பாகான் டாலாம் – மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ் தனது இரண்டாம் தவனை பதவிக் காலத்தில் பினாங்கின் தொடர்ச்சியான வளர்ச்சியில் கவனம் செலுத்த உறுதிபூண்டுள்ளார், அதுவே அவரது கடைசி பதவிக்காலமும் ஆகும்.
அடுத்த மூன்று அல்லது நான்கு ஆண்டுகளில் கட்சிக்குள் ஒற்றுமையை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்துவேன் என்றும் சாவ் கூறினார்.
“எதிர்கால அரசியலை வழிநடத்துவதற்கான அடித்தளமாக ஒற்றுமையுடன் நாம் தொடர்ந்து முன்னேறுவோம். ஜனநாயக செயல் கட்சி (ஐ.செ.க) மக்களுக்கு ஆதரவான கட்சி,” என்றும் அவர் இன்று மாக் மண்டின் தமிழ்ப்பள்ளியில் நடைபெற்ற பினாங்கு மாநில அளவிலான ஐ.செ.க தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பில் கலந்து கொண்ட போது இவ்வாறு கூறினார்.
அதுமட்டுமின்றி, உலக அரசியல் மாற்றங்கள் பினாங்கின் பொருளாதாரச் சூழலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் சாவ் பகிர்ந்து கொண்டார்.
“அண்மையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்பின் வெற்றி மலேசியா உட்பட உலகளாவிய முதலீட்டு முறைகள் மற்றும் பினாங்கின் பொருளாதாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.
“ஏனெனில், அமெரிக்காவின் கொள்கைகள், அமெரிக்கா மற்றும் அதனுடன் இணைந்த நாடுகளின் நேரடி முதலீட்டின் சூழ்நிலையையும் பாதிக்கும். இது சீனாவையும் பாதிக்கும்.
“இந்தப் பெரிய நாடுகளின் எதிர்வினைகள் பினாங்கில் முதலீட்டு சூழலையும் தீர்மானிக்கும்,” என்று சாவ் கூறினார்.
இதற்கிடையில், பினாங்கு ஐ.செ.க தலைவரும் புக்கிட் மெர்தாஜாம் நாடாளுமன்ற உறுப்பினருமான ஸ்திவன் சிம், ஒற்றுமை மற்றும் பன்முகத்தன்மையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். இன வேறுபாடின்றி அனைவருக்கும் சமமாக சேவை வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
மலேசியாவின் பல்லின சமூகத்தின் வலிமையை அவர் எடுத்துரைத்தார், நாட்டின் ஒட்டுமொத்த வலிமைக்கும் கலாச்சார பன்முகத்தன்மை எவ்வாறு பங்களிக்கிறது என்பதையும் எடுத்துரைத்தார்.
“நாம் பன்முகத்தன்மையைத் தழுவி, கூட்டு முயற்சி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டிற்காக உழைக்க வேண்டும், நமது பலம் நமது வேறுபாடுகளில் உள்ளது என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்,” என்று மனிதவள அமைச்சருமான ஸ்திவன் தெரிவித்தார்.
“16 ஆண்டு காலம் ஐ.செ.க பினாங்கு மாநிலத்தை சிறப்பாக நிர்வகித்து நல்லிணக்கத்தைப் பேணி முன்னேற்றத்தை நோக்கி பயணிக்கிறது.
“கட்சியில் முன்னிறுத்தப்படும் நிலையான கொள்கை அக்கட்சியின் வளர்ச்சிக்கும் பொது மக்களுக்கும் சிறந்த சேவை ஆற்றவும் துணைபுரிகிறது,” என பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினருமான இந்நிகழ்ச்சியின் ஏற்பாட்டுக் குழுத் தலைவருமான குமரன் கூறினார்.
இந்நிகழ்ச்சியில், தேசிய ஐ.செ.க தலைவர், லிம் குவான் எங்; மனிதவள அமைச்சரும் பினாங்கு மாநில ஐ.செ.க தலைவருமான ஸ்திவன் சிம்; நிதித் துணை அமைச்சரும் மாநில ஐ.செ.க செயலாளருமான லிம் ஹுய் இங்; ஐ.செ.க துணைத் தலைவரும் புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினருமான ராம் கர்பால், செனட்டர் டாக்டர் லிங்கேஸ்வரன், மலேசிய பினாங்கு இந்தியர் வர்த்தக மற்றும் தொழிலியல் சங்கத் தலைவர் டத்தோ பார்த்திபன் மற்றும் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.