புக்கிட் தெங்கா – பினாங்கு மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் இயோவ் 15வது பொதுத் தேர்தலில் நம்பிக்கை கூட்டணி (PH) ஆட்சியை
பத்து காவான் நாடாளுமன்றத்தில் நிலைநிறுத்த ஐந்து முனை போட்டியை எதிர்கொள்கிறார்.
பினாங்கு ஐ.செ.க தலைவருமான சாவ் கொன் இயோவ், வாரிசன் கட்சியின் வேட்பாளரான ஓங் சின் வென்; தான் லீ ஹுவாட் (தேசிய முன்னணி); லீ ஆ லியாங் ( மலேசிய மக்கள் கட்சி, PRM) மற்றும் வோங் சியா ஜென் (தேசிய கூட்டணி) ஆகியோருடன் போட்டியிடக் களம் இறங்கியுள்ளார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 15வது பொதுத் தேர்தல் என்பது மலேசியாவின் சிறந்த எதிர்காலத்தை மீட்டெடுக்கவும், மீண்டும் கட்டமைக்கவும் மற்றும் உருவாக்கக் கூடிய ஒரு கூட்டரசு அரசாங்கத்திற்கு வாக்களிப்பதாகும் என்று விளக்கமளித்தார்.
“ஒரு புதிய மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்ற மலேசியர்களின் தீர்மானத்தைக் குறைத்து மதிப்பிட முடியாது, ஏனெனில், 2018 இல் BN ஆட்சி கூட்டரசு அரசாங்கத்திலிருந்து அகற்றப்பட்டதன் மூலம் இது நிரூபிக்கப்படுகிறது.
வாக்காளர்கள் ஜனநாயக ஆட்சி அமைக்க வழங்கிய அதிகாரத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றம் (Sheraton Move) மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியது. BN-PN ஆட்சியில் நாடும் மக்களும் பாதிக்கப்படுவதைக் காண முடிந்தது.
“BN மற்றும் PN கட்சிகளை மீண்டும் ஒருமுறை வாக்களிக்காமல் தங்கள் அரசியல் உறுதிப்பாட்டை மீண்டும் அர்ப்பணிக்குமாறு அனைத்து மலேசியர்களையும் கேட்டுக் கொள்கிறேன்.
இதற்கிடையில், போக்குவரத்து நெரிசல், திடீர் வெள்ளம், வீட்டுவசதி, தொழில்துறை சுற்றுச்சூழல் அமைப்பை மேம்படுத்துதல் மற்றும் பிற பிரச்சனைகள் உட்பட பத்து காவானில் குடியிருப்பாளர்கள் இடையே அடிக்கடி எழுப்பப்படும் பிரச்சனைகள் குறித்து கூடுதல் கவனம் செலுத்தவிருப்பதாக கொன் இயோவ் தெரிவித்தார்.
“பினாங்கின் எதிர்காலம் செபராங் பிறையில் உருமாற்றம் காண்கிறது.
“எனவே, எதிர்கால வளர்ச்சிக்கு செபராங் பிறை மற்றும் பத்து காவான் பகுதியில் சிறந்த உள்கட்டமைப்பை உருவாக்கும் வகையில் நீண்டகால திட்டங்களைத் திட்டமிடுவதோடு, குடியிருப்பாளர்களால் எழுப்பப்படும் பல பிரச்சனைகளைத் தீர்வுக் காண்பதிலும் சிறப்பு கவனம் செலுத்துவேன்,” என்று அவர் கூறினார்.
முன்னதாக, நூற்றுக்கணக்கான நம்பிக்கை கூட்டணி ஆதரவாளர்களுடன் காலை 7.45 மணிக்கு புக்கிட் மெர்தாஜாம், செபராங் பிறை தொழிற்கல்லூரிக்கு அருகிலுள்ள வேட்பாளர் பதிவு மையத்திற்கு சாவ் கொன் இயோவ் வருகையளித்தார்.
பின்னர், அவரை முன்மொழிந்த, டத்தோ டாக்டர் பென் லீ, 60, மற்றும் வழிமொழிந்த லியோங் சூன் யீ, 41 ஆகியோருடன் காலை 9.00 மணிக்கு வாக்காளர் பதிவு மண்டபத்திற்குள் நுழைந்தார்.
காலை 10.00 மணிக்கு முடிவடைந்த வேட்புமனு தாக்கல் எந்தவித கலவரம் மற்றும் அசம்பாவிதம் இன்றி சுமூகமாக நடைபெற்றது.
மலேசிய தேர்தல் ஆணையம் (SPR) முன்னதாக வேட்புமனுத் தாக்கல் செய்ய இன்று (நவம்பர் 5) அறிவித்த வேளையில், நவம்பர்,15 அன்று முன்கூட்டியே வாக்களிப்பதற்காக அறிவித்தது. அதே நேரத்தில் நவம்பர் 19 பொதுத் தேர்தல் வாக்களிக்கும் நாளாகும் அறிவித்தது.