அண்மையில் கோவிட்-19 தொற்று நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் பொருட்டு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (பி.கே.பி2.0) அமலாக்கம் கடந்த ஜனவரி, 13-ஆம் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து பினாங்கு வாழ் மக்கள் வாழ்வாதார பிரச்சினையை எதிர்நோக்குகின்றனர்.
தற்போது பி.கே.பி அமலாக்கம் ஜனவரி, 26 -ல் இருந்து பிப்ரவரி மாதம் 4-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால், பொது மக்கள் தொழில் ரீதியில் பல சவால்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது.
‘பினாங்கு முன்னெடுத்துச் செல்லும்'(Penang Leads) எனும் குறிக்கோள் கொண்ட மாநில அரசு தற்போது கோவிட்-19 தாக்கம் மற்றும் பி.கே.பி2.0 அமலாக்கத்தினால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு உதவும் பொருட்டு பினாங்கு மக்கள் உதவித்திட்டம் 3.0-ஐ அறிவித்துள்ளது. இத்திட்டம் செயல்படுத்த ரிம 20 மில்லியன் நிதி ஒதுக்கீடப்பட்டுள்ளது. இந்நிதி ஒதுக்கீட்டில் ஐந்து இலக்கு குழுவினருக்கு பிரத்தியேகமாக உதவித்தொகை வழங்கப்படும்.
இந்த உதவித்தொகை இரு ஊராட்சி மன்றங்களான பினாங்கு மாநகர் கழகம்(எம்.பி.பி.பி) மற்றும் செபராங் பிறை மாநகர் கழகம் கீழ் பதிவுச் செய்த வணிகர்கள் குறிப்பாக அழகு நிலையம்; முடி திருத்தும் நிலையம்; SPA; இயற்கை பாத அழுத்த மையம்; பதிவுப்பெற்ற சிற்றுண்டிச் சாலை உரிமையாளர்கள்; மற்றும் ரிக்ஷா ஓட்டுநர்கள் ஆகிய இலக்கு குழுவினருக்கு முன்னுரிமை வழங்கி இந்நிதி வழங்கப்படும்.
மேலும், மாநில அரசு சட்டமன்ற உறுப்பினர்கள்; நாடாளுமன்ற உறுப்பினர்கள்; சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற பிரதிநிதிகள் என அனைத்து தரப்பினருக்கும் பி.கே.பி அமலாக்கத்தால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு உதவும் வகையில் ரிம30,000 நிதி ஒதுக்கீடு வழங்கியது.
மாநில அரசின் மக்கள் உதவித்திட்டம் 3.0 குறித்து பொது மக்களிடையே கருத்து கணிப்பில் முத்துச்செய்திகள் நாளிதழ் குழுனர் ஈடுப்பட்டனர்.
இரண்டாவது தலைமுறையாக 45 ஆண்டுகளாக உணவகம் நடத்தி வரும் செ.இராமையா,69 பி.கே.பி 2.0 அமலாக்கத்தால் தனது வியாபாரம் 60% விழுக்காடு வரை பாதிக்கப்பட்டுள்ளாதாக கூறினார். அண்மையில் மாநில அரசு அறிவித்த வணிகர்களுக்கான ரிம500 உதவித்தொகைக்கு விண்ணப்பித்துள்ளதாகவும் இத்திட்டத்தை வரவேற்பதாகவும் கூறினார்.
பட்டர்வொர்த், ஜாலான் மெங்குவாங் பகுதியில் அமைந்துள்ள இந்த ஆர்.செல்லையா உணவகம் காலை7.00 மணிக்கு தொடங்கி மாலை 4.00 மணி வரை காலை மற்றும் மதிய உணவு விற்கப்படும். தற்போது பொது மக்கள் உணவகங்களில் உணவு உண்ண தடை விதிக்கப்படுவதால் அதிக நஷ்ட்டத்தை விளைவிப்பதாகக் கூறினார்.
பட்டர்வொர்த் வட்டாரத்தில் ‘நாசி லெமாக்’, ‘ரொட்டி சனாய்’, ‘முர்த்தப்பா’, பிஹுன் ஆகிய காலை உணவுகள் விற்பனை செய்வதில் புகழ்பெற்ற உணவகமாக ‘ஏ.ஆர் ரஹ்மான் நாசி கண்டார்’ உணவகம் திகழ்கிறது. இந்த உணவகத்தை அதன் உரிமையாளர் முகைதீன் சீனி,50 கடந்த 20 ஆண்டுகளாக நடத்தி வருகிறார். தொடக்கத்தில், மதிய உணவும் விற்கப்பட்டதாகவும் கடந்த ஆண்டு பி.கே.பி1.0 அமலாக்கத்தால் வியாபாரத்தில் பெரும் நஷ்ட்டத்தை எதிர்நோக்கியதால் காலை உணவு மட்டுமே விற்கப்படுகிறது. அதிலும், ஏறக்குறைய 50விழுக்காடு வரை நஷ்ட்டம் எதிர்நோக்குவதாகக் கூறினார்.
இந்த கோவிட்-19 தாக்கத்தால் 5 பேர்கள் வேலை செய்த இந்த உணவகத்தில் இப்போது 3 தொழிலாளர்கள் மட்டுமே பணிப்புரிவதாகவும்,ஆட்கள் குறைப்புக்குப் பின்பும் ஊதியம் கொடுக்கச் சிரமம் எதிர்நோக்குவதாகக் கூறினார்.
மாநில அரசு நிதியுதவி அல்லது பொருளுதவி வழங்கினாலும் தற்போதைய நிலைமைக்கு எவ்வுதவியாக இருந்தாலும் வியாபாரிகளின் சுமையைக் குறைக்க வித்திடும். மாநில அரசு வழங்கும் உணவக உரிமையாளர்களுக்கான ரிம500 உதவித்தொகையை வரவேற்பதாகக் கூறினார்.
காம்ப்ளெக்ஸ் வளாகத்தில் புதிதாக ‘பேம்பு பிரியாணி’ கடையைத் தொடங்கியுள்ள அங்காடி வியாபாரி தெய்வானை,70 மாநில அரசின் இந்த உதவித்திட்டத்திற்கு ஆதரவு நல்கினார்.
“கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னால் தொடங்கப்பட்ட இந்த கடை பி.கே.பி2.0 அமலாக்கத்தால் அதிக பாதிப்பை எதிர்நோக்கியுள்ளது. மேலும், இந்த உணவுகள் இயங்கலை மூலமாக விற்கப்படுகிறது. இருப்பினும் பி.கே.பி-க்கு முன்னதாக ஒப்பிடுகையில் வியாபாரத்தில் சற்று சரிவுக் கண்டதாகக் கூறினார்.
“இந்நிதி என்னைப் போன்ற வணிகர்களுக்கு நிவாரண நிதியாகப் பயன்படும். எனது வியாபாரத்தை வழிநடத்த துணைபுரிகிறது. இத்திட்டம் செயல்படுத்தும் மாநில அரசுக்கு நன்றி,” என கூறினார்.