச் செயல்படுத்த ரிம7 மில்லியன் நிதி செலவிட்டதாக,” அவர் கூறினார்.