பெர்தாம்- மலேசியாவிலே பினாங்கு மாநிலம் தான் முதல் மாநிலமாக தனது இரு ஊராட்சி மன்றங்களும் மாநகர் கழகம் எனும் அந்தஸ்த்தை பெற்று சரித்திரம் படைத்தது.
இன்று மாநில ஆளுநர் துன் டத்தோ ஸ்ரீ உத்தாமா டாக்டர் ஹஜி அப்துல் ரஹ்மான் செபராங் பிறை நகராண்மைக் கழகத்தை (எம்.பி.எஸ்.பி) செபராங் பிறை மாநகர் கழகமாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இந்நிகழ்வு கெபாலா பத்தாஸ், மில்லேனியம் அரங்கில் இனிதே நடைபெற்றது.
வீடமைப்பு மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சுராய்டா கமாருடின் மாட்சிமை தாங்கிய பேரரசரிடம் இருந்து அனுமதி பெற்ற ஒப்புதல் கடிதத்தை மாநில ஆளுநரிடம் வழங்கினார்.
மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் யாவ் ஆளுநர் முன்னிலையில் டத்தோ ரோசாலியின் பதவிப் பிரமான அதிகாரப்பூர்வ கடிதத்தை வாசித்தார்.
செபராங் பிறை மாநகர் கழகத்தின் முதல் மாநகர் தலைவராக ‘டத்தோ பண்டாராயா’ பதவிப் பிரமாணத்தை டத்தோ ஹஜி ரோசாலி மாநில ஆளுநர் முன்னிலையில் உறுதிமொழி எடுத்தார். மாநில ஆளுநர் புதிய மாநகர் தலைவர் டத்தோ ரோசாலிக்கு மாலை அணிவித்து ‘சொக்மார்’ வழங்கி கெளரவித்தார்.
இந்நிகழ்வில் முதலாம் துணை முதல்வர் டத்தோ அமாட் சாக்கியுடின் அப்துல் ரஹ்மான், இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி, மாநில சபாநாயகர் டத்தோ லாவ் சூ கியாங்,வீடமைப்பு, உள்ளூராட்சி, கிராமப்புற மற்றும் நகர்ப்புற திட்டமிடல் ஆட்சிக்குழு உறுப்பினர் ஜெக்டிப் சிங் டியோ, ஆட்சிக்குழு உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
இந்நாட்டில் இருக்கும் 155 ஊராட்சி மன்றங்களில் எம்.பி.எஸ்.பி 15-வது மாநகர் கழகமாக பிரகடனப்படுத்தப்பட்டது. இரு ஊராட்சி மன்றங்கள் குறிப்பாக தீவுப்பகுதியில் பினாங்கு மாநகர் கழகம் அதேவேளையில் பெருநிலப்பகுதியில் செபராங் பிறை மாநகர் கழகம் எனும் கெளரவப் பட்டம் இம்மாநிலத்திற்குப் பெருமை சேர்க்கிறது.
“எம்.பி.எஸ்.பி திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகளுக்கு வட்டார மக்கள் நல்கிய ஒத்துழைப்பும் பங்களிப்பும் இன்று மாநகர் கழகமாக உருமாற்றம் கண்டது,” என டத்தோ ரோசாலி நன்றி நவிழ்ந்தார்.