எம்.பி.எஸ்.பி பொது மக்களை டிஜிட்டல் முறையில் கட்டணங்கள் செலுத்த ஊக்குவிக்கிறது – ரோசாலி

புக்கிட் மெர்தாஜாம்-செபராங் பிறை மாநகர் கழகம் (எம்.பி.எஸ்.பி) e-wallet Boost@MBSP எனும் செயலியின் வாயிலாக மதிப்பீட்டு வரி, பொது வாடகை மற்றும் வாகன நிறுத்தும் அபராதம் என 3 வகையான கட்டணங்களை உள்ளடக்கிய மலேசியாவின் முதல் ஒருங்கிணைந்த இ- வாலட்
முறையை அறிமுகப்படுத்தியது.

பினாங்கு உள்ளூராட்சி, வீட்டுவசதி, நகரம் மற்றும் கிராம திட்டமிடல் குழுவின் ஆட்சிக்குழு உறுப்பினர் ஜெக்டிப் சிங் டியோ இத்திட்டத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.

“எம்.பி.எஸ்.பி பல டிஜிட்டல் உருமாற்றத் திட்டங்கள் அறிமுகம் செய்தாலும் அதன் பயன்பாடு குறித்த விழிப்புணர்வை பொது மக்களிடையே ஏற்படுத்த எம்.பி.எஸ்.பி உறுப்பினர்கள் பல ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்,” என ஜெக்டிப் வலியுறுத்தினார்.

“இத்திட்டத்தின் மூலம் செபராங் பிறை பொது மக்கள் நீண்ட வரிசையைத் தவிர்த்து பணமில்லா பரிவர்த்தனையான e-wallet Boost@MBSP பயன்படுத்தி எளிமையாகவும் பாதுகாப்பாகவும் கட்டணம் செலுத்தலாம்,” என எம்.பி.எஸ்.பி தலைவர் டத்தோ பண்டார் டத்தோ ஹாஜி ரோசாலி தெரிவித்தார்.

‘MPSPPay’ எனும் சைபர் சாவடி கட்டணம் செலுத்தும் முறைமை பொது மக்கள் மதிப்பீட்டு வரி, வாடகை, வாகன நிறுத்தும் அபராதம் மற்றும் விதிக்கப்பட்ட அபராதங்கள் என ஒரே பரிவர்த்தனையில் செலுத்த முடியும். இந்த MPSPPay நேரத்தை சேமிப்பதோடு இந்தப் பணமில்லா பரிவர்த்தனையை எங்கு அல்லது எப்பொழுது வேண்டுமானலும் செலுத்த முடியும், என ரோசாலி விளக்கமளித்தார்.

எனவே, பொது மக்கள் நடைமுறையில் இயங்கும் சைபர் கண்டண சாவடிகள் அல்லது இ-வாலட் மூலமாகவோ பணமில்லா பரிவர்த்தனை செய்ய அவர்களுக்கு இப்போது அதிக தேர்வுகள் உள்ளன. இரண்டும் வேகமாகவும் இலகுவாகவும் செயல்படும், என்றார்.

டிஜிட்டல் உருமாற்றுத் திட்டத்தின் மூலம் எம்.பி.எஸ்.பி பணமில்லா பரிவர்த்தனை
கோவிட்-19 தொற்று நோயை சங்கிலியை உடைப்பதற்கும், பொது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் துணைபுரிகிறது.

“மேலும், எம்.பி.எஸ்.பி- யின் பணமில்லா பரிவர்த்தனை அமலாக்கம் 2019-ஆம் ஆண்டில் 61.75 விழுக்காட்டில் இருந்து 2020 (அக்டோபர், 5 வரை) 71.43 விழுக்காடாக அதிகரித்துள்ளது.

 
“இந்த செயலியைப் பயன்படுத்துவதன் மூலம் பொது மக்கள் அடிக்கடி பயன்படுத்தப்படும் கட்டண விவரங்களுக்கானப் பதிவையும் வைத்திருக்க முடியும். எனவே, ஒவ்வொரு முறையும் பணம் செலுத்துவதற்கு முன் கட்டண விவரங்களை மீண்டும் பதிவுசெய்யாமல் கட்டணத்தை எளிதாக செலுத்த முடியும் . இது நேரத்தையும் சேமிக்க உதவுகிறது,” என்று ஜெக்டிப் கூறினார்.

எம்.பி.எஸ்.பி கட்டணங்கள் செலுத்த Boost பயன்பாட்டை எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றிய கூடுதல் விவரங்களை அறிய, பொதுமக்கள் மாநகர் கழக அதிகாரப்பூர்வ வலைத்தளத்தை https://www.mbsp.gov.my/ அணுகலாம்.

முன்னதாக பல மாநிலங்களில் நிர்ணயிக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை (சி.எம்.சி.ஓ) முடிவுக்கு கொண்டுவருவதற்கான மத்திய அரசின் முடிவை பினாங்கு அரசாங்கம் கவனத்தில் கொண்டது. இருப்பினும், பினாங்கு மாநிலம் அவசரப்படவில்லை, மேலும் இந்த தொற்று நோயை கட்டுப்படுத்த சுகாதார அமைச்சினால் பரிந்துரைக்கப்படும் எந்தவொரு வழிமுறைகளையும் பின்பற்றும், என்றார்.

பினாங்கில் தற்போது இருக்கும் கோவிட்-19 தொற்று நோயிக்கான 11 கிளாஸ்டர்களும் கட்டுப்பாட்டில் இருப்பதால் சி.எம்.சி.ஓ-வை சீக்கிரமாக நிறைவுச்செய்த கேட்க முடியும் எனவும் கூறினார்.

மத்திய அரசு தொற்று நோய் பரவாமல் தடுக்க நேற்று (20/11/2020) அறிவுறுத்தியபடி இம்மாநிலத்தில் 130,000 வெளிநாட்டு தொழிலாளர்கள் மீது கோவிட் -19 திரையிடல் நடத்த மாநில அரசு தயாராக உள்ளது என்றும் மேலும் தெரிவித்தார்.