மாநில அரசு பினாங்கு வாழ் மக்கள் சொந்தமாக வீடு வாங்க உதவும் பொருட்டு எஸ்பி செல்லையா சாலைவில் மலிவு விலை வீடமைப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது அனைவரும் அறிந்ததே. மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் பினாங்கு மாநில மக்கள் கூட்டணி அரசு உறுதியளித்தது போல கடந்த 6 மார்ச் 2015-ஆம் நாள் ஜாலான் எஸ்பி செல்லையாவில் மலிவு விலை வீடமைப்புத் திட்டத்தின் அடிக்கல் நாட்டு விழாவை அதிகாரப்பூர்வமாகத் துவக்கி வைத்தார் மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங்.
மலிவு விலை வீடமைப்புத் திட்டம் சிறப்பாக நிறுவுவதற்கு பினாங்கு நகராண்மைக் கழகம் 11.04 ஏக்கர் நிலம் வழங்கியது குறிப்பிடத்தக்கதாகும்.. அதேவேளையில் பினாங்கு மேம்பாட்டுக் கழகம் இத்திட்டத்தின் வழிநடத்துனராகவும் சுபிகோன் சென். பெர்ஹாட் மேம்பாட்டு நிறுவனம் திறந்த குத்தகை முறையில் தேர்வாகி மேம்பாட்டாளராகவும் திகழ்கின்றனர்.
இத்திட்டத்தில் 11.04 ஏக்கர் நிலப்பரப்பில் 2,093 யூனிட் வீடுகள் கட்டப்படும்.. இத்திட்டம் நான்கு ஆண்டு காலக்கட்டத்தில் அதாவது 2019-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நிறைவடையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. . இந்த வீடமைப்புப் பகுதியில் 700 சதுர அடியில் 770யூனிட் வீடுகள் (ரிம72,500), 800 சதுர அடியில் 883யூனிட் வீடுகள் (ரிம200 000), 900 சதுர அடியில் 165 யூனிட் வீடுகள் (ரிம300 000), மற்றும் 1000 சதுர அடியில் 82 யூனிட் வீடுகள் (ரிம400 000) கட்டப்படும் என தனது சிறப்பு உரையில் கூறினார் மாநில முதல்வர் .
ரிம600 மில்லியன் பொருட்செலவில் கட்டவிருக்கும் இந்த வீடமைப்புப் பகுதியில் விளையாட்டுப் பூங்கா, மசூதி, மறுப்பயனீட்டு மையம், பாதசாரி மற்றும் மிதிவண்டி ஓட்டுனர்களுக்குத் தனிப்பாதை, ஆகிய பொது வசதிகள் செல்லையா நகர பூங்காவில் இடம்பெறும். எஸ்பி செல்லையா வீடமைப்பு திட்டத்தின் கூடுதல் வாகனம் நிறுத்துமிடம் கட்டுமானத்திற்காக ரிம29 கோடி செலவிடப்படவுள்ளது. பொதுமக்களுக்கு அனைத்து சேவைகளையும் கொண்ட மலிவு விலை வீடுகள் கட்டும் முயற்சியில் ஒவ்வொரு சிறப்பு அம்சங்கள் இடம்பெறுவதை மாநில அரசு உறுதிச்செய்யும்.
பினாங்கு மாநில அரசின் 12 மலிவு விலை வீடமைப்புத் திட்டங்களில் 22,545 வீடுகள் கட்டப்படவுள்ளன.. இதில் தீவுப் பகுதியில் தெலோக் கும்பார், ஜெலுந்தோங் பிந்தாசான் சேசில், மற்றும் சன்டிலேன்ட் பகுதியில் கட்டப்படவுள்ளன. அதேவேளையில், பெருநிலத்தில் பண்டார் காசியா, கம்போங் ஜாவா, அம்பாங் ஜாஜார், புக்கிட் மெர்தாஜாம், ஜுரு, மாக் மண்டின் மற்றும் ஹுஜோங் பத்து போன்ற இடங்களில் கட்டப்படவுள்ளன..
இந்நிகழ்வில் பினாங்கு மாநில முதலாம் துணை முதல்வர் டத்தோ ஶ்ரீ ரஷிட் பின் ஹஸ்னோன், இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி மற்றும் கிராமம், நகரம் மற்றும் வீடமைப்புத் திட்டமிடல் சேவைக் குழுவின் ஆட்சிக்குழு உறுப்பினர் மதிப்பிற்குரிய ஜெக்டிப் சிங் டியோ மற்றும் ஆட்சிக்குழு சட்டமன்ற உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தனர்.}