செபராங் ஜெயா – செபராங் பிறை மாநகர் கழகம் (எம்.பி.எஸ்.பி) ஊராட்சி கழகத்தின் (பி.பி.தி) அமலாக்கக் குழுவினர் சார்ந்த 11 செயல்திட்டங்கள் நடைமுறைப்படுத்த உத்தேசித்துள்ளது.
எம்.பி.எஸ்.பி மேயர் டத்தோ ரோசாலி மொஹமட் கூறுகையில், செயல்திட்டங்கள் செயல்படுத்துவதன் மூலம்
அமலாக்கக் குழுவினர் மன வலிமையை வலுப்படுத்துவதோடு எதிர்காலத்தில் கடந்து செல்லும் சவால்மிக்க தருணங்களை எதிர்நோக்கவும் துணைபுரியும், என்றார்.
தற்போது எம்.பி.எஸ்.பி அமலாக்கப் பிரிவு, கருவூலத் துறை, பாதுகாப்பு & சமூகப் பிரிவு மற்றும் உரிமம் வழங்கும் துறை ஆகியவற்றை உள்ளடக்கிய மொத்தம் 235 அதிகாரிகளைக் கொண்டுள்ளது.
“இக்கழகம் செயல்படுத்தப்பட்ட திட்டங்களில், அமலாக்க ஆணையர், அதாவது மேயரின் கீழ் அமலாக்கத் துறைகளை ஒருங்கிணைப்பதும் இதில் அடங்கும்.
“அதுமட்டுமல்லாமல் எம்.பி.எஸ்.பி, செபராங் பிறை முழுவதும் இருக்கும் இக்கழகத்தின் சொத்துக்களை கண்காணிக்கும் பணிகள் மற்றும் வார நாட்கள், உச்ச நேரங்களில் பண சேகரிப்பை கண்காணிக்கும் செயல்பாடுகளும் அதிகரிக்கப்படும்.
“எம்.பி.எஸ்.பி குறிப்பாக செபராங் பிறையில் உள்ள முக்கியப் பகுதிகளில் போக்குவரத்து பணியாளர்கள் அங்கு இருப்பதை உறுதிசெய்யும். இதன் மூலம், அவர்கள் பொது மக்களுக்கு போக்குவரத்து நிலவரத்தை அறிவிக்கவும் கட்டுப்படுத்தவும் முடியும்,” என்று ரோசாலி எம்.பி.எஸ்.பி சீருடை இயக்கத் தினக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் பேசும்போது இவ்வாறு கூறினார்.
மேலும், எம்.பி.எஸ்.பி கவுன்சிலர்கள்; அதன் நடப்பு நகரச் செயலாளர்; பத்ருல் அமீன் அப்துல் ஹமீத் மற்றும் துறைத் தலைவர்கள் மற்றும் இக்கழக மூத்த அதிகாரிகள் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
எம்.பி.எஸ்.பி, காவல்துறையுடன் (PDRM) இணைந்து சாலைத் தடுப்புகள் அமைத்து, சட்டவிரோதமாக குப்பை வீசுவதை ஒழிப்பதற்கான நடவடிக்கையாக, குப்பைகளை எடுத்து செல்லும் வாகனங்களில் குப்பைகள் அகற்றும் அனுமதியைப் பெற்றிருப்பதை உறுதிசெய்யும் என்று ரோசாலி மேலும் கூறினார்.
“எம்.பி.எஸ்.பி தனது ரோந்து பணிளை அதிகரிக்கும், தொழில்துறை மண்டலம் (FIZ) பகுதியில் பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்படும் மற்றும் அமலாக்க அதிகாரிகளுக்கான கல்வித் திட்டங்களும் வழிநடத்தப்படும்.
“இந்த நாட்டில் தற்போதுள்ள அமலாக்க அடையாளத்தை வேறுபடுத்துவதற்காக எம்.பி.எஸ்.பி அமலாக்கப் பிரிவில் ஒரே மாதிரியான வர்ணம் கொண்ட புதிய சீருடையை நாங்கள் முன்னிலைப்படுத்த விரும்புகிறோம்,” என்று அவர் மேலும் கூறினார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர், 300 காவல்துறை உதவி அதிகாரிகளை சேர்ப்பதற்கான எம்.பி.எஸ்.பி-யின் விண்ணப்பத்திற்கு பினாங்கு காவல்துறை தலைமையகம் (IPK) அங்கீகரித்துள்ளது என்று தெரிவித்தார்.
“இந்த நடவடிக்கை முதலீட்டாளர்கள் மற்றும் செபராங் பிறை குடியிருப்பாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய காவல்துறையினருக்கு உறுதுணையாக அமையும்.
“எதிர்காலத்தில், எம்.பி.எஸ்.பி அமலாக்க அதிகாரிகளுக்கு வழக்குகளை நீதிமன்றத்திற்கு கொண்டு வருவதற்கான அதிகாரத்தை வழங்க பரிசீலித்து வருகிறது,” என்று அவர் மேலும் விளக்கமளித்தார்.
எனவே, இந்த ஆண்டு முதன்முறையாக நடத்தப்படும் சீருடை இயக்கத் தினக் கொண்டாட்டம், சீருடை அணியும் அதிகாரிகளின் பங்கையும் பங்களிப்பையும் எம்.பி.எஸ்.பி அங்கீகரிப்பதன் அடையாளமாக வருடாந்திர நிகழ்ச்சியாக இது இருக்கும் என்று ரோசாலி நம்பிக்கைத் தெரிவித்தார்.
அவ்விழாவில், அமலாக்கப்பணியில் சிறந்த செயல்திறன் மற்றும் சேவையை ஆற்றிய அமலாக்க அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு பாராட்டு விருதுகளையும் ரோசாலி வழங்கி கெளரவித்தார்.