ஜார்ச்டவுன் – வருகின்ற அக்டோபர்,1 அன்று லாட்வியா, தடகள சாலை ஓட்ட உலக சாம்பியன்ஷிப்பில் நாட்டைப் பிரதிநிதித்து செல்லும் ஓட்டப்பந்தய வீரர் எஸ். கிறிஸ்தபர், அவர்களுக்கு ஆதரவாளராக பினாங்கு ஃபார்வர்ட் ஸ்போர்ட்ஸ் கிளப் (Penang Forward Sports Club) ஆலோசகர் டத்தோ தோம் கூ முன் வந்துள்ளார்.
32 வயதான கிறிஸ்தபர், கடந்த ஜூன் 30 அன்று கோல்ட் கோஸ்ட் மராத்தான் போட்டியில் 21 கி.மீ அரை மராத்தான் போட்டியில் 1 மணி 09 நிமிடங்களைப் பதிவு செய்தார். இவர் மலேசிய அரசு கடற்படை இராணுவ வீரர்(TLDM) என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் அவரின் வெற்றிகரமான நேரப் பதிவானது, இந்த உலக சாம்பியன்ஷிப்பில் பங்கேற்க நிர்ணயிக்கப்பட்ட 1 மணிநேரம் 10 நிமிடங்களுக்குக் குறைவான தகுதிக் குறிப்பு நேரத்துடன் இருப்பதால் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பினாங்கை பூர்வீகமாகக் கொண்ட அவர், நாட்டின் தேசிய அணியில் பதிவுசெய்யப்பட்ட ஓட்டப்பந்தய வீரர் அல்லாததால், உலக சாம்பியன்ஷிப்பில் பங்கேற்க நிதி அம்சம் உள்ளிட்ட பல்வேறு சிரமங்களை கிறிஸ்தபர் எதிர்கொண்டதாக மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ் கூறினார்.
“பினாங்கைப் பூர்வீகமாகக் கொண்ட கிறிஸ்தபரின் வெற்றி பெருமைக்குரிய ஒன்று. ஏனெனில் அவர் ஒரு அமெச்சூர் ஓட்டப்பந்தய வீரர் மட்டுமே தவிர, தேசிய அணியில் முழுநேரப் பயிற்சியளிக்கப்படும் ஓட்டப்பந்தைய வீரர் அல்ல.
“இதன் மூலம், கிறிஸ்தபரின் அனைத்து செலவுகளான விமான டிக்கெட், தங்குமிடம், பதிவு செலவுகள், உணவு மற்றும் பிற தொடர்புடைய செலவுகள் உட்பட மொத்தம் ரிம10,000 -ஐ நிதியளிக்க ஒப்புக்கொண்ட டத்தோ டாம் கூவுக்கு மாநில அரசின் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
“நீங்கள் வெற்றியடைய நல்வாழ்த்துக்கள். கிறிஸ்தபர் பினாங்கு மாநிலத்திற்கும், நாட்டிற்கும் சர்வதேச அரங்கில் ஒரு வெற்றிகரமான நற்பெயரைப் பெற்றுக் கொண்டு வீடு திரும்புவார்,” என்று அவர் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
மேலும், இளைஞர், விளையாட்டு மற்றும் சுகாதார ஆட்சிக்குழு உறுப்பினர், டேனியல் கூய் ஜி சென்; முதலமைச்சரின் அரசியல் செயலாளர் லாவ் கெங் ஈ; பினாங்கு மாநில விளையாட்டு மன்றம் (MSNPP) இயக்குனர், ஹரி சாய் ஹெங் ஹுவா மற்றும் பினாங்கு பார்வர்ட் ஸ்போர்ட்ஸ் கிளப் தலைவர், லிம் சூ ஹூய் ஆகியோர் இந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டனர்.
அதே நேரத்தில், பினாங்கு மாநில அரசின் சார்பாக பினாங்கு விளையாட்டு மன்றத்திலிருந்து ரிம1,000 நன்கொடை அளிப்பதாகவும் கொன் இயோவ் அறிவித்தார்.
இதற்கிடையில், கிறிஸ்தபரின் வெற்றி பினாங்கு ஃபார்வர்ட் ஸ்போர்ட்ஸ் கிளப் மட்டுமின்றி பினாங்கு மக்களையும் பெருமைப்படுத்தியதாக சூ ஹூய் கூறினார்.
“எங்கள் கிளாப் ஓர் அரசு சாரா அமைப்பு. இந்த அமைப்பில் அதிகமான நிதி ஆதாரங்கள் இல்லை, ஆயினும் விளையாட்டு வீரர்கள் தங்கள் கனவுகளை அடைய ஒரு தளமாக இருந்து வாய்ப்பளிக்க விரும்புகிறோம்.
“டத்தோ தோம் கூவிடமிருந்து தொடர்ந்து ஆதரவை பெறும் கிறிஸ்தபர் போன்ற அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் ஊக்கம் அளித்த மாநில அரசின் ஒத்துழைப்பிற்கும் நான் நன்றிக் கூற கடமைப்பட்டுள்ளேன்.
“இதனால், நிதி ரீதியாகப் பற்றாக்குறையை எதிர்நோக்கும் திறமையான விளையாட்டு வீரர்களுக்கு உதவ கிளாப் நடத்துநர்கள், தனியார் துறை மற்றும் மாநில அரசாங்கத்துடன் நெருக்கமாக பணியாற்ற முடியும்,” என்று சூ ஹிய் நம்பிக்கை தெரிவித்தார் என்றார்.
இதற்கிடையில், பினாங்கு ஃபார்வர்ட் ஸ்போர்ட்ஸ் கிளப்பை பிரதிநிதிக்கும் கிறிஸ்தபர், உலக ரீதியிலானப் போட்டியில் பங்கேற்க அவருக்கு ஆதரவு மற்றும் நிதியுதவி அளித்தற்குத் தனது நன்றியைத் தெரிவித்தார்.
“ஐரோப்பாவில் மிகவும் குளிரான பருவநிலை சிறிது தாக்கத்தை ஏற்படுத்தலாம், ஆனால் கோல்ட் கோஸ்டில் (ஆஸ்திரேலியா) இருந்த எனது அனுபவத்தின் அடிப்படையில், என்னால் சிறந்த விளையாட்டுத் திறமையை வழங்க முடியும் என நம்புகிறேன்,” என்று TLDM பயிற்சியாளரான
அவர் கூறினார்.