எம்.பி.எஸ்.பி தெரு விலங்குகளின் இனப்பெருக்கத்தை குறைக்க கருத்தடை உதவித் தொகை திட்டம் அறிமுகம்

Admin
img 20240520 wa0006

 

செபராங் ஜெயா – செபராங் பிறை மாநகர் கழகம் (எம்.பி.எஸ்.பி) பெருநிலத்தில் தெரு விலங்குகளின் இனப்பெருக்கப் பிரச்சனைக்குத் தீர்வுக் காணும் வகையில் கருத்தடை உதவித் தொகை திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

எம்.பி.எஸ்.பி மேயர் டத்தோ அசார் அர்ஷாத் கூறுகையில், இத்திட்டம் மே,14 அன்று தொடங்கி இந்த ஆண்டு டிசம்பர்,31 வரை செயல்படுத்தப்படும்.

“இத்திட்டம் நாய்கள் மற்றும் பூனைகள் போன்ற செல்லப்பிராணிகளை குறி வைத்து விலங்குகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும், இது உடல்நலம் மற்றும் இப்பிராணிகளால் ஏற்படும் சிக்கல்களைக் குறைக்க உதவுகிறது.
“இந்த முன்முயற்சி திட்டம் பொறுப்பான செல்லப்பிராணி உரிமையை ஊக்குவிப்பதிலும், நாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தவும் துணைபுரியும்.
“இந்தக் கருத்தடை உதவித் தொகை திட்டத்தின் கீழ், செல்லப்பிராணி உரிமையாளர்கள் அல்லது அரசு சாரா இயக்கங்கள் தங்கள் செல்லப்பிராணிகளைப் பெருநிலத்தில் உள்ள நியமிக்கப்பட்ட தனியார் கால்நடை மருத்துவமனைகளுக்குக் கொண்டு வரலாம்.

இத்திட்டத்தின் கீழ் Klinik Veterinar Pet Wellness(வடக்கு செபராங் பிறை மாவட்டம்), Klinik Veterinar Venice(மத்திய செபராங் பிறை மாவட்டம்) மற்றும் Klinik Veterinar Introvet (தெற்கு செபராங் பிறை மாவட்டம்) ஆகிய தனியார் கிளினிக்குகள் இடம்பெறுகின்றன,” என்று எம்.பி.எஸ்.பி தலைமையகத்தில் நடைபெற்ற சந்திப்புக் கூட்டத்தில் அசார் இவ்வாறு கூறினார்.

அசார் கூற்றுப்படி, இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு நாய்க்கும் ரிம100 மற்றும் ஒவ்வொரு பூனைக்கும் ரிம50 என உதவித்தொகை வழங்கப்படும்.

இந்த உதவித் தொகை ரொக்கமாக வழங்கப்படாது, மாறாக சிகிச்சை பெறும் கால்நடை மருத்துவமனைகளில் கருத்தடை செலவிற்குப் பயன்படுத்தலாம்.

தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் பொது மக்கள் உட்பட இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு, தங்கள் செல்லப் பிராணிகளை அல்லது தெரு விலங்குகளைக் கருத்தடைச் செய்ய இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு வலியுறுத்தினார்.

மேல் விபரங்களுக்கு, எம்.பி.எஸ்.பி கால்நடை மருத்துவப் பிரிவை 04-5402566 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும் அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியை அணுகலாம்.