செபராங் பிறை மாநகர் கழகம் (எம்.பி.எஸ்.பி) பெருநிலத்தில் வாழும் பொது மக்கள் நேரடியாக கவுண்டர்களுக்குச் செல்லாமல் அவர்களின் கடை வாடகை, வரி மதிப்பீடு மற்றும் வாகனம் நிறுத்தும் சம்மன்களுக்கு பணம் செலுத்துவதற்காக மாற்று வழிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
எம்.பி.எஸ்.பி மேயர் டத்தோ ரோசாலி மொஹமட் கூறுகையில், ஸ்மார்ட் திட்டமானது ‘ஸ்கேன், வாகனம் நிறுத்துதல் மற்றும் பணம் செலுத்துதல்’ (Scan, Park and Pay)
என்ற எளிய முறையை சித்தரிக்கிறது.
இத்திட்டத்தின் மூலம் எம்.பி.எஸ்.பி வளாகத்தில் கட்டணம் செலுத்த கூட்டம் அதிகமாக இருப்பதைத் தடுப்பதோடு, கோவிட் -19 பரவுவதையும் கட்டுப்படுத்த ஏதுவாக மனித நடமாட்டத்தைக் குறைக்கும் நோக்கத்தை அடைய முடியும், என்றார்.
எனவே, தற்போது பொது மக்கள் தங்கள் கட்டணங்கள் செலுத்த
நிறைய தேர்வுகள் உள்ளன. அதாவது
நேரடியாகவும் செல்லலாம் அல்லது
பணமில்லா பரிவர்த்தனையைத் தேர்வுச் செய்து, எளிதாகவும் வேகமாகவும் செலுத்தலாம்,” என எம்.பி.எஸ்.பி கட்டிடத்தில் நடைபெற்ற ஸ்மார்ட் திட்ட துவக்க விழாவின் போது ரோசாலி தனது உரையில் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் மாநில உள்ளூராட்சி, வீடமைப்பு, நகர்ப்புற மற்றும் கிராமப்புறத் திட்டமிடல் ஆட்சிக்குழு உறுப்பினர் ஜெக்டிப் சிங் டியோ கலந்து கொண்டார்.
ரோசாலி கருத்துப்படி, பொதுமக்கள் இந்த எளிய முறையில் ‘‘ஸ்கேன், வாகனம் நிறுத்துதல் மற்றும் பணம் செலுத்துதல்’ முறையைப் பயன்படுத்தலாம்.
“முதலாவதாக, அவர்கள் எம்.பி.எஸ்.பி தலைமையக கட்டிடத்தின் நுழைவாயிலில் அமைந்துள்ள ஒரு பாதுகாப்பு இடுகையில் கியூ.ஆர் குறியீட்டை ஸ்கேன் செய்ய வேண்டும்.
“QR குறியீட்டை ஸ்கேன் செய்த பிறகு, அச்செயலி ‘MBSP Pay’ அகப்பக்கத்திற்கு (https://mbsppay.mbsp.gov.my/) கொண்டு வரும், அங்கு காணப்படும் மூன்று வகையான கட்டணங்களுக்கு (கடை வாடகை, வரி மதிப்பீடு மற்றும் வாகனம் நிறுத்தும் சம்மன்) செலுத்தத் தேர்வுச் செய்யலாம்.
“பின்னர், அவர்கள் பணம் செலுத்துவதற்கு முன் அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
‘ஸ்கேன், வாகனம் நிறுத்துதல் மற்றும் பணம் செலுத்துதல்’ எனும் ஸ்மார்ட் திட்டத்தை பயன்படுத்துமாறு பொதுமக்களை ஊக்குவிக்கிறோம், ஏனெனில் மாநகர் கழகத்தில் இப்போது கூட்ட நெரிசலைத் தடுப்பதற்காக கட்டண கவுண்டர்களில் உள்ளவர்களின் எண்ணிக்கை குறைக்கப்படுகிறது. கவுண்டர்களில் கூட்டம் அதிகமாக கூடினால், பின்னர் யாரையும் நுழைய அனுமதிக்க மாட்டோம்.
“எனவே, கவுண்டர்களுக்கு வருவதை விட எம்.பி.எஸ்.பி சைபர் கவுண்டர்கள் மற்றும் ஈ-வாலட் பயன்பாட்டை பயன்படுத்த பொதுமக்களை ஊக்குவிக்கிறோம்,” என்று அவர் விளக்கினார்.
கோவிட் -19 தொற்றுநோயால் தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டு ஸ்மார்ட் முயற்சியின் மூலம் செபராங் பிறை மக்களை பணமில்லாமல் பரிவர்த்தனை செய்ய ஊக்குவிப்பதை ஜெக்டிப் பாராட்டினார்.
“இந்த நடவடிக்கை, பினாங்கு2030 கொள்கையை நனவாக்கும் முயற்சியை மையமாக கொண்டுள்ளது.
“எனவே, செபராங் பிறை குடியிருப்பாளர்கள் எம்.பி.எஸ்.பி கவுண்டர்களுக்கு நேரடியாக வராமல் பணமில்லா பரிவர்த்தனையைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் இந்த முயற்சியை ஆதரிப்பார்கள் என்று நம்புகிறேன், ”என்றார்.
ஜெக்டிப்பின் கூற்றுப்படி, தற்போது 73 ஸ்மார்ட் முயற்சிகள் பினாங்கில் பதிவு செய்யப்பட்டுள்ளன, 33 முயற்சிகள் செயல்படுத்தப்பட்டுள்ளன; 26 முயற்சிகள் செயல்படுத்தப்படுகின்றன; மேலும் 14 முயற்சிகள் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளன.
“செபராங் பிறையில், எம்.பி.எஸ்.பி 28 ஸ்மார்ட் திட்டங்களில் மொத்தம் 7 ஸ்மார்ட் முயற்சிகளை செயல்படுத்தப்பட்டன; 17 முயற்சிகள் செயல்படுத்தப்படுகின்றன, மீதமுள்ள நான்கு முயற்சிகள் திட்டமிடல் கட்டங்களில் உள்ளன, “என்று அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில், கோவிட் -19 தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் அவர்கள் மேற்கொண்ட கடின உழைப்பைப் பாராட்டும் விதமாக ஜெக்டிப் 1,000 பரிசுக்கூடைகளை எம்.பி.எஸ்.பி-யின் ‘ஆரஞ்சு வீரர்களுக்கு’ வழங்கினார்.