செபராங் ஜெயா – செபராங் பிறை மாநகர் கழக (எம்.பி.எஸ்.பி) கவுன்சிலர்களாக 13 புதிய முகங்கள் உட்பட மொத்தம் 22 பேர் இந்த ஆண்டு அக்டோபர் 1 முதல் டிசம்பர் 31, 2024 வரை நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ் முன்னிலையில் கவுன்சிலர்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.
இந்த 13 புதிய முகங்களில் மூன்று இந்தியர்களான பொன்னுதுரை அந்தோனி ஸ்ரீனிவாசகம், லிங்கேஸ்வரன் சர்மார் மற்றும் பிரதீப் குமார் காளிதாசன் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இந்நிகழ்ச்சியில், முதலாம் துணை முதலமைச்சர் டத்தோ டாக்டர் முகமது அப்துல் ஹமீட்,
எம்.பி.எஸ்.பி மேயர், டத்தோ அசார் அர்ஷாத்; ஊராட்சி, நகர மற்றும் புறநகர் திட்டமிடல் ஆட்சிக்குழு உறுப்பினர் ஹெங் மோய் லாய் மற்றும் முன்னாள் முதலமைச்சர், லிம் குவான் எங் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
எம்.பி.எஸ்.பி மேயர் டத்தோ அசார் அர்ஷாத் பதவிப் பிரமானம் எடுத்துக் கொண்ட அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொண்டார்.
கவுன்சிலர்கள் எம்.பி.எஸ்.பி உடன் இணைந்து பொது மக்களின் நலனுக்காக சிறந்த சேவையை ஆற்ற வேண்டும்
என வலியுறுத்தினார்.
கவுன்சிலர்கள் எம்.பி.எஸ்.பி இன் முன்னேற்றத்திற்கு அவர்களின் கடமையை செவ்வன ஆற்ற வேண்டும். மேலும், ஒவ்வொரு கவுன்சிலர்களின் செயல்பாடுகள் KPI (முக்கிய செயல்திறன் குறியீடு) அடிப்படையில் கண்காணிக்கப்படும் என்று ஊராட்சி, நகர மற்றும் புறநகர் திட்டமிடல் ஆட்சிக்குழு உறுப்பினர் ஹெங் மோய் லாய் கூறினார்.
“மாநில அரசாங்கத்தால் நியமிக்கப்படும் கவுன்சிலர்கள் மக்களின் நலனுக்காக, தங்கள் கடமையை நேர்மையுடன் வெளிப்படைத் தன்மையுடனும் செய்ய வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.
“புதிதாக நியமிக்கப்பட்ட அனைத்து கவுன்சிலர்களும் எம்.பி.எஸ்.பி மேயர் டத்தோ அசார் அர்ஷாத்துடன் இணைந்து ஒரு குடையின் கீழ் ஊழியர்களுடன் இணைந்து செபராங் பிறையை ஒரு சிறந்த இடமாக உருவாக்க பணியாற்ற வேண்டும்,” என்று கேட்டுக் கொண்டார்.
புதிதாக நியமிக்கப்பட்ட 22 கவுன்சிலர்களுக்கும் மாநில முதலமைச்சர் நல்வாழ்த்துக்கள் தெரிவித்ததுடன், பினாங்கு நிலப்பகுதியில் உள்ள மக்களுக்குச் சேவை செய்ய தங்கள் கடமைகளை விடாமுயற்சியுடன் திறன்பட செய்யுமாறு வலியுறுத்தினார்.
“முன்னாள் எம்.பி.எஸ்.பி கவுன்சிலர்கள் அவர்களின் சேவைகளுக்கும், மாநகர் கழகத்தின் முன்னேற்றத்திற்கு அவர்கள் ஆற்றியப்
பங்களிப்புக்கும் நன்றிக் கூற விரும்புகிறேன்.
தேசிய ரீதியில் பிரமிக்கும் குடும்பத்தை மையமாகக் கொண்ட பசுமை மற்றும் விவேக மாநிலத்தை உருவாக்குதல் எனும் பினாங்கு2030 இலக்குக்கு ஏற்ப செபராங் பிறையை
‘மக்களை மையப்படுத்துதல்’ என்ற அணுகுமுறையுடன் ஒரு நிலையான மற்றும் விவேகமான நகரமாக மேம்படுத்த வேண்டும் என்றும் சாவ் வலியுறுத்தினார்.