எம்.பி.எஸ்.பி மாநகர் அந்தஸ்து பெற்ற நான்கு ஆண்டுகளில் பல சாதனைகள் பதிவு

Admin

செபராங் ஜெயா – கடந்த 16 செப்டம்பர் 2019 அன்று மாநகர் அந்தஸ்தை பெற்ற நான்கு ஆண்டுகளில் செபராங் பிறை மாநகர் கழகம் (எம்.பி.எஸ்.பி) பல வெற்றிகளைப் பெற்றுள்ளது.

எம்.பி.எஸ்.பி மேயர், டத்தோ அசார் அர்ஷாட், எம்.பி.எஸ்.பி அடைந்த வெற்றிகள் அனைத்தும் எளிதில் கிடைத்துவிடவில்லை, மாறாக அது அனைத்துத் தரப்பினரின் உறுதி, பங்களிப்பு மற்றும் தியாகத்தால் வந்தது, என்றார்.

“நேரம் காலம் பாராமல் பணிப்புரியும் ஆரஞ்சு வீரர் உட்பட அனைத்து எம்.பி.எஸ்.பி ஊழியர்களின்
அர்ப்பணிப்பையும் நேர்மையையும் மிகவும் பாராட்டுகிறேன்.

செபராங் பிறை மக்களுக்கு சிறந்த சேவையை வழங்க எம்.பி.எஸ்.பி பல சவால்களை எதிர்கொண்டுள்ளது.

“பொது மக்கள் எம்.பி.எஸ்.பி திறமை, செயல்திறன் மற்றும் ஆக்கப்பூர்வமான சேவைகள் வழங்க வேண்டும் என உத்தேசிப்பதோடு மிகுந்த சவாலாகவும் இருக்கிறது,” செபராங் பிறை மாநகர் வளாகத்தில் நடைபெற்ற செபராங் பிறை மாநகர் நான்காம் ஆண்டு விழாவில் பேசுகையில் இவ்வாறு கூறினார்.

எம்.பி.எஸ்.பி அடைந்த வெற்றிகளில், மலேசியாவில் உள்ள மற்ற ஐந்து மாநகரங்களுடன் சேர்ந்து உலகளாவிய பருவநிலை மாற்றம் தழுவல் பிரச்சனையில் அதன் அர்ப்பணிப்புக்காக ‘Mitigation and Adaptation Badge 2022’ விருதும் பெற்றது என்று அசார் கூறினார்.

ஊராட்சி பிரிவு மற்றும்  Payment Network Malaysia Sdn. Bhd ஏற்பாட்டில் நடைபெற்ற பினாங்கு மாநில அரசுத் துறைகள் மற்றும் ஏஜென்சிகளுக்கான ரொக்கமற்ற பரிவர்த்தனை பிரச்சாரத்தில் (A பிரிவில்) எம்.பி.எஸ்.பி முதலிடம் பெற்றது.

எம்.பி.எஸ்.பி 2022-ஆம் ஆண்டுக்கான ஊராட்சி மன்ற 5-நட்சத்திர மதிப்பீட்டை தொடர்ந்து தக்க வைத்து கொண்டது என்றும் அசார் மேலும் கூறினார்.

எனவே, திட்டமிட்ட பொறுப்புகள் மற்றும் தற்போதைய திட்டங்கள் அனைத்தும் விரைவாகவும், வெளிப்படைத்தன்மையுடனும், திறமையாகவும் தீர்க்கப்படுவதற்கு அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார்.

“எம்.பி.எஸ்.பி செயல்படுத்தப்பட்ட அனைத்து முயற்சிகளும் பினாங்கு2030 இலக்கு ஏற்ப இருப்பதை எப்போதும் உறுதி செய்யும்.

“எனவே, இந்த நகரத்தை வாழ வசதியாகவும், வேலை செய்யவும், முதலீட்டு ஈர்ப்பாகவும், விவேக மற்றும் குறைந்த கார்பன் நகரமாகவும் மாற்றவும், “எதிர்கால செபராங் பிறை உருமாற்றம்” என்ற இலக்கை அடையவும் ஒன்றிணைவோம்,” என்று அவர் உற்சாகப்படுத்தினார்.

எம்.பி.எஸ்.பி இன் 4வது ஆண்டு விழாவை முன்னிட்டு போட்டிகள் மற்றும் விளையாட்டுகள், எம்.பி.எஸ்.பி அபராத கட்டண கழிவு; மர விற்பனை, உணவுக் கடைகள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இந்தக் கொண்டாட்டத்தின் சிறப்பு அம்சமாக, குடியிருப்பாளர்களுக்கு போரியா, பாரம்பரிய நடனம் மற்றும் நாட்டின் பிரபல கலைஞர்களின் நிகழ்ச்சிகள் மற்றும் வாணவேடிக்கை போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.